தொழில்நுட்பத்தை யாரும் தடுக்க முடியாது!
'நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, ஸ்வரம், தாளம், ராகம், ஸ்ருதி... இப்படி எதுவும் கல்லூரி முடிக்கும் வரை எனக்குத் தெரியாது.
'நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை, ஸ்வரம், தாளம், ராகம், ஸ்ருதி... இப்படி எதுவும் கல்லூரி முடிக்கும் வரை எனக்குத் தெரியாது. எந்தவித இசையறிவும் இல்லாமல் ஏதோ ஓர் உள்ளுணர்வின் உந்துதலில் இசையைத் தேர்ந்தெடுத்தவன் நான்' - பணிவு கரைந்த குரலில் பேசுகிறார் டி. இமான். நவீன தமிழ்த் திரை இசையின் துள்ளிசையும், மெல்லிசையும் கலந்த பாடல்கள் இவருடையவை. இளையராஜாவுக்கு அடுத்தபடியாக மண்ணின் இசையை திரையில் ஒலிக்க வைக்கும் கலைஞர்.
ஜெயித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்றில்லாமல், நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு தருகிறீர்கள்... புதுமுகங்களை எப்படிக் கணிக்கிறீர்கள்?
அந்தக் கணிப்புக்குதான் இங்கே வேலை. சில பேரின் குரலைக் கேட்கும் போதே, இவர்கள் எந்த மாதிரியான பாடல்களுக்குச் சரியாக வருவார்கள் என்று என்னால் கணிக்க முடியும். நிறையப்பேர் அவரவர்களின் குரல் பதிவை அனுப்பி வைப்பார்கள்.
Advertisement
தொலைக்காட்சிகளில் இசை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது அதிலிருந்து விலக்கப்படுகிறவர்களின் திறமையை கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்பேன். ' ஊதா கலரு ரிப்பன்...' பாட்டுப் பாடிய ஹரிஹர சுதன், 'உம்மேல ஒரு கண்ணு...' பாட்டு பாடின ஜித்தின் ராஜ் எல்லோரும் ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவர்கள். எந்த ஒரு ட்யூன் போட்டாலும் அதை ஒரு அறிமுகப் பாடகரைப் பாட வைத்து பதிவு செய்ய வேண்டும் என்று நினைப்பேன். நிறைய அனுபவம் இல்லாத பாடகரிடம் போக வேண்டும் என நினைப்பது இல்லை.
எந்தப் பாடல் பதிவின் போதும் அப்படி அனுபவம் மிக்க குரல் வேண்டும் என்றால், அது ஸ்ரேயா கோஷல்தான். சில பாடல்களின் உணர்ச்சிகளுக்கு மட்டுமே அனுபவமிக்க பாடகர்கள் தேவைப்படுகிறார்கள். மற்றபடி எனக்கு புதுமுகங்களே போதும். ஒரு வகையில் பார்த்தால் இதுதான் என் வொர்க்கிங் ஸ்டைல்.
நீங்கள் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை என்று சொல்லப்படுகிறதே?
எங்கே போனாலும் தன்மானம் முக்கியம் என்று நினைப்பேன். பக்க பலமாகக்கூட யாரும் இருக்கக் கூடாது என்பது என் தனித்துவம். தன்மானத்தை இழந்து எங்கேயும் வேலை பார்க்கக் கூடாது. ஒரு கட்டத்துக்கு மேல் யாரையும் நம்பி பயணிக்கக் கூடாது என்பது நினைப்பாக இருக்கும்.
சினிமா ஒரு பெரிய மாயாஜாலம் நடக்கும் இடம். இங்கே யார் எதிரி... யார் நண்பர்... என்பதெல்லாம் கிடையாது. அதனால் நான் என் நண்பர்களிடம் கூட வேலை பார்த்தது இல்லை. இப்போது கூட வருகிற வாய்ப்புகளுக்கு மட்டும்தான் இசையமைக்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் வாழ்க்கை மாறியது. என்னை நம்பினார்கள். 'கும்கி' மாதிரியான சினிமாக்கள் என் நம்பிக்கையை அதிகரித்தது அவ்வளவுதான்.
சினிமா இசை என்பது முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தின் அடிப்படையை சார்ந்து விட்டது. ஏ.ஐ. போன்ற தொழில்நுட்பம் இருந்தால்தான் இங்கே எதுவும் சாத்தியம் என்றாகி விட்டதே?
அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற வளர்ச்சி இது. இதை நான், நீங்கள், யாரும் எதுவும் செய்து விட முடியாது. முதன் முதலில் கரோக்கி கான்சொட்டை 'விசில்' படத்தின் மூலமாக நான்தான் ஆரம்பித்தேன். அப்போது வந்த விமர்சனங்களில் இந்த கரோக்கியும் சேர்த்து எழுதப்பட்டது. சிலர் இது என்ன... இசை மட்டுமே கேட்கிறது. வரிகளே இல்லை என்று எழுதினார்கள். கரோக்கி பற்றி கூட தெரியாத இசை விமர்சகர்கள் எல்லாம் அப்போது இருந்தார்கள்.
ஆனால், இப்போது நிறையப் பேர் அப்ளிகேஷன்ஸ் மூலமாக பாடல்கள் பாடி வெளியிடுகிறார்கள். என் கரோக்கியை யாரோ ஒருவர் வேறு விதமாகப் பயன்படுத்துகிறார். ஒரிஜினல் இசையோடு அவர்கள் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. சில நேரங்களில் அதை தவறாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இங்குள்ள கரோக்கியை எடுத்து பிற மொழிகளில் பாடல்களாக மாற்றி இருக்கிறார்கள். இது இசை சார்ந்த வளர்ச்சி. இதை யாரும் தடுக்க முடியாது. அது போல்தான் நீங்கள் சொல்லும் தொழில்நுட்பங்கள்.
இமான் என்றாலே கனத்த உடம்புதான் அடையாளமாக இருந்த காலகட்டம் இருந்தது. இப்போது ரொம்பவே மெலிந்து விட்டீர்களே...
ஆமாம், ஆறு மாதங்களில் 117 கிலோவில் இருந்து 79 கிலோவாக எடையைக் குறைத்திருக்கிறேன். இப்போது 75 கிலோவுக்குக் கீழே முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை, நவீன சிகிச்சைகள், மருத்துவர் ஆலோசனை என்று எதுவுமில்லாமல் உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் மூலமாக ஆரோக்கியமான முறையில் உடல் மெலிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்படிப் படிப்படியாக ஆறு மாதம் தொடர்ந்து முயற்சி செய்து, எடையைக் குறைத்தேன். சினிமாவில் நடிக்கப் போறீங்களா? என்று நிறையப்பேர் கேட்டார்கள். அது என்னுடைய விருப்பம் இல்லை.
15 வருடத்துக்கு மேலான பயணம்... 100 படங்களுக்கு மேல் இசை பங்களிப்பு... எப்படியான பயணம் இது?
ரொம்பவே அற்புதம். இந்தப் பயணம் யாருக்கும் கிடைக்காது என்றே தோன்றும். வலிகள் உண்டு. சந்தோஷம், புது வானம், புதிய பாதைகள், புது ருசி, புது நதிகள், புது மனிதர்கள், புது அனுபவங்கள் என இப்படி நிறைய இருக்கிறது. என் சிந்தனையை மாற்றிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.
நம்மை அறியாமல் என் திசையை வேறு இடத்துக்குத் தள்ளின விஷயங்கள் உண்டு. ஒருவேளை என்னைக் கீழே தள்ளினால் மறுபடியும் எழுந்திருக்கும் சக்தியை நானே உணர்ந்த விநாடிகள் இருந்ததுதான் அதில் அற்புதம். 15 வருடங்கள்... 100 படங்கள் என்பது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. ஆயிரம் படங்கள் முடிக்கும் போதும் நாம் கை குலுக்கலாம்!