முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சின்ன மேளம் என்கிற நாட்டியம்

கோயில்களில் நடனங்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 4:03 AM
பகிர்:

கோயில்களில் நடனங்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சிற்பங்களிலும் நடனக் கலையின் தாக்கம் இருக்கிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலின் விமானத்தின் உள்புறம் மேல் அடுக்கில் உள்ள பிரகாரத்தில் 108 நடனக் கரணங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.

பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் தொடங்கி, நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் கோயிலில் இசைக்கும், நாட்டியத்துக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர். மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் இந்தக் கோயிலில் 400க்கும் அதிகமான நடனக் கலைஞர்களை நியமித்து, அவர்களுக்காக குடியிருப்புகளையும் அளித்துள்ளார். இதோடு, ஒவ்வொரு கோயிலிலும் பூசாரிகளைத் தவிர, பெரிய மேளம், சின்ன மேளம் ஆகிய குழுவினர் இசை ஆராதனைகளை செய்து வந்தனர்.

இதுகுறித்து தஞ்சை நால்வர்வழிப் பரம்பரையின் எட்டாவது தலைமுறையைச் சேர்ந்த கே.பி.கே. சந்திரசேகரன் கூறியது:

Advertisement

'தமிழர் பண்பாட்டில் அனைத்து விதமான மங்கல நிகழ்ச்சிகளிலும் பெரிய மேளக் குழுவினரின் இசை ஒலிக்கும். இந்த மேளத்தில் நாகசுரம், தவில், தாளம், சுருதி பெட்டி ஆகிய கருவிகளை இசைக்கும் கலைஞர்கள் இருப்பர். கோயில் வழிபாட்டில் ஐந்துவேளை பூஜைகளின்போது, அந்தப் பூஜையைத் தெரிவிக்கும் முகமாக ஒலிப்பதுதான் பெரிய மேளம். திருவிழாக் காலத்தில் சுவாமி வீதியுலா செல்லும்போது மல்லாரியுடன் தொடங்கும் இந்த இசை கடைசி வரை ஒலிக்கும்.

திருவிழாக் காலங்களில் சுவாமி புறப்பாடு நிகழும்போது சின்ன மேளக் குழுவினர் சுவாமிக்கு முன்னால் ஆடிச் செல்வர். நடனம் ஆடக்கூடிய பெண்கள் அபிநயமும், நிருத்தமும் கொண்டு ஆடல் நிகழ்த்துவர். இவர்களுடன் பக்க இசைக் கலைஞர்களான 'நட்டு என்கிற 'நட்டுவனார் தாளம் இசைக்க, 'முட்டு என அழைக்கப்படும் மிருதங்ககாரர் மிருதங்கம் இசைக்க, குழல் இசைப்போர் இசைத்து வருவர். இவர்களே 'சின்ன மேளம் குழுவினர் என அழைக்கப்படுகின்றனர்.

தற்போது சின்ன மேளத்தில் ஆடலுடன் மிருதங்கம், வீணை, வயலின், புல்லாங்குழல், கிளாரினெட், தபேலா, கடம் போன்ற பக்க இசைக் கருவிகளும் இசைக்கப்படுகின்றன.

பெரிய கோயிலில் அக்காலத்தில் சித்திரைப் பெருவிழா (பிரம்மோற்சவம்) தடையில்லாமல் நடைபெறுவதற்காக அஷ்டதிக் பாலகர்களுக்கு பூஜை செய்யப்படும். அப்போது, தஞ்சை நால்வரின் பாட்டனார் கங்கைமுத்து நட்டுவனார் நவசந்தி கவுத்துவத்தைத் தொகுத்து உருவாக்கினார்.

ஊருக்குரிய ஆகம சாஸ்திரத்தை தழுவி இந்த உற்சவம் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் நடப்பதற்காக பிரம்மா, இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய ஒன்பது தெய்வங்களுக்கும் உரிய பாடல்களுடன் சித்திரைப் பெருவிழாவின் முதல் நாளில் கொடியேற்றத்தின்போது பூஜைகள் நடைபெற்றன. அப்போது, தொடங்கும் சின்ன மேளம் தொடர்ந்து 18 நாள்களும் நிகழ்த்தப்பட்டது. இத்திருவிழாவின் ஒன்பதாம் திருநாளில் மன்னர் சரபோஜி ஆட்சிக்காலத்தில் கொட்டையூர் சிவக்கொழுந்து என்பவரால் இயற்றப்பட்டு, தஞ்சை நால்வரால் இசை நாட்டியம் வடிவம் கொடுக்கப்பட்ட ஸ்ரீசரபேந்திர பூபால குறவஞ்சி நாட்டிய நாடகமும் நடைபெறும்.

பெரிய கோயிலில் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை 18 நாள்கள் நடைபெறும் சித்திரை விழாவின்போது, அனைத்து நாள்களிலும் 'சின்ன மேளம் என்ற நாட்டியத்தை நடத்தி வந்தனர். நாளடைவில் தேவரடியார் முறை ஒழிப்பு சட்டத்தால், கோயிலில் நடைபெற்று வந்த நடைமுறைகள் மாறிவிட்டதால், சின்ன மேளமும் 70 ஆண்டுகளுக்கு மேலாக நின்றுவிட்டது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சின்ன மேள முட்டுக்காரரும், நட்டுவனாருமான காலம் சென்ற ஹேரம்பநாதன் முயற்சியால் பெரிய கோயிலில் மீண்டும் சின்ன மேளம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் பெரிய கோயில் சித்திரைப் பெருவிழாவில் 18 நாள்களும் இறைவனுக்கு சின்ன மேளம் என்கிற நாட்டிய நிகழ்ச்சி மூலம் வழிபாடு செய்யப்படுகிறது. ஒன்பதாம் திருநாளில் ஸ்ரீசரபேந்திர பூபால குறவஞ்சி நாட்டிய நாடகமும் நிகழ்த்தப்படுகிறது.

நிகழாண்டு ஏப்ரல் 13 ஆம் தொடங்கப்பட்டு 30 ஆம் தேதி வரை நடைபெறும் சித்திரைப் பெருவிழாவிலும் மாலை நேரத்தில் இந்தச் சின்ன மேள விழா நடைபெற உள்ளது என்கிறார் சந்திரசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.