கைப்பேசியும் மனமும்! சுத்தம் செய்யும் கருவியான தியானம்!
கைப்பேசி நினைவகத்தைச் சுத்தம் செய்ய செயலிகள் பயன்படுவதுபோல, மனதின் பதிவுகளைச் சுத்தம் செய்யப் பயன்படும் உன்னதமான கருவியே 'தியானம்'.
பா.ஜோதிமணி
கைப்பேசி நினைவகத்தைச் சுத்தம் செய்ய செயலிகள் பயன்படுவதுபோல, மனதின் பதிவுகளைச் சுத்தம் செய்யப் பயன்படும் உன்னதமான கருவியே 'தியானம்'. வாரம் ஒருமுறை கைப்பேசியைச் சுத்தம் செய்வதுபோல, தினமும் தியானம் மூலம் மனதைச் சுத்தம் செய்து வாழுங்கள். வாழ்க்கை லேசானதாக மாறும்.
தியானம்
Advertisement
Advertisement
மனிதர்கள் தங்களது உடல், மனம், ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, இறைநிலையை அடைவதற்கான உன்னதமான வழிமுறையே 'யோகக் கலை'. பதஞ்சலி முனிவர் இயற்றிய 'யோக சூத்திரம்' என்ற நூலில், யோகாவின் எட்டு நிலைகள் விளக்கப்பட்டுள்ளது. 'அஷ்ட' என்றால் எட்டு. 'அங்கம்' என்றால் 'உறுப்புகள்' அல்லது 'நிலைகள்' என்று பொருள். எனவே, இது 'அட்டாங்க யோகம்' (எண்வகை யோகம்) என்று அழைக்கப்படுகிறது.
இயமம்- ஒழுக்கம், நியமம்- நியதி, ஆசனம்- உடல்நிலை, பிராணாயாமம்- மூச்சுப்பயிற்சி , பிரத்தியாகாரம்- புலனடக்கம், தாரணை- ஒருமுகப்படுத்துதல், தியானம்- ஆழ்ந்த சிந்தனை, சமாதி- பேரின்பநிலை என்பதே எண்வகைகள். தாரணை- முதிர்ச்சியடையும்போது தியானம் கைகூடும். ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் எவ்விதமான சலனமும் இன்றி, ஆழமான, தொடர்ச்சியான விழிப்புணர்வுடன் இருப்பதே தியானம்.
உள்ளக் கிடங்கை சுத்தம் செய்தல்
பயன்படுத்தாத பயன்பாடுகள், தேவையில்லாத படங்கள், முன்னனுப்பிய செய்திகள் ஆகியன கைப்பேசியின் நினைவகத்தை அடைத்துக் கொள்கின்றன. இதனால் கைப்பேசி முடக்கமாவதோ, மெதுவாகவோ செயல்படுகிறது.
இதேபோல், மனதில் கசப்பான நினைவுகள், கவலைகள், பிறரைப் பற்றிய பொறாமை, கோபம் போன்ற 'எண்ணக் குப்பைகள்' தேங்கி விடுகின்றன. இதனால் மனமும் அமைதியின்றி முடக்கமாகிவிடுகிறது.
தியானம் செய்ய அமரும்போது, முதலில் இந்த எண்ணக் குப்பைகள்தான் வெளியே வரும். தியானம் என்பது இந்தத் தேவையற்ற நினைவுகளைக் கண்டறிந்து, மனதை ' தெளிவாக்க' செய்யும் அற்புதமான கலையாகும்.
பதிவை நீக்கும் கலை
கைப்பேசி நன்றாக வேலை செய்ய வேண்டும் என்றால், தேவையற்றதை நீக்க வேண்டும். இதேபோல், மனதில் எண்ணங்களை நாம் கவனிக்க வேண்டும். 'இந்த எண்ணம் தேவையா? வாழ்க்கைக்கு ஏதேனும் பயன் உண்டா?' என்று சிந்தித்து, எதிர்மறை எண்ணங்களை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
தியானத்தில் எண்ணங்களை வலுக்கட்டாயமாக அடக்கக் கூடாது. ஓடும் மேகங்களைப் போல எண்ணங்களை வேடிக்கை பார்க்கவேண்டும். நீங்கள் அதை உற்றுக் கவனிக்கும்போது, தேவையில்லாத எண்ணங்கள் தானாக மறைந்துவிடும்.
சேமிப்பு
கைப்பேசியில் இடம் இல்லை என்றால், புதிய நல்ல புகைப்படங்களையோ, முக்கியமான கோப்புகளையோ நம்மால் சேமிக்க முடியாது. மனம் முழுவதும் கவலைகளும், பயமும் நிறைந்திருந்தால், புதிய, நல்ல சிந்தனைகளுக்கோ, மகிழ்ச்சியான உணர்வுகளுக்கோ இடம் இருக்காது. தியானம் என்பது மனதில் வெற்றிடத்தை உருவாக்குகிறது. மனம் காலியாகும்போது அமைதி, அன்பு, புதிய படைப்பாற்றல் சிந்தனைகள் போன்றவை உள்ளே வர முடியும்.
சாதனத்தை ஆரம்ப நிலைக்கு மீட்டெடுத்தல்
கைப்பேசி மிகவும் மோசமாகப் பழுதடையும்போது, நாம் அதை 'ரீசெட்' செய்து புத்தம் புதிய கைப்பேசியைப் போன்று மாற்றுவோம். மனமும் தினசரி வாழ்க்கையின்அழுத்தங்களால் சோர்ந்து போகும்போது, அதற்கும் மீட்டமை தேவை. தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் கண்களை மூடி, மூச்சைக் கவனித்து தியானம் செய்தால் மனதை நாள்தோறும் புதுப்பிக்கலாம். இதுஆன்மாவை 'ரீசெட்' செய்து, அன்றைய நாளை புத்துணர்வோடு எதிர்கொள்ள உதவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.