மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான வணிக நிறுவனங்களிலும், கடைகளிலும் இந்தப் பைகளிலேயே பொருள்களை அளிக்கின்றனர்.
உலகளவில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஒவ்வொரு தனிமனிதனும் ஆண்டுக்கு சுமார் 150 பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியப்படுபவை.
சுற்றுச்சூழல் சீர்கேட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் பிளாஸ்டிக் பைகள் 'பாலி எத்திலின்' என்ற வேதிப் பொருளால் ஆனவை. இவை மக்கி சிதைய பல ஆண்டுகளாவதோடு, மண்ணில் உள்ள சத்துப் பொருள்களுக்கு மிகப் பெரிய அளவில் கெடுதல் புரிகின்றன.
Advertisement
Advertisement
பிளாஸ்டிக் பைகளுடன் கலந்த உணவுப் பொருள்களை உண்பதால் கால்நடைகள், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள் நீர்நிலைகளை மாசடையச் செய்கின்றன. கால்வாய்களில் அடைப்பு ஏற்படுத்தி, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.
திடக்கழிவு மேலாண்மை முறையில் மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தரம் பிரித்து அளிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், குப்பைக் கிடங்குகளில் பிளாஸ்டிக் பைகள் சேர்ந்தே காணப்படுகின்றன. கிடங்குகளில் குப்பைகள் எரிக்கப்படும்போது பிளாஸ்டிக் பைகளும் சேர்ந்து எரிகின்றன.
அதிலிருந்து வெளியேறும் டையாக்ஸின் என்ற கொடிய நச்சுவாயுவானது புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது. இதுமட்டுமின்றி, நரம்பு மண்டலம் பாதிக்கப்படவும், ஆண்மைக்குறைவு, பெண்களுக்கு மலட்டுத்தன்மை, ஹார்மோன் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்பட காரணியாகவும், உயிரினங்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அழிக்கச் செய்வதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3-இல் பிளாஸ்டிக் பை இல்லாத தினம்
இதுபோன்ற காரணங்களால் உலக நாடுகள் 2002-ஆம் ஆண்டு மெல்லிய பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்தன. இதற்கு மாற்றாக துணிப்பை, சணல் உள்ளிட்டவற்றால் பலமுறை பயன்படுத்தும், மக்கும் தன்மை கொண்ட பைகளை பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில், ஆண்டுதோறும் ஜூலை 3-ஆம் தேதி உலக பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கத்தில் குறிப்பிட்ட அளவாவது வெற்றிபெற வேண்டும்.
காகிதப் பை மாற்றல்ல
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பேப்பர் கேரி பேக், பேப்பர் கப் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை மக்கும் தன்மை கொண்டவை. இருந்தாலும், காகிதப் பை உற்பத்திக்கு ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. கரியமில வாயு வெளியேற்றம் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரக்கன்றுகள் நட வேண்டும் என அறிவுறுத்தப்படும் நிலையில், மரங்கள் அதிகளவில் வெட்டப்படும் ஆபத்து உள்ளது. எனவே துணிப் பைகள், சணல் பைகள், வாழை நார் பைகள், தென்னை நார் பைகள், பனை ஓலையிலான பைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவது சூழல் சீர்கேட்டிலிருந்து பாதுகாக்க ஏதுவாகும்.
துணிப் பைகள்
மஞ்சள் துணிப் பைகள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்தன. பிளாஸ்டிக் பைகளின் வருகையால் துணிப்பைகளின் பயன்பாடு பெருமளவு குறைந்தது. அவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் பிளாஸ்டிக் கழிவுகள் குறைய ஏதுவாகிறது. தற்போது 'மீண்டும் மஞ்சப் பை திட்டம்' தொடங்கி மஞ்சப் பை வாங்கி பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பைகள் முதல் சுப நிகழ்ச்சிகளில் தாம்பூலப் பைகள் வரை துணியால் செய்யப்பட்ட பைகளாக வழங்க விழிப்புணர்வை ஏற்படுத்துவது பிளாஸ்டிக் பைகள் இல்லாத நிலையை ஏற்படுத்தும்.
தென்னை ஓலை
இயற்கையாகக் கிடைக்கும் தென்னை ஓலைகளைப் பின்னி பைகள், கூடைகள், கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. 100 சதவீதம் மக்கும் தன்மை கொண்ட இது, எளிதில் மண்ணில் உரமாகி விடுவதால் நிலத்துக்குத் தீங்கு விளைவிக்காதது.
சணல் பைகள்
சணலை மூலப் பொருளாகக் கொண்டு பைகள், மிதியடிகள், அலங்காரப் பொருள்கள், ஆடைகள், பர்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. தாம்பூலப் பைகள், புத்தகப் பைகள், கைப் பை போன்றவையும் சணல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்கும் தன்மை கொண்ட சணல் மூலம் மேலும் பல்வேறு கலைப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.
ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட பல இடங்களிலும் சணல் பைகளில் பொருள்களை வைத்துக் கொடுப்பது அதிகரித்து வருகிறது. சணல் பைகள் நீண்ட
காலம் பயன்படுத்தக்கூடிய உறுதி கொண்டவை. சுற்றுச்சூழலையும் காக்கும் தன்மையுடையவை.
வாழை நார் பைகள்
வாழை மரத்தின் தண்டுகளில் இருந்து பிரிக்கப்படும் இயற்கை நார்களைக் கொண்டு கை
வினைப் பொருள்கள், நவீன கைப்பைகள், அலங்காரப் பைகள், பர்ஸ்கள், சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உறுதியானவை. மக்கும் தன்மை கொண்டவை. ஈரப்பதம் பட்டால் பூஞ்சை பிடிக்க வாய்ப்புள்ளதால் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பனை ஓலை பைகள்
பனை ஓலைகளைச் சேகரித்து, பதப்படுத்தி, நேர்த்தியாக நெய்து நீடித்த திறன் கொண்ட பைகள், கைவினைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவை பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.
மூங்கில் பைகள்
மூங்கில் குச்சிகளாலோ அல்லது மூங்கில் இழைகளாலோ செய்யப்படுபவை. இயற்கையாகவே அதிக உறுதியும், நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்ட இவை விரைவில் மக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.