முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சமூக சேவையுடன் இணைந்த மனித நேயமும் அரங்கேற்றமும்!

'எனக்கு நீண்ட நாள்களாக ஓர் எண்ணம் உண்டு. அது முக்கியமான, மகிழ்ச்சியான தருணங்களை உதவி தேவைப்படுவோரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

Updated On : 14 ஜூன் 2026, 4:03 am IST
பகிர்:

பொ.ஜெயச்சந்திரன்

'எனக்கு நீண்ட நாள்களாக ஓர் எண்ணம் உண்டு. அது முக்கியமான, மகிழ்ச்சியான தருணங்களை உதவி தேவைப்படுவோரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அந்த எண்ணமே எங்களுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்தை சமூக சேவையுடன் இணைக்க வழிவகுக்கிறது' என்கிறார், சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இயங்கும் நடராஜா நாட்டியப்பள்ளியின் நிறுவனர், நடன ஆசிரியர், நட்டுவாங்கக் கலைஞர் லாவண்யா செந்தில்வேல்.

நடனப் பள்ளியை நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதே நேரத்தில் அதனை சமூக நலப் பணிகளுக்கான ஒரு தளமாக மாற்றுவது மிகவும் உயர்ந்த சிந்தனையாகும். பரதக் கலைஞரின் வெற்றி அவர் பெறும் விருதுகளில் மட்டுமல்ல; அவர் சமூகத்துக்கு வழங்கும் பங்களிப்பிலும் இருக்கிறது. கலை மனிதர்களை இணைக்கிறது. சேவை மனிதர்களை உயர்த்துகிறது. முதியோர் இல்லங்களுக்கு உதவுவது, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நடனக் கல்வி அளித்தல் போன்ற பல்வேறு சேவைகளின் மூலம் சமூகத்தில் அழியாத தடத்தைப் பதித்து வருகிறார். அவரிடம் பேசியபோது:

Advertisement

Advertisement

'ஒரு கலைஞரின் வாழ்க்கையில் சில தருணங்களை என்றும் மறக்க முடியாது. அதில் பரத நாட்டிய அரங்கேற்றமும் ஒன்று. பல ஆண்டுகாலப் பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, கனவுகளின் நிறைவேற்றமாக அமையும் அந்த மேடை, ஒவ்வொரு நடனக் கலைஞரின் வாழ்க்கையிலும் ஓர் அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

ஒருகட்டத்தில், முதியோர் இல்லங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன். வாழ்நாள் முழுவதும் தங்கள் குடும்பத்துக்காக உழைத்த பலர், வயதான காலத்தில் தனிமையில் வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். அன்பும், ஆதரவும் தேவைப்படும் அந்நேரத்தில் அவர்களுடன் நின்று சிறு உதவி செய்வது நமது கடமை என்ற உணர்வு மனதில் ஆழமாகப் பதிந்தது.

அதன் அடிப்படையில், என் நடனப் பள்ளி சார்பில் நடைபெறும் பரத நாட்டிய அரங்கேற்றத்தை முன்னிட்டு முதியோர் இல்லங்களில் வசிக்கும் பெரியவர்கள், ஏழைப் பெண்கள் ஆகியோருக்கு புதிய ஆடைகள் வாங்கிக் கொடுக்க முடிவு செய்தோம். இந்த முயற்சி வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆடையும் வாங்கும்போது, அது ஒரு பொருள் மட்டுமல்ல; அது அன்பின் அடையாளமும், அரவணைப்பும் என்ற உணர்வு மனதில் ஏற்படுகிறது.

சில அரசுப்பள்ளிக்குச் