கலைகளில் சிறந்த கலை
'கற்பது எதுவோ அது கலை. அது எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும்.
தமிழானவன்
'கற்பது எதுவோ அது கலை. அது எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும். 64 ஆய கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையை கைப் போர் என்றும் சொல்லலாம். வீணை, பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிலம்பத்துக்கு இல்லை.
கடந்த 35 ஆண்டுகளாக இந்தக் கலையின் மீதான ஈர்ப்பு, இந்தக் கலையை உயிராக நேசிப்பதால் தொடர்ந்து இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறேன். பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பயிற்சி அளித்துள்ளேன்' என்கிறார் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள சிலம்பக் கலைஞர் பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த ஐம்பத்து மூன்று வயதான கு.பழனிவேல்.
Advertisement
'உடலினை உறுதி செய்' என்று கூறிய மகாகவி பாரதியாரின் வார்த்தைகளைச் செயல்படுத்தி வரும் பழனிவேலுடன் பேசியபோது:
'சேரர்கள் சிலம்பக் கலையில் அடிமுறையை வகுத்தனர். இதுவே கேரளத்திலும், கேரளத்தையொட்டியுள்ள தமிழகப் பகுதியிலும் புழக்கத்தில் இருக்கிறது. சோழர்கள் சிலம்பக் கலையில் குத்து வரிசை முறையை வளர்த்தனர். இதுதான் சிலம்பக் கலையில் முக்கியமானது என்பதோடு, நுணுக்கமானதும்கூட! இதில் தேறியவர்களை வெல்வது கடினம். நிபுணத்துவம் பெறுவது கடினமானதும்கூட.
இந்தக் குத்து வரிசையில் எதிரியைத் தாக்குவது, தற்காப்பு ஆகிய இரண்டு முறைகளும் அடக்கம். தஞ்சாவூரில் இந்தக் கலை இருந்தது. இப்போதும் ஒரு சில இடங்களில் இருக்கிறது. மதுரையை ஆட்சி செய்த பாண்டியர்கள் சிலம்பக் கலையில் தேறியவர்களைத் தரைப்படையில் சேர்த்துக் கொண்டனர்.
ஆங்கிலேயர்கள் மூவேந்தர்களின் வலிமையை ஆய்வு செய்தபோது, சிலம்பக் கலை வீரர்களைத் தங்கள் படையில் சேர்த்துள்ளதை அறிந்துதான் இந்தக் கலையைத் தடை செய்தனர். அதனால் பல்வேறு இடங்களில் இருந்த கூடாரங்கள் மூடப்பட்டன.
ஒருசில குருமார்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பெயர்ந்தனர். அப்படி இடம் பெயர்ந்தவர்களில் சுமார் 20 பேர் புதுச்சேரிக்கு வந்துவிட்டனர். பிரெஞ்சியர்கள் ஆட்சி நடந்ததால் இங்கு வந்து தஞ்சம் புகுந்தனர். அந்த குருமார்களிடம் கற்றுக் கொண்டவர்களிடம்தான் நானும் சிலம்பம் கற்றேன்.
வீழ்ச்சி அடைந்திருந்த இந்தக் கலை இப்போது வளர்ந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இக்கலையில் சேர்க்கின்றனர். படித்தால் மட்டும் போதாது. இதுபோன்ற தற்காப்புக் கலையையும் மாணவர்கள் கற்க வேண்டும்.
சில தனியார் பள்ளிகளில் இதைக் கற்றுக் கொடுக்கின்றனர். அரசுப் பள்ளிகளிலும் இதைக் கற்றுக் கொடுக்கவேண்டும். புதுச்சேரியில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்திலும் இதைக் கற்பிக்க வேண்டும்.
ஆதிகாலத்தில் கலை. இப்போது விளையாட்டு. கைச் சிலம்பு என்றும் ஒரு கலை இருக்கிறது. அதாவது ஒரு சில விழாக்களில் கையில் சிலம்பு என்ற அணிகலனை அணிந்து கொண்டு உடல் அசைவுகளைக் கொண்டு ஆடும் ஆட்டம். சிலம்பக் கலையில் பல முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. குத்துவரிசை, பிடிமுறை, சுருள் விளையாட்டு, மான்கொம்பு விளையாட்டு, சிலம்பம் சுற்றுதல், அடிமுறை முக்கியமானவை.
இதில் முறையாகப் பயிற்சி பெறவேண்டும். இதைத் தவிர திசை 4, கோணம் 8, வசம் 16 என்று சொல்வார்கள். அதாவது தற்காத்துக் கொண்டு 4 திசைகளில் இருந்தும், எண் திசை கோணத்தில் இருந்தும், 16 அசைவுகளில் இருந்தும் வரும் எதிரிகளைத் தாக்குவதுதான் சிலம்பத்தின் அம்சம்.
வர்மக் கலை
உடல் உரம் பெற வேண்டுமென்றால் இந்தக் கலையைக் கற்கவேண்டும். இந்தக் கலையை மர்மக் கலை என்றும் குறிப்பிடுவார்கள். அதாவது, மர்மமான முறையில் எதிரிகளைத் தாக்குவது, மற்றொன்று வர்மக் கலை. இது மருத்துவம் சார்ந்தது. தாக்கும்போது உடலில் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும். அதைக் குணப்படுத்துவதுதான் வர்மக் கலை. சிலம்பக் கலையில் இருந்து உருவானதுதான் வர்மக் கலை.
இப்போது இதைத் தனியாக மருத்துவமாக வளர்த்துள்ளனர். எனக்கு ஓரளவுக்குதான் வர்மம் தெரியும். ஆனால், மர்மம் அத்துப்படி. மூன்று ஆண்டுகள் சிலம்பக் கலையைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சி. 3 ஆண்டுகள் வீரத்தை வெளிப்படுத்த பயிற்சி. 3 ஆண்டுகள் கற்பித்தல் பயிற்சி. 3 ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி.
சிலம்பக் கலையை பூரணாங்குப்பம் கே.ராஜாராம், ஜி.சிலம்பு சேகர், வி.தணிகாசலம், கீழ்மாம்பட்டு கே.சிதம்பரம் உள்ளிட்டோர் எனக்குச் சொல்லிக் கொடுத்தனர்.
சிலம்பக் கலையில் முதலில் சலாம் போடவேண்டும். சலாம் என்றால் வணக்கம் என்று பொருள். இந்தக் கலையை மூவேந்தர்கள் மட்டுமல்லாது, பல்லவர்களும் வளர்த்துள்ளனர். ஒவ்வொரு அரசர்கள் காலத்திலும் இந்தக் கலையில் பயன்படுத்திய சொற்களும் கலந்துள்ளன. சிலம்பக் கலையில் ஓம் கட்டு, சக்தி கட்டு, சக்தியும் சிவனும் தன்னைச் சுத்திக் கட்டு என்பதுதான் மூலமந்திரம்.
2004 -ஆம் ஆண்டு நேரு யுவகேந்திராவின் இளைஞர் விருது, 2012 -ஆம் ஆண்டின் புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது, 2023- ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து சங்கீத் நாடக அகாதெமியின் புரஸ்கார் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன்'' என்கிறார் பழனிவேல்.