முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சலிக்காத பயிற்சி... சாதனைக்கான முயற்சி!

ஆரி என்ற தையல் கலையானது ஊசி, நூல் கொண்டு ஆடைகளில் நுட்பமான வடிவமைப்புகளை உருவாக்கும் எம்பிராய்டரி வகையாகும்.

Updated On : 30 நவம்பர் 2025, 12:02 am IST
பகிர்:

ஆரி என்ற தையல் கலையானது ஊசி, நூல் கொண்டு ஆடைகளில் நுட்பமான வடிவமைப்புகளை உருவாக்கும் எம்பிராய்டரி வகையாகும். ஆடைகளில் அழகிய வேலைப்பாடுகளை நுணுக்கமாகச் செய்யும் திறனில் பெண்களுக்கு நிகர் பெண்கள்தான். இதற்காகப் பயிற்சி பெற்ற பெண்கள் ஒருங்கிணைந்து, உலக சாதனைக்கான முயற்சியை நாமக்கல்லில் அண்மையில் மேற்கொண்டனர். இந்திய ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த முயற்சியில் 305 பெண்கள் பங்கேற்றனர்.

இந்தச் சாதனை முயற்சி குறித்து இந்தியன் ஆரி தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் அரவிந்த் லட்சுமிநாராயணன் கூறியது:

மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு உருவத்தையும், இந்திய வரைபடத்தையும் 100 பேர் போட்டிப் போட்டுக் கொண்டு, ஆரி கலையின் மூலம் ஒன்றரை மணி நேரத்தில் வடிவமைத்தனர். அதேபோல், குழந்தைகளுக்கான நவீன ஆடைகளைக் கைகளாலேயே தயாரிக்கும் முயற்சியையும் ஒன்றரை மணிக்குள்ளாகப் பலரும் செய்து காண்பித்தனர். இவை தவிர அழகுக்கலை (சிகை அலங்காரம், முக அலங்காரம்), கைகளில் மெஹந்தி வரையும் போட்டிகளும் நடைபெற்றன.

Advertisement

Advertisement

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் ஆர்வமுடன் இதில் கலந்துகொண்டனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்தோருக்கு வெள்ளிக்காசுகள் 15, 10, 5 கிராம் என்ற அளவில் வழங்கப்பட்டன. மேலும், உலக சாதனைப் பட்டியலில் இடம் பெறுவதற்கான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் 20 ஆயிரம் உறுப்பினர்களுக்கும் மேலாக எங்களுடைய கூட்டமைப்பில் உள்ளனர். இதுவரை 16 மாவட்டங்களில் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுடைய பயிற்சியைக் கௌரவிக்கும் வகையிலான போட்டிகளை நடத்தி உள்ளோம். உலக சாதனை முயற்சியாகவே இந்த ஆரி, தையல், அழகுக்கலைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் பங்கேற்ற அனைவருமே சலிக்காமல் ஆர்வமுடன் தாங்கள் பெற்ற பயிற்சியை, உலக சாதனைக்கான வாய்ப்பாகக் கருதிப் பங்கேற்றனர். அவர்களுக்குக் கூட்டமைப்பின் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பெருமைப்படுத்தினோம். அழியாத கைவினைக் கலைகளில் ஆரி கலையும் உண்டு. இதைப் பெண்கள் கற்றுக்கொண்டால் தங்களுடைய சொந்தக்காலில் நின்று வாழ்க்கையில் முன்னேறலாம்'' என்கிறார் அரவிந்த் லட்சுமிநாராயணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.