என்றும் இருப்பவர்கள்! 13
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள சிறுகதைகளில் மிகச்சிறந்த, தலைசிறந்த சிறுகதைகளை எழுதியவர் என்று மெளனியைத்தான் சொல்வேன். அவரை விட அதிகமாக எழுதியவர்கள் உண்டு.
மெளனி
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள சிறுகதைகளில் மிகச்சிறந்த, தலைசிறந்த சிறுகதைகளை எழுதியவர் என்று மெளனியைத்தான் சொல்வேன். அவரை விட அதிகமாக எழுதியவர்கள் உண்டு. அவரைவிட அதிகமாகப் பாராட்டுப் பெற்றவர்கள் உண்டு. அதிகமாக ஜனரஞ்சகமாக எழுதியவர்கள் இருக்கலாம். ஆனால் மெளனியின் கதைகள் தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனிப்பெரும் சிகரம்- அதைவிட உயரமான சிகரம் என்று சொல்ல வேறு யாருடையதும் இப்போது இல்லை.
-க.நா.சுப்பிரமண்யம், ஜனவரி 1962
ஓர் அசலான எழுத்தாளன் முந்நூறு, நானூறு சிறுகதைகள், இருபத்தைந்து நாவல்கள், ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்கள் வரும்படியான கட்டுரைகள் எழுதி இருக்க வேண்டுமா? கவிஞர் என்றால் நூறு, நூற்று ஐம்பது கவிதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்க வேண்டுமா?
எழுதினால் நல்லது தான். அதிகமாகவே ஒவ்வொரு எழுத்தாளரும் எழுத முயற்சி செய்கிறார்கள். ஆனால் சிலருக்குத்தான் அதிகமாக எழுத முடிகிறது. பலருக்கு எழுத முடியவில்லை. இது போதும், ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் இரண்டாயிரம் பக்கங்கள் எழுதினாலும் எதனையும் சொல்லி முடித்துவிட முடியாது. சொல்லப்பட்டது- எழுதப்பட்டதையெல்லாம் பார்க்கும் போது எழுதியவர்க்கு எழுத இன்னும் இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் போதும் என்று நிறைவு பெற்றுவிடுகிறார்கள்.
அதுதான் எழுத்து, படைப்பு என்பதன் புதிர். புதிர் விளக்கப் பட வேண்டியது இல்லை. விளக்கிக் கொள்ள வேண்டியது என்று இருந்து விடுகிறார்கள். ஏனெனில் எழுதுவது ஒரு வேலை இல்லை. ஆனாலும் சிலர் எழுதுவதை ஒரு வேலையாக்கிக் கொண்டு எழுதுகிறார்கள். வெகுஜன பத்திரிகையாளர், மூன்றாம் தரமான எழுத்தாளர் பணம் சம்பாதிக்க எழுத்தை ஒரு வேலையாக்கி கொண்டு எழுதி வருகிறார்கள்.
அது தமிழ்நாட்டிற்கு மட்டும் உரியது இல்லை. இரண்டு நூற்றாண்டுகாலமாக எல்லா நாட்டிற்கும் உரியதாகவே இருக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று நான்கு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதியவர்கள் பெரிய படைப்பாளர்களாக இருந்தார்கள். பலருக்கு அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே அவர்கள் எழுதியவையெல்லாம் இறந்து போய்விடுகின்றன. அதாவது படிக்க ஆள் இல்லாமல் போய்விடுகிறது.
குறைவாக எழுதினால் அங்கீகாரம் பெறலாமா? விருது, பரிசுகள் கிடைக்குமா? இல்லை. அதுவும் சாத்தியமில்லை. படைப்புகளின் தரம் என்பது அதன் உள்ளே இருப்பது. அது அறிய அறிய ஆழத்திற்குப் போவது. சொல்லச் சொல்ல சொல்லவே முடியாமல் போவது. சொல்ல முடியாத கதையெல்லாம் சொல்லிப் பார்க்கவே எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். சிலருக்கு முதல் முறையாக எழுதும் போதே வசப்பட்டுவிட்டு விடுகிறது. பலர் நான்குமுறைகள், ஐந்து முறைகள் மாற்றியும் திருத்தியும் மறுபடியும், மறுபடியும் எழுதி பூரணத்துவத்தை அடையப் பார்க்கிறார்கள்.
