முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விதைக்'கலாம்'

எதை சிதைக்கலாம் என்று நினைத்தால், வறட்சியை சிதையுங்கள்.

Updated On : 22 பிப்ரவரி 2026, 4:05 am IST
பகிர்:

'எதை சிதைக்கலாம் என்று நினைத்தால், வறட்சியை சிதையுங்கள். எதைக் கதைக்கலாம் என்று நினைத்தால், மரம் வளர்த்தலைக் கதையுங்கள். எதைப் புதைக்கலாம் என்று நினைத்தால், செடிகளின் வேர்களை மண்ணில் புதையுங்கள்.

எதை விதைக்கலாம் என்று நினைத்தால், விதைகளை விதையுங்கள். பசுமைப் போர்வை எப்போதும் பூமியில் போர்த்தியிருந்தால் பல்லுயிர்கள் பாதுகாக்கப்படும் என்ற அப்துல் கலாமின் அணுகுமுறையுடன் இளைஞர்கள் தன்னார்வத்தோடு ஒன்றிணைந்துள்ளோம்'' என்கிறார் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 'விதைக்கலாம்' எனும் தொண்டு அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ மலையப்பன்.

அவரிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'அப்துல் கலாம் மறைவின்போது, ஊரெங்கும் கண்ணீர்ப் பதாகைகள் காட்சி தந்தன. அப்படி ஒரு பதாகை அமைப்பதற்காக இளைஞர்கள் சிலர் ஒன்று

கூடினோம். அவருக்கு உண்மையிலேயே மரியாதை செய்வது என்றால், அவரின் திட்டத்துக்கு உயிர் ஊட்டுவதுதான் என்று சிந்தித்தோம். 'விதை+கலாம் = விதைக்கலாம்' என்று பெயரிட்டு 2015- ஆம் ஆண்டில் இந்த அமைப்பை நிறுவினோம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறைந்தபட்சம் 5 மரக்கன்றுகளையாவது நடுகிறோம். இதுவரை 547 ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இவற்றில் பெரும்பாலானவை மரங்களாக உருவெடுத்துள்ளன. மாணவர்கள், பொதுமக்களுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விநியோகித்துள்ளோம்.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் இழந்த மரங்களை மீட்டுருவாக்கும் செய்யும் முயற்சியில், 90 சதவீதம் வெற்றியைக் கண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகளை நடவுசெய்து உருவாக்கியுள்ளோம்.

தற்போது நூற்றுக்கும் அதிகமான தன்னார்வலர்கள் எங்களுடன் இணைந்து இயங்கி வருகின்றனர். அமைப்பில் தலைவர், செயலாளர் போன்ற பதவிகள் கிடையாது. அனைவரும் சமம்தான். அன்று இளைஞர்களாக இணைந்தவர்களில் பலர், தற்போது அரசு, தனியார் பணிகளில் உள்ளனர். சிலர் சுயதொழில் செய்து வருகின்றனர். எல்லோரும் ஒன்றிணைந்து பணியை செம்மையுறச் செய்கிறோம்.

இளைஞர்கள் என்றாலே பொறுப்பற்றவர்கள், புரிதல் அற்றவர்கள், எதையும் செய்யத் தெரியாதவர்கள், நேரத்தை வீணடிப்பவர்கள், வெட்டியாக ஊர் சுற்றுபவர்கள் என்ற சமூகத்தின் குரூரமான பார்வையில் மண்ணைத் தூவிவிட்டு, நல்லமுறையில் நேரத்தைச் செலவிட்டு உலக நன்மைக்காக உழைத்து வருகிறோம்'' என்கிறார் ஸ்ரீ மலையப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments