முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இளையராஜா பாடல்களுடன் யாழ்ப்பாணம்!

'மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறோம். இத்தனை நாள் நாங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம்தான் இந்தப் படம்.

Updated On : 1 மார்ச், 2026 at 4:15 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:18 PM

'மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறோம். இத்தனை நாள் நாங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம்தான் இந்தப் படம். இதை நான் கர்வமாகச் சொல்லவில்லை; பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம்' என்று சிலாகித்துப் பேசுகிறார் இரட்டை இயக்குநர்கள் ஜெனோசன் ராஜேஷ்வர் மற்றும் சுகிர்தன் கிறிஸ்துராஜா. ஈழத்தில் சிறுவர்களாக இருந்தவர்கள், போர் சூழலுக்குப் பின் சென்னை வந்து சினிமா கற்று 'அந்தோணி' படத்தின் மூலம் ஈழ வாழ்வியலைச் சொல்ல வருகிறார்கள்.

'நான் ஈழத்துக்காரன். சின்ன வயதில் இருந்தே தேசபக்தி, மத நல்லிணக்கம், மனிதநேயம் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள். இறுதி யுத்தத்துக்குப் பின் நாட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். சில ஆண்டுகள் கழித்து ஈழத்துக்குத் திரும்பிய போது, என் கிராமமே எனக்கு அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு போரின் சுவடுகள் எங்கள் தாய் மண்ணை சூறையாடி விட்டது. அங்கிருந்த நிலை, எங்களின் வாழ்க்கை பற்றி ஆராய்ந்த போதுதான் ஈழத் தமிழர்கள் பற்றிய விசாலமான பார்வை கிடைத்தது.

ஈழத்தில் இறுதிக்கட்டப் போரில் நடந்த கொடூரங்கள் எல்லோருக்கும் தெரியும். இணையத்தில் அதற்குச் சாட்சிகள் நிறைய இருக்கின்றன. ஆனால், அதற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. அதைப் பற்றி ஆழமாக யோசித்த போதுதான் இந்தக் கதைக்கான தீப்பொறி எனக்குள் வந்து விழுந்தது.' என முதலில் தன் வார்த்தை பயணத்தைத் தொடர்கிறார் ஜெனோசன் ராஜேஷ்வர்.

Advertisement

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:18 PM

'இப்போது இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் என்பது இறுதிக் கட்டப் போருக்குப் பிந்தைய குழப்பமான அரசியல். ஊடகங்களும், பொழுதுபோக்குகளும் மலிந்து விட்ட நாட்டில் பொதுமக்களுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கடிக்கப்படுகின்றன. வசதி வாய்ப்புகளும், அநீதிகளும் பெருகி விட்ட சமூகத்தில், எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் சாபம் போல் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஊழலும், அலட்சியங்களும் பெருகி விட்ட சமூகம். 30 ஆண்டு கால ஈழப் போராட்டம் கண் முன்னே வீழ்ந்த கொடூரம்.

இந்தத் தலைமுறை தமிழர்களின் வரலாற்றை, எங்களை தாளாத துயரமாக அழுத்திக் கொண்டு இருக்கின்றது. காலங்காலமாகப் பேசிப்பேசி, எங்களைத் தெருவில் இறக்கி விட்டு, தலைவர்கள் எல்லாம் மாளிகைகளை உள்பக்கமாகச் சாத்திக் கொண்டு விட்டார்கள். அநீதிகளுக்கு எதிராக அணி திரட்ட, வழி நடத்த, ஒன்று சேர்க்க முடியாத அத்தனை தலைவர்களுக்கும் குற்ற உணர்வைக் கொடுக்கும் விதமாக இந்தக் களம் உருவாகி வந்திருக்கிறது.

குழப்பமான அரசியல்தான் அதற்குக் காரணம். அரசியலும், வாழ்க்கையும் அங்கிருப்பவர்களைப் பந்தாடிக் கொண்டே இருக்கிறது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் நிறைய இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட விஷயம், இன்னும் இந்த உலகத்துக்குத் தெரியவில்லை. கடந்த தலைமுறை போய்ச் சேர்ந்து விட்டது. மிஞ்சியவர்கள் எல்லாம் புதியவர்கள். போரை நேரில் பார்க்காத பிள்ளைகள் நிறையப்பேர் வந்து விட்டார்கள்.

அவர்களுக்கு இந்தக் காலம் தந்திருப்பது இயலாமையும் கோபமும் கையறுநிலையும்தான். இந்தத் தலைமுறைக்கான இன எழுச்சி என்பது இன்னும் 50 ஆண்டுகளுக்குக் கிடையாது. அந்தளவுக்கு அங்கே பாதிப்புகள். இப்போது அங்கே என்னென்ன நடக்கிறது என்கிற உண்மையை உருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.' என தனது நிலைப்பாட்டை எடுத்து வைக்கிறார் சுகிர்தன் கிறிஸ்துராஜா.

'நல்ல மழை பெய்து எந்தன் காடு இங்கு கனிந்தது. நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக வளர்ந்தது. கொம்புத்தேனை பார்த்து நின்றேன், கையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு நின்ற என்னைக் கொஞ்சும் அன்னம் அழைத்தது என்ற மாதிரியான நிகழ்வு எனக்கு. ஒரு படத்தில் சொல்லி இருப்பார்கள்... காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது என்று.

எங்கள் ஊரில் உள்ள காதலையும் கடலையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படம் எப்படி ஓர் அனுபவமாக இருக்கும் என்றால், காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்தப் படத்துக்கு ஒரு டிக்கெட் எடுங்கள்... யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி, அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களைக் கேட்டுக் கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப் படம் கொடுக்கும்' என்று சிலாகிக்கிறார் ஜெனோஷன் ராஜேஷ்வர்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:18 PM

'10 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக சிதறிப்போய் விட்டார்கள். கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இன அழிப்பு அங்கே நடந்திருக்கிறது. அவர்களின் சொந்தங்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது. என்னை நான் ஓர் ஈழத் தமிழனாக உணர்ந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதனால் எந்த சமரசமும் செய்யவில்லை.

இதில் சிங்கள ராணுவத்தின் தவறுகள், புலிகள் பக்க நியாயங்கள் என்று கருத்து சொல்லவில்லை. நடந்துகொண்டிருக்கிற உண்மையை அப்படியே அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறேன். செங்காடு, சிறுகரடு, காடு, கள்ளிகள் எல்லாமே போய்விட்டன. பஞ்சம் பிழைக்கவும், பசியாற்றவும் பச்சை பூமி வேண்டும். வலிகளும், வேதனைகளும் மட்டுமே இருக்கிற உண்மையான பதிவைக் கொடுத்திருக்கிறேன். என் நிலம், என் மக்கள் சார்ந்த கதை.

கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி உள்ளிட்டோர் கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர். இளையராஜாவின் இசை வேறு ஒரு மன ஆழத்துக்கு உங்களைக் கொண்டு செல்லும். பறவைகள் தடங்கள் இல்லாமல் போய் விடுகின்றன. அது போல்தான் இளையராஜாவும். இதுவரை தொடாத ஒரு இசையை இதில் தொட்டிருக்கிறார். அது உங்களுக்கு சிலிர்ப்பாக இருக்கும். இதைச் சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் ரமணதாஸ் சாருக்கு ஆயிரம் நன்றிகள்' இருவரும் கைக் கூப்பி வணங்கி வார்த்தைகளை முடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.