வெளிநாடுகளில் ஒரு படைப்பைச் சீர்படுத்திக் கொடுக்க எடிட்டர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். எடிட்டர்கள் தான் எழுத்தாளர்களை விட பெரிய ஆள்கள். எடிட் செய்யப்படாத எழுத்துக்களே இல்லை என்பதாகி விட்டது. படைப்பு இலக்கியத்திற்குள் எடிட்டருக்கு வேலை இல்லை. மெய்புப் பார்க்கின்றவர்களுக்குத்தான் வேலை உண்டு. நவீனகாலம் என்பது கட்டையாகி போய்விட்டது. அது புரியும் எழுத்து, அடுக்கான எழுத்து, எந்த நிகழ்விற்குப் பிறகு என்ன வர வேண்டும். வசனம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அது எழுத்தின் மீதான வதம். படைப்பின் மீதான தாக்குதல்.
இலக்கியத்தின் அடிப்படை நோக்கம் புரிய வைப்பது இல்லை. புரிந்து கொள்ளத் தூண்டுவது. ஈடுபாட்டோடு படிக்க வைப்பது. படித்தால் புரியுமா என்றால் புரியும் வரையில் படித்துக் கொண்டிருப்பது தான். அது தான் தமிழின் பழைய மரபு.
கதைகள் எழுதுவதற்குத் தாய்மொழியில் புலமை பெற வேண்டும்; அதன் நெடிய மரபு அறிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கொஞ்சம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் போதும் என்று சொல்வதற்கு ஏற்றார் போலத்தான் மெளனி எழுதியிருக்கிறார். அவருக்குத் தாய்மொழியான தமிழிப் படிப்பு தான் இல்லையே தவிர ஆங்கிலம் படித்து இருக்கிறார். கணிதப் பாடத்தில் எம்.ஏ பட்டம் பெற்றவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த உலகத்து சிறந்த இலக்கியப் படைப்புகளை எல்லாம் படித்தவர். நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள் என்று இலக்கியப்படிப்பு பற்றி கேட்ட போது, என்ன படிக்கவில்லை என்று எதிர்கேள்வி கேட்டார். ஆனால் அவர் படித்தாகச் சொல்லிய படைப்புகளில் ஒன்று கூட தமிழ் இல்லை; ஆனால், அவர் தமிழில்தான் எழுதினார்.
1906-ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள செம்மங்குடியில் பிறந்தவர். கும்பகோணத்தில் படித்தார். இளம் கலைப் பட்டம் பெற்றார். அப்போது கும்பகோணம் வாசிகளாக ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் இருந்தார்கள். எல்லோருக்கும் முப்பது வயதிற்கு மேல் ஆகிவிட்டது. கலை, இலக்கியம், இசை, நடனம் என்று பலவற்றின் மீது ஈடுபாடு கொண்டு வாழ்ந்தார்கள்.
"மணிக்கொடி' பத்திரிகை பி.எஸ்.ராமையா கைக்கு வந்திருந்தது. அவர் அதனை ஒரு கதைப் பத்திரிகையாக நடத்திக் கொண்டிருந்தார். அதில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருந்தன.
மெளனி தன் நண்பர்கள் கதையெழுவதையும், அவை பிரசுரமாவதையும் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். அவர்களுக்குக் கதையெழுத அறிவு காணாதே என்று சொல்லிக் கொண்டுதான் மெளனி சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார் என்று க.நா.சுப்ரமண்யம் எழுதி உள்ளார்.
1935-ஆம் ஆண்டில் மெளனியின் முதல் கதை " ஏன்' மணிக்கொடியில் வெளிவந்தது. கொஞ்சம் வக்ரமான கதை. எடுத்துச் சொல்லக்கூடிய கதையில்லை. முதல் கதை பலருக்குச் சிறந்த கதையாக அமையாமல் போய் விடுகிறது என்பது மெளனிக்கும் பொருந்திதான் போகிறது. ஆனாலும் முதல் கதை வெளியான உற்சாகத்தில் மெளனி சில சிறுகதைகள் எழுதினார்.
அவர் ஒரு கதையை ஒரு முறை எழுதக்கூடிய கதாசிரியர் இல்லை. ஒரே கதையை மாற்றி, திருத்தி வேறு வேறு வடிவத்தில் எழுதக்கூடியவர். பெரிய நோட்டில் தான் எழுதிய கதைகள் அதன் மாற்றப்பட்ட விதத்தை எல்லாம் ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்ற போது காட்டினார். அவர் ஐந்தாண்டு காலத்தில் இருபத்து மூன்று கதைகள் எழுதிவிட்டு அப்புறம் எழுத வராமல் விட்டுவிட்டார். புத்தகமும் வரவில்லை. அதில் அவரும் ஆர்வம் காட்டவில்லை.
புதுமைப்பித்தன் வானொலி உரையொன்றில் மெளனி "சிறுகதையின் திருமூலர். சொல்லில் அடை பட மறுக்கும் கருத்துகளைச் சொல்லியவர்' என குறிப்பிட அது வாழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஒரு படைப்புப்பற்றி எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் சரி விமர்சனராக இருந்தாலும் சரி-அது ஒன்றும் பொருட்படுத்த வேண்டியது இல்லை. படைப்பு பற்றி வாசகன்தான் படித்தறிய வேண்டும்.
ஆனால், அவர் சிறுகதைத் தொகுப்பு ஒன்று கூட வரவில்லை. சிலர் படிக்க ஆர்வங்கொண்டு அவர் சிறுகதைகளைத் தேட ஆரம்பித்தார்கள். 1959-ஆம் ஆண்டில் க.நா.சுப்ரமண்யம், மெளனியின் சில கதைகளைக் தேடி கண்டுபிடித்து "அழியாச்சுடர்' என்ற பெயரில் வெளியிட்டார். அவருக்கு மெளனி என்ற எழுத்தாளர் இருப்பது தெரிந்தது. "அவர் சிறுகதைகள் புதுமையாக இருக்கின்றன. மொழி வசீகரம் கொண்டிருக்கிறது என்றார்கள். பலருக்கு அவர் கதைகள் பிடிபடவே இல்லை. தமிழ் உரை நடை மாதிரி இல்லை. ஆங்கிலமாகவும் இல்லை. அவர் உரைநடையில் ஆங்கில மொழி பெயர்ப்பு இருக்கிறது. அதனை கவனமாகச் செய்து இருக்கிறார்'' என்றார்கள்.
மெளனி மொத்தம் இருபத்து மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவர் கடைசி சிறுகதை "தவறு' 1971-ஆம் ஆண்டில் "கசடதபற'-வில் வெளிவந்தது. அப்பொழுது அவருக்கு வயது அறுபத்தைந்து வயதாகி இருந்தது. புதுமைப்பித்தன் திருமூலர் என்று சொன்னதை பலரும் நம்பினார்கள்.
க.நா.சுப்ரமண்யம் "அழியாச்சுடர்' சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் "தமிழர்கள் பாக்கியசாலிகள், ஆனால் தங்கள் பாக்கியத்தைக் தெரிந்து கொள்ளத்தான் அவர்களுக்குத் தன்மையோ அறிவோ போதுமான அளவில் இல்லை. ஆகவே 1935-இல் வெளியான மெளனி சிறுகதைகள், 1959-ஆம் ஆண்டில் வெளிவருகின்றன' என்று எழுதினார்.
1964-ஆம் ஆண்டில் இருந்து சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு ரயிலில் நான் போகும் போது பலமுறை சிதம்பரத்திற்குச் சென்று மெளனியைப் பார்த்து பேசிகொண்டிருந்தேன். ஆனால் அப்படி சொல்வது சரியில்லை. அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன். அவருக்கு மெளனி என்பது பெயரே தவிர, இடைவிடாமல் இன்னொருவரை பேசவிடாமல் தன்னைப் பற்றியும், தன் சிறுகதைகள் பற்றியும் தான் எழுதும் முறைகள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தார். என்னிடம் மட்டுந்தான் பேசிகொண்டிருந்தார் என்பது இல்லை. அவரை சந்தித்த எல்லோரிடமும் அப்படியே பேசிக்கொண்டிருந்தார்.
புதுமைப்பித்தனுக்குப் பிறகு க.நா.சுப்ரமண்யம் சிறுகதைகள் பற்றிய கட்டுரையில் தவறாது மெளனி பெயர் இடம் பெற்றுக்கொண்டு வந்தது. எந்த இலக்கியப் பட்டியலிலும் அவர் பெயர் விடுப்பட்டு போனது இல்லை. அதன் பின்னர் புதிய எழுத்தாளர்கள், விமர்சனங்கள் மெளனி பற்றி எழுதினார்கள். கருத்தரங்குகள் நடத்தினார்கள். அது அவருக்கு போதையூட்டிவிட்டது.
ஒரு முறை ஜெயகாந்தன், ""நான் மெளனியைப் படித்துவிட்டுத்தான் கதைகள் எழுத ஆரம்பிக்கிறேன்'' என்று "குமுதம்' பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதனை மெளனி நன்குப் பிடித்துக்கொண்டார்.
நான் சிதம்பரத்திற்குச் சென்ற போது, "ஜெயகாந்தன் பேட்டியைப் பார்த்தாயா? அவர் என்னைப் படித்துவிட்டுத்தான் எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்' என்று மகிழ்ச்சிகரமாகச் சொல்லிக் கொண்டார்.
"ஒரு எழுத்தாளர் இன்னொருவர் சொல்வதை எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டுமா?'' என்று கேட்டேன்.
"இல்லை. கூடாது'' என்று உடனடியகாச் சொன்னார். அவர் அன்போடு வரவேற்று உபசரிப்பார். மாலையில் சென்றால் ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு போய், அல்வாவும், ரவா தோசையும் வாங்கிக் கொடுப்பார். நடராஜர் கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போய் ஆடல் வல்லான் சிறப்பையெல்லாம் எடுத்துச்சொல்வார். சில தீஷிதர்கள் அவரிடம் பவ்யமாக வந்து பேசுவார்கள்.
மாலை முழுவதும் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு கடைசி பஸ்சில், என் மாமனார் ஊராகிய வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போகிற ஆள். ஆனால் அவர் சாப்பிடாமல் விடமாட்டார். ஒரு நாள் அவரும் நானும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டோம். சுட்ட அப்பளம் போட்டார்கள். கூச்சப்படாமல் சாப்பிடச் சொன்னார். அவர் வீட்டுக்குச் சென்று இலையில் அவரோடு சாப்பிட்டவர்களை இலையை எடுக்கச் சொல்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிடும் போதே இலை பற்றி என்ன சொல்லப்போகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
தயிர்சாதம் சாப்பிடும்போதே "இலையை எடுக்காதே' என்று கையலம்ப சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அவர் மேல் சட்டைப் போட்டு நான் பார்த்தது இல்லை. மேலே மெல்லிய துண்டு போட்டுக்கொண்டிருந்தார். சிறிது காலம் வயலின் கற்றுக் கொண்டதாகவும் ஒரு முறை கூறினார். அவர் சொந்த வாழ்க்கை என்பது மிகவும் சோகமானது. ஒன்றாகப் படித்து பெரிய வேலைகளில் இருந்த இரண்டு மகன்கள் விபத்தில் இறந்து போனார்கள். ஒரு மகன் புத்திபேதலித்து அவரோடேயே இருந்தார். புத்ர சோகம் ஒரு கலைஞனை வெகுவாகப் பாதித்து இருந்தது.
புதிய வாசகர்கள் அவரைத் தேடிச் சென்றார்கள்; பத்திரிகைகள் நேர்காணல் கண்டன. அதில் அவர் மகிழ்ச்சி அடைந்தார். "எனக்கு பரிசு கொடுக்க எந்த நிறுவனத்திற்கும் தகுதியில்லை'- என்று ஒரு முறை குறிப்பிட்டார்.
1970-ஆம் ஆண்டில் நாங்கள் "கசடதபற" நடத்திக்கொண்டிருந்தோம். திருவல்லிக்கேணி தோப்பு வெங்கடாசலம் தெருவில், சரஸ்வதிகான நிலையத்தில் ஞானக்கூத்தன் ஓர் அறையில் தங்கி இருந்தார். அது தான் "கசடதபற' அலுவலகம். அநேகமாக எங்களில் சிலர் எப்பொழுதும் அங்கே இருப்போம்.
ஒரு நாள் நாங்கள் ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்து கொண்டு இந்துஸ்தானி இசை கேட்டுக்கொண்டிருந்தோம். அது மாலைப்பொழுது. ஆறு மணி இருக்கும். மெளனி தனியாக அறைக்குள் நுழைந்தார்.
அறையில் மேசை நாற்காலி எல்லாம் கிடையாது. அவரும் எங்களோடு சுவரில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்து கொண்டார். இசை போய்க்கொண்டிருந்தது.
அவர் சொன்னார்: "உங்களுக்குச் சங்கீதம் கேட்கவே தெரியவில்லை. சங்கீதம் கேட்கும்பொழுது முழு கவனத்தோடு அதனையே கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது. நம் வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பேசிக்கொண்டு இருக்க வேண்டும். திடீரென்று ஒரு ஆள் "பேச்சை நிறுத்து என்பான். அந்த விநாடியில் தான் உண்மையான சங்கீதம் இருக்கிறது'' என்றார்.
மெளனி தமிழகத்திற்கு அப்பாலும் அறியப்பட்டவராகவே இருந்தார். மைசூரில் எழுத்தாளர் அனந்த மூர்த்தியுடன் இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர் மெளனி எப்படி என்று கேட்டார். "அசலான எழுத்தாளர். கொஞ்சமாக எழுதியே அதிகமான பெயர் பெற்றிருக்கிறார்' என்றேன்.
அவர் சொன்னார்: "தமிழ்நாட்டில் இருந்து பத்துப் பன்னிரெண்டு தமிழ்ப் பேராசிரியர்கள் கொண்ட குழு ஒன்று மைசூருக்கு வந்திருந்தது. அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த போது மெளனியைப் பற்றி பேசினேன். அவர்களில் பலருக்கு மெளனி பற்றி தெரிந்திருக்கவில்லை. நாங்கள் படித்தது இல்லை என்றார்கள். ஆனால் ஒரே ஒரு பேராசிரியர் "அவருக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை. ஆகையால் நாங்கள் படிப்பது இல்லை'' என்றார். ஆனால், கர்நாடகாவில் அப்படி இல்லை. எழுத்தாளர் கட்சி, சித்தாந்தம், அரசியல் பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்ப்பது இல்லை. நன்றாக எழுதுகிறாரா என்று மட்டுமே பார்ப்போம்'' என்றார்.
மௌனி ஒரு பத்தாண்டு காலத்திற்கு மேல் எனக்கு பழக்கமானவராக இருந்தார். அவர் என்னை நீ எழுத்தாளனா? என்னவெல்லாம் எழுதியிருக்கிறாய் என்று கேட்டது இல்லை. நானும் சொன்னதும் இல்லை; புத்தகங்களைக் கொடுத்ததும் இல்லை. அதனால் தான் அவர் என்னுள் என்றும் இருக்கிறார் என்று சொல்லத்தோன்றுகிறது.
(அடுத்த இதழில் ந.பிச்சமூர்த்தி)