முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்!

வட  ஆற்காடு  மாவட்டம்  வேலூரைச்  சேர்ந்த திருப்பத்தூரில் 1912 -ஆம்  ஆண்டு பிறந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

மு.வரதராசன் ( 1912- 1974)

வட  ஆற்காடு  மாவட்டம்  வேலூரைச்  சேர்ந்த திருப்பத்தூரில் 1912-ஆம்  ஆண்டு பிறந்தார். அவருக்கு  முதலில் வைத்த பெயர்  திருவேங்கடம்,  தாத்தாவின் பெயரை வைக்க  வேண்டுமென தீர்மானித்து முனுசாமி முதலியார் வரதராசன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தாயின் பெயர் அம்மாகண்ணு அம்மாள். காஞ்சிபுரத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற மு.வ. புலவர் பட்டம் பெற்று சென்னை  பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்தார். பேராசிரியராகிய மு.வ. மதுரை பல்கலைக்கழக துணை வேந்தராகி பணி ஓய்வு பெற்றார். "திருக்குறள்' நூலுக்கு மு.வ. எளிய  உரை எழுதி  சைவ சித்தாந்த பதிப்பாக வெளிவந்த புத்தகம்  பல லட்சம்  பிரதிகளுக்கும்  மேலாக விற்று   சாதனை புரிந்துள்ளது.

வருங்காலத்தில்   உரைநடை என்பது  நவீன  இலக்கியத்திற்குத்தான்  என்பதை அறிந்து முனைப்புடன் சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிய பேராசிரியர் மு.வரதராசன் கவிதைகள்   எழுதியதே  இல்லை.  அத்துடன்  அவர் எழுதிய நாவல்கள்  எதுவும் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்ததும் கிடையாது. 1946-ஆம் ஆண்டு மு.வரதராசன் எழுதிய முதல் நாவல் "செந்தாமரை' அப்போது அவரது வயது 34. 13 நாவல்களையும், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதிய மு.வ.வின் புகழ்பெற்ற  நூல்  "கள்ளோ காவியமோ' . 1958-இல்   வெளிவந்த  "அகல்விளக்கு' 1961-ஆம் ஆண்டு  சாகித்ய அகாதெமி  விருது பெற்றது.  மு.வ. எழுதிய  "தமிழ் இலக்கிய வரலாறு'  புத்தகத்தை   சாகித்ய  அகாதெமி  வெளியிட்டது. இதுவரை 20 பதிப்புகளுக்கு மேல்  வெளியாகியுள்ளது. 1974-ஆம்  ஆண்டு  62 -ஆவது வயதில்   சென்னையில் காலமானார். 

கிருத்திகா (1915- 2009)

மதுரம் என்கிற  இயற்பெயரைக் கொண்ட  கிருத்திகா  1915 -ஆம் ஆண்டு மும்பையில்  பிறந்தார். கணவர்  சுப்ரமணியம்  பூதலிங்கம்.  ஐ.சி.எஸ். அதிகாரி. 1952 -ஆம் ஆண்டு   கிருத்திகாவின்  முதல் நாவலான  "புகை  நடுவில்' வெளிவந்தது.  அப்போது  அவரது வயது 37. அதிகார வர்க்கத்தின் ர்க்கத்தனம், குரூரம்  ஆகியவற்றை  பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் "புகை நடுவில்'  அவரது  மற்றொரு நாவலான  "வாசவேஸ்வரம்' மிகவும் பிரபலமானது. "சத்திய மேவ ஜெயதே', "கூண்டுக்கிளி' ஆகிய நாவல்களையும் கிருத்திகா எழுதியுள்ளார். கிருத்திகாவுடன் 22 ஆண்டு நட்புடைய  எழுத்தாளர் சிட்டி. அவருடைய  "மனதிலே ஒரு மரு'  நாடகத்தை இயக்கியுள்ளார்.

எம்.எஸ். சுவாமிநாதன் மனைவி மீனாவின் தாயார் இவர்.  2009 - ஆம்  ஆண்டு தனது 94-ஆவது  வயதில்   கிருத்திகா டெல்லியில் காலமானார். 

எம்.வி.வெங்கட்ராம் (1920 - 2000)

1920-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்த எம்.வி. வெங்கட்ராம் சௌராஷ்டிரா குடும்பத்தைச் சேர்ந்தவர். பொருளாதாரத்தில்  இளங்கலை பட்டத்தைப் பெற்றவர். கும்பகோணத்தில்  வாழ்ந்த கு.ப.ரா,  தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, திரிலோக சீதாராம் ஆகியோர்களின்  நட்பால் இலக்கியத்தில் ஈடுபாடு அதிகமாகி எழுத ஆரம்பித்தார். கல்லூரி நாட்களிலேயே "மணிக்கொடி'  பத்திரிகையில்   எழுதியுள்ளார். 1955 -ஆம் ஆண்டு  வெளிவந்த "நித்தியகன்னி'  அவருடைய  முதல் நாவல்,  அப்போது அவரது  வயது 35.  முதல் நாவலே அவருக்கு சிறந்த நாவலாசிரியர் என்ற பெயரைத் தந்தது. 7 நாவல்களும், 6 தொகுதிகளில் 200 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.  "வேள்வித் தீ' அவருடைய மற்றொரு பிரபலமான நாவல்.சிறிது காலம் 'தேனீ' பத்திரிகையை நடத்தினார்.  அவர்  சிறந்த  மொழி பெயர்ப்பாளர். 1993-ஆம் ஆண்டு  "காதுகள்' நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது  கிடைத்தது.  2000 -ஆம் ஆண்டு  80 வயதில்   மதுரையில்  காலமானார்.

லட்சுமி (1921 - 1987)

சிதம்பரம் அருகில்  அம்மாப்பேட்டையைச்  சேர்ந்த  தொட்டியத்தில்  1921-ஆம் ஆண்டு பிறந்த திரிபுர சுந்தரியின், தந்தை டாக்டர் சீனிவாசன். தாய் பட்டம்மாள். சென்னை ஸ்டான்லி  மருத்துவக்  கல்லூரியில்   மருத்துவப் பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும் போதே கைச் செலவிற்கு கதை எழுதி சம்பாதித்ததாக அவரே  கூறியுள்ளார். "தகுந்த தண்டனையா?'  என்ற  அவரது முதல்  சிறுகதை  1940-இல்  ஆனந்த விகடனில்  வெளிவந்தது.  அப்போது அவரது வயது 19.

லட்சுமி   எனும் புனைபெயரில்  1942-இல்  வெளிவந்த  "பவானி'  அவருடைய முதல் நாவல். அப்போது அவரது வயது 21. 1955-இல்  கண்ணபிரான் என்பவரை  மணந்து  தென் ஆப்ரிக்கா சென்றவர்.  22  ஆண்டுகள்   கழித்து 1977-இல் தமிழகம் திரும்பினார். பிரபல வெகுஜன பத்திரிகைகளில் சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதினார். பெண்களின் பிரச்னைகளையும், குடும்பச் சூழலையும்  எழுதி  பெண்  வாசகர்களின் அபிமான  எழுத்தாளரானார்.  "பெண்மனம்',  "மிதில விலாஸ்'  நாவல்கள்  தமிழ் வளர்ச்சிக் கழக  பரிசு பெற்றவை.

"குங்குமம்'  இதழில்  தொடராக  வெளிவந்த  "ஒரு காவிரியைப்  போல'  நூலுக்கு 1984-இல்  சாகித்ய அகாதெமி  விருது  கிடைத்தது.  "காஞ்சனையின் கனவு' நாவல்  "இருவர் உள்ளம்'  என்ற பெயரில்  திரைப்படமாக வெளிவந்தது. திரைக்கதை - வசனம்  கலைஞர் மு.கருணாநிதி. 1987-இல்  மறைந்த லட்சுமியின்  படைப்புகளை 2009-இல்   நாட்டுடைமையாக்க  தமிழக அரசு முன் வந்தபோது  அவரது  மகன் அதை  ஏற்கவில்லை. 

அநுத்தமா (1922- 2010)

வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலையைச் சேர்ந்த கேட்டவரம் பாளையம்,   ராஜேஸ்வரி என்கிற  அநுத்தமாவின்  சொந்த ஊர். 1922 -ஆம் ஆண்டு பிறந்தவர்.  14 வயதிலேயே  திருமணம்  நடந்தது.  கணவர்  பத்மநாபன். பள்ளியில்   சேர்ந்து முறையாகப்  படிக்காத  அநுத்தமா ஆர்வத்தினால்  தானே படித்து  1945-இல்  அவரது 23-ஆவது  வயதில்  பள்ளியிறுதி படிப்புக்கு தேர்வு எழுதி முதல்  மாணவியாக  தேர்ச்சிப் பெற்றார். "கல்கி'  சிறுகதைப் போட்டியில் "அங்கையர் கன்னி'  என்கிற  அவரது  முதல்  சிறுகதை இரண்டாம் பரிசைப் பெற்றது. 1947-இல்  எழுதிய  "ஒரே ஒரு வார்த்தை' அநுத்தமாவின்   முதல் நாவல், அப்போது  அவரது வயது 25.  22 நாவல்கள், 300 சிறுகதைகள் , 15 நாடகங்கள், பறவைகளைப் பற்றி சிறுவர்களுக்கென  4 தொகுதியில் எழுதியுள்ளார். எழுதிய  நாவல்களில்  அநுத்தமாவிற்குப் பிடித்தது  "நைந்த உள்ளம்' நாவல்தான்,  அவர் எழுதிய  "கேட்டவரம்'  நாவல் மிகவும் பிரபலமானது. அவரது சொந்த ஊரான கேட்டவரம்  பாளையத்தைச் சேர்ந்த சிலரின் வாழ்க்கையை பின் புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். அநுத்தமா பிரெஞ்சு,  ரஷ்ய, ஹிந்தி, சமஸ்கிருத  மொழிகள்   அறிந்தவர்.  2010-ஆம்  ஆண்டு  தனது  88-ஆவது வயதில்  காலமானார்.

தொ.மு.சிதம்பர ரகுநாதன் (1923-  2001) 

திருநெல்வேலியில்  1923 -ஆம்  ஆண்டு  பிறந்த  தொ.மு. சிதம்பர ரகுநாதனின் சகோதரர்   தொ.மு. பாஸ்கர தொண்டைமான். தொ.மு.சி. கம்யூனிஸ்ட் கட்சியின்  தீவிர  உறுப்பினர்.  சுதந்திரப்  போராட்டத்தில்  கலந்து  கொண்டு 1942-இல் சிறை சென்றார். 1945-இல் அவருடைய முதல் நாவல் "புயல்' வெளிவந்தது. அப்போது அவரது  வயது 22. 3 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுதிகள், 3 கவிதைத் தொகுதிகள், 2 நாடகங்கள், வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். கவிதைகளை திருச்சிற்றம்பல கவிராயர் என்கிற  பெயரில்  எழுதினார். 1944-இல்  சிறிது காலம்  தினமணியில்   உதவி ஆசிரியராக  இருந்துள்ளார். 1981-இல்   எழுதிய அவரது "பஞ்சும்  பசியும்'   நாவல் மிகவும்  பிரபலமானது.  அது  செக்  மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே வாரத்தில்  50 ஆயிரம் பிரதிகள் விற்று  சாதனை படைத்தது.  சோவியத் நாடு பதிப்பகத்தில் பணிபுரிந்த போது ஏராளமான மொழி பெயர்ப்புகளை செய்துள்ளார். மாக்சிம் கார்க்கியின் "தாய்' நாவலின் மொழிபெயர்ப்பு அற்புதமானது. "பாரதி காலமும்   கருத்தும்'   என்ற இலக்கிய  விமர்சன நூலுக்கு 1983-ஆம் ஆண்டு   சாகித்ய  அகாதெமி  விருது கிடைத்தது. சிதம்பர    ரகுநாதன் "சாந்தி'  என்கிற இலக்கியப் பத்திரிகையை (1954 -56)   நடத்தினார்.  அதில் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜ நாராயணன்,  ஜி. நாகராஜன், டேனியல் செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களது ஆரம்பகால படைப்புகளை வெளியிட்டவர் சிதம்பர ரகுநாதன். எழுத்தாளர் புதுமைப்பித்தன் இறந்ததும் அவரது சிறுகதைகளைத் தேடியெடுத்து தொகுத்து வெளியிட்டதோடு புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும்  எழுதினார். சிதம்பர ரகுநாதன்  தன்னை  புதுமைப் பித்தனின் சீடர் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டவர். 2001-ஆம் ஆண்டு 78-ஆவது வயதில் பாளையம்கோட்டையில்  இறந்தார்.

நா. பார்த்தசாரதி (1932-  1987)

நா.பார்த்தசாரதி  ராமநாதபுரம்  மாவட்டம்  நதிக்குடியில்  1932 -ஆம் ஆண்டு பிறந்தவர்.  தமிழாசிரியராக  வாழ்க்கையைத் தொடங்கிய நா.பா.  மதுரையில் பாரதியார் தமிழ் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலேயே தமிழாசிரியராக சில காலம் பணியாற்றினார். "கல்கி',  "தினமணி கதிர்' ஆகிய பத்திரிகையில்  உதவி ஆசிரியராக  பணிபுரிந்த  நா.பா.  "தீபம்'  எனும் இலக்கிய  மாத இதழைத் தொடங்கினார்.  வெகுஜன  பத்திரிகைகளில்  எழுதி பிரபலமானவர்  நா.பா.  நல்ல  பேச்சாளரும் கூட.  மகாபாரதத்தை ஆதாரமாகக் கொண்டு "அறத்தின் குரல்' எனும் தனது முதல் நாவலை 1964-ஆம் ஆண்டு எழுதினார். அப்போது  அவரது வயது 32.  பல சமூக - சரித்திர  நாவல்களை எழுதியுள்ளார்.  அவற்றுள்  "குறிஞ்சி மலர்', "பொன்விலங்கு',  "மணி பல்லவம்', "பாண்டிமா தேவி' பிரபலமானவை.  நா.பா.விற்கு  தீரன், அரவிந்தன், மணிவண்ணன் முதலிய  பல புனை பெயர்கள் உண்டு.  1971- ஆம் ஆண்டு நா.பார்த்தசாரதியின்  "சமுதாய வீதி'  நாவலுக்கு  சாகித்ய அகாதெமி  விருது கிடைத்தது.

சுஜாதா (1935 -  2008)

சென்னை திருவல்லிக்கேணியில்  1935-ஆம் ஆண்டு பிறந்த  எஸ்.  ரங்கராஜன் வளர்ந்தது திருச்சியை அடுத்த  ஸ்ரீரங்கத்தில் . திருச்சி  புனித ஜோசப்  கல்லூரியில் படித்தபோது  ரங்கராஜனும்,  அப்துல்  கலாமும்  (முன்னாள் இந்திய ஜனாதிபதி) கல்லூரி நண்பர்கள்.  பிறகு  சென்னை குரோம்பேட்டையில் உள்ள  எம்.ஐ.டியில்   படித்து முடித்து  மத்திய அரசு நிறுவனத்தில்  பெங்களுரு,  டெல்லி ஆகிய  ஊர்களில்  பணி  புரிந்தார். தற்போது   இந்திய  பொதுத் தேர்தல்களில்  பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் இயந்திர  ஓட்டுப் பெட்டியை  வடிவமைத்த பெருமைக்குரியவர். எஸ்.ரங்கராஜன், மத்திய அரசின்  விருதையும் பெற்றுள்ளார்.  மனைவியின் பெயரான  "சுஜாதா'வை  புனைப்பெயராகக்  கொண்டு   எழுத ஆரம்பித்தார். முதல் சிறுகதை 1962-இல்   "குமுதம்'  இதழில் வெளியானது. 1968-ஆம் ஆண்டு   வெளியான  "நைலான்  கயிறு'  சுஜாதாவின்  முதல்  நாவல்.  அப்போது  அவரது வயது 33.  பிரபல  பத்திரிகைகள்  எல்லாவற்றிலும் எழுதி  இளைஞர்களின் மனம்  கவர்ந்த  எழுத்தாளரானார்.  அவரது  எழுத்தில்   துடிப்பான  நடை,  நவீன வார்த்தைகள்,  வர்ணனைகள்  புதிதாக  இருந்ததால்  பல இளம்  எழுத்தாளர்கள் அவரைப் பின் பற்றி  எழுதினார்கள். 100 நாவல்கள்,  250 சிறுகதைகள், 10 நாடகங்கள்,  கவிதைகள், கட்டுரைகள்,   திரைக்கதை - வசனம்  என  ஏராளமாக எழுதியுள்ளார்.  "பிரிவோம்  சந்திப்போம்' , "கொலையுதிர் காலம்' , "கரையெல்லாம் செண்பகப் பூ' ஆகியவை  மிகப் பிரபலமான நாவல்கள். "இந்தியன்',  "அந்நியன்', "விக்ரம்',  "சிவாஜி',  போன்ற  வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை-  வசனம்  எழுதியுள்ளார்.  சுஜாதாவின் நாவல்கள்   "காயத்ரி', "பிரியா',  "கரையெல்லாம் செண்பகப் பூ'  திரைப்படங்களாக வந்துள்ளன. "குமுதம்'  இதழில் ஆசிரியராகவும்  சில  காலம்  பணியாற்றியுள்ளார்.   "கலைமாமணி'  விருது பெற்றவர்.  2008-ஆம்  ஆண்டு  73 வயதில்  சென்னையில் காலமானார்.  

பாலகுமாரன்  (1946 - 2018)

தஞ்சை  மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியைச் சேர்ந்த  பழமநேரியில்  1946-ஆம் ஆண்டு  பிறந்தவர்.  சென்னை  TAFE டிராக்டர்  நிறுவனத்தில் ஸ்டெனோவாக இருந்த வேலையை  உதறித் தள்ளிவிட்டு எழுதத் தொடங்கினார்.  முதல் சிறுகதை   "கசடதபற'  வல்லின சிற்றேட்டில் வெளிவந்தது.  யோகி ராம் சூரத் குமாரின்  சீடராக இருந்தார்.  பாலகுமாரன் 1981-ஆம் ஆண்டு "சாவி'   இதழில் "மெர்க்குரிப் பூக்கள்'   நாவலை  தொடராக   எழுதினார்.  அதுவே அவரது முதல் நாவல்.  அப்போது  அவரது வயது 35. அந்நாவல்  இலக்கியச் சிந்தனையின் பரிசையும்  பெற்றது.  பாலகுமாரன் பிரபல  தமிழ்ப்  பத்திரிகைகளில் எழுதி வாசகர்களின்  அபிமான எழுத்தாளராக  வளர்ந்தவர். புதுக்கவிதைகளையும்,   200  நாவல்களையும், 100   சிறுகதைகளையும், 23  தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.  "நாயகன்',  "குணா',  "பாட்சா'  திரைப்படங்கள் புகழ் பெற்றவை. பாலகுமாரனின்  படைப்புகளில்  ராஜராஜ சோழனைப் பற்றிய சரித்திர நாவலான  உடையார்  மிகப் பெரியதும்,  அதிகப் பக்கங்களைக் கொண்டதுமாகும்.  6 பாகங்களாக சுமார்  3000  பக்கங்களைக் கொண்டது. "கலைமாமணி'  முதலிய  பல விருதுகளைப் பெற்றவர். 

- அடுத்த இதழில்..

முழு கட்டுரையைப் படிக்க →