FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேளீர் தமிழ் வரலாறு-3: தமிழ் வரலாற்றில் ஒரு புரட்சி!

'எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி' - இருவரில் ஒருவரான இருபத்து மூன்று அகவை மூத்தவரின் கூற்று இது.

சி.வை.தாமோதரம் பிள்ளை
பகிர்:

'எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி' - இருவரில் ஒருவரான இருபத்து மூன்று அகவை மூத்தவரின் கூற்று இது.

தாம் செய்த பணியின் அருமையை உணர வேறு ஒரே ஒருவர்தான் சாட்சி என்னும் நிலையிலான, பிறர் எவரும் இணையில்லாத அந்த இருவர் யார்? உலகின் நான்கைந்து செவ்வியல் மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி என்பதை உணர்த்தவல்ல சாட்சியங்களை முதன்முறையாக உலகின்முன் வெளிப்படுத்திய இருபெரும் சாட்சிகள்தான் இந்த இருவரும். ஒருவர் ஈழம் தந்த சி.வை. தாமோதரம் பிள்ளை. மற்றொருவர் தாய்த் தமிழகத்தில் உதித்த உ.வே. சாமிநாதய்யர்.

இந்த இருவரைப் பற்றியும் இன்று எழுதுகின்ற, பேசுகின்ற பலருக்கும் முன்னோடியாக 1913- ஆம் ஆண்டிலேயே மகாகவி பாரதியாரும் சி.வை.தா. குறித்து சென்னப்பட்டணத்தில் சி.வை. தாமோதரன் பிள்ளை என்று ஒரு மகாவித்துவான் இருந்தாரே கேள்விப்பட்டதுண்டா? என எழுதியிருக்கின்றார். உ.வே.சா. பற்றி 1906-ஆம் ஆண்டில் பழங்காலத்து நூல் பிரசுரிக்கும் விஷயத்திலே சாமிநாதய்யர் அவர்கள் பட்டிருக்கும் சிரமம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். மகாகவி பாரதியார் இருவரையுமே மகாவித்துவான் எனக் குறிப்பிட்டுப் போற்றியிருக்கின்றார். இவ்விருவரின் தொண்டும் மையம் கொண்ட தமிழ்க் களம் எது?

Advertisement

Advertisement

பழந்தமிழைத் தேடித் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்துத் தமிழர்களின் விழிதிறந்த தொன்மை இலக்கண, இலக்கியப் பதிப்புக் களம். ஆம். சி.வை.தா., உ.வே.சா. ஆகிய இருவரும் இருபெரும் பழந்தமிழ் மீட்பர்கள்! இருவரில் 23 அகவை மூத்தவர் சி.வை.தாமோதரனார். தமிழறிஞராகவும் தமிழ்நாட்டுத் தலைவர்களுள் குறிப்பிடத்தக்க தலைவராகவும் திகழ்ந்த திரு.வி.க. இந்த இருபெரும் பழந்தமிழ் மீட்பர்களின் இடத்தை அழகுற எடுத்துக்காட்டியுள்ளார்.

'பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரைவேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர்' என்பது திரு.வி.க.வின் மதிப்பீட்டுத் திருவாசகம்.

உ.வே. சாமிநாதய்யர்

திரு.வி.க.வின் மதிப்பீட்டில் மூவர் ஒளிவீசித் திகழ்ந்தாலும் முதலாமவராம் ஆறுமுக நாவலர் சி.வை.தா. பதிப்பித்து வெளியிடத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தைப் பரிசோதித்துத் தந்திருக்கிறார். எனினும், அவர் கவனம் முழுதும் நன்னூல், சைவ இலக்கியங்கள் என அழுத்தம் பெற்று விட்டது.

தமிழ் இலக்கிய வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பலர் எழுதியிருக்கின்றனர். அவர்களுள் செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபிலுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. அவர் 'தமிழ் இலக்கியம்' (டமில் லிட்டரேச்சர்) என்னும் பெயரில் 1975-இல் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்று நூலில், இந்திய அரசால் செம்மொழியாகத் தமிழ் அறிவிக்கப்படாத காலத்திலேயே, 'சிறந்த செவ்வியல் மொழி தமிழ்' எனும் தகுதிப்பாட்டைப் பெறும் வண்ணம் பழந்தமிழ் இலக்கிய வளத்தைக் கண்டுபிடித்து வெளிப்படுத்திய இருபெரும் காரணகர்த்தாக்கள் உ.வே.சா.வும் சி.வை.தா.வும்' என மதிப்பிட்டு எழுதியுள்ளார்.

சி.வை.தா., உ.வே.சா. இருவருக்குமே ஒரு பொதுவான தன்மை உண்டு. அது சைவ சமயப் பின்புலம். தமிழ்க் கல்வி மரபிலே சைவ சமயம் செல்வாக்குச் செலுத்திய காலம் இவ்விருவரும் வாழ்ந்த காலம்.

சைவ சமயம் சார்ந்தவர்களுக்குச் சைவ சமயம் அல்லாத நூல்களைப் பயில்வதற்கு (கம்பராமாயணம் கொஞ்சம் விதிவிலக்கு) மனத்தடையும் மனிதர் தடையும் உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான இலக்கண ஆசிரியர் சாமிநாத தேசிகர். அவர் தமது 'இலக்கணக் கொத்து' என்னும் நூலில் மதித்துப் போற்ற வேண்டிய நூல்களாக தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார், இறையனார் அகப்பொருள் முதலிய இலக்கணங்கள், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், பட்டினத்துப் பிள்ளையார் பாடல் முதலியவற்றைக் கூறியுள்ளார். இவற்றில் தொல்காப்பியமும் திருக்குறளும் இலக்கணங்களும் தவிரப் பிறவெல்லாம் சைவ நூல்களே!

பெருமைக்குரியவை அல்லாத நூல்களாகச் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேள் மாக்கதை ஆகியவற்றை முதலில் குறிப்பிட்ட அவர், மீண்டும், வாழ்நாளை வீணான நாள்களாக்கச் செய்யும் நூல்கள் எனப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார்.

சைவ மடங்களிலும் பெரிதும் இந்த எண்ணம்தான் அக்காலத்தில் நடைமுறையிலிருந்தது. ஆயினும், திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் உள்ளிட்ட சிலர் அரிய விதிவிலக்குகள்.

'இலக்கணக் கொத்து' நூலின் இந்தக் கருத்தை இருவருமே அறிந்திருந்தனர். தங்கள் நூல்களில் எடுத்துக் காட்டியுமிருக்கின்றனர். சைவ சமய ஈடுபாடு மிகக்கொண்ட ஈழத்துச் சி.வை.தா.தான் எட்டுத் தொகையில் ஒன்றான கலித்தொகையை முதன்முதலில் கண்டுபிடித்து அரும்பாடுபட்டு வெளியிட்டார். சமண சமயச் சார்பிலான சூளாமணியைப் பதிப்பித்து வெளியிட்டார். பௌத்த சமயத்தைச் சார்ந்த புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியத்தையும் கண்டுபிடித்து வெளியிட்டார்.

இயல்பாகவே தந்தைவழி வந்த சிவபக்தி, அழுத்தமான சைவ ஈடுபாடு கொண்ட ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சைவ மடமான திருவாவடுதுறை ஆதீன ஆதரவில் வளர்ந்த வாழ்க்கை என உருவான உ.வே.சாமிநாத ஐயர்தான், 'பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி' எனச் சைவர் பலராலும் தூற்றப்பட்ட சிந்தாமணி நூலைப் பெரும்பாடுபட்டு முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.

அதே உ.வே.சா. தான் பௌத்த சமயக் காப்பியமான மணிமேகலையைப் பதிப்பித்து வெளியிட்டார். சாமிநாத தேசிகரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட 'வாணாளை வீணாளாக்கும்' பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையில் புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், ஐங்குறுநூறு ஆகிய நான்கு நூல்களையும், சிலப்பதிகாரத்தையும், கொங்குவேள் மாக்கதையையும் முதன்முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். சாமிநாத தேசிகர் இகழ்ந்து வெறுத்துப் புறக்கணித்த இலக்கியங்களையெல்லாம் சாமிநாத ஐயர் பதிலடி கொடுப்பது போலப் பதிப்பித்து வெளியிட்டுத் தலைமுறை தலைமுறையாக அவற்றைப் படிக்கும் நிலையை உருவாக்கிவிட்டார்.

நினைவில் கொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சி. உ.வே. சாமிநாதய்யர் பதிப்பித்த சமணக் காப்பியமான சீவக சிந்தாமணியின் அச்சுப்பணி முடிந்து பிரதிகள் கும்பகோணத்திலிருந்த உ.வே.சா. வீட்டுக்கு வந்துசேர்ந்தன. சிவபக்தியில், பழைய ஆசாரங்களில் ஊறிப்போன உ.வே.சா. வீட்டில் என்ன நடந்தது தெரியுமா?

உ.வே.சா. சொற்களாலேயே அறிந்துகொள்வோம்.

'ஒரு வாரத்துக்கெல்லாம் சென்னையிலிருந்து பைண்டர் நூறு பிரதிகள் வரையில் பைண்டு செய்து ஒரு பெட்டியில் அனுப்பியிருந்தார். அதைப் பிரித்துப் புஸ்தகங்களை எடுத்துக் கோலம் போட்ட ஒரு பலகையின் மேல் வைத்து மாலை சாத்திக் கற்பூர நீராஞ்சனம் செய்து மஞ்சள் நீர் சுற்றி என் தாயார் என் கையில் எடுத்து அளித்து ஆசிர்வாதம் செய்தார். என் தந்தையார் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தார்' என்று கூறினார்.

உ.வே.சா.வின் குடும்பம் சிந்தாமணியைச் சமணம் என்று பார்க்கவில்லை; தமிழ் என்று பார்த்துக் கொண்டாடியிருக்கிறது. சமய எல்லைக் கோடுகளைக் கடந்து தமிழ் புதிய வாழ்வைத் தொடங்கியதற்கான வரவேற்பல்லவா இது! மாற்றுச் சமய நூல் என வெறுக்காமல் எல்லா இலக்கியங்களையும் விரும்பும் மனநிலையைத் தமிழ் மண்ணில் இந்த இருபெரும் பதிப்பு நாயகர்களும் தங்கள் ஒப்பற்ற பணிகளால் ஏற்படுத்திவிட்டனர். தத்தம் சமயம் என நின்றுவிடாமல் 'தமிழ்' என நம்மையெல்லாம் ஒன்றாக ஒன்றிவிடச் செய்தனர்.

பேராசிரியர் ய. மணிகண்டன்

சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் பழந்தமிழ் மீட்பர்களான இவர்கள் இருவரும் சமயம் கடந்து இப்படிச் செய்த பணி பெருஞ்சாதனை மட்டுமல்ல; பெருந்தொண்டு மட்டுமல்ல; தமிழின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு புரட்சி!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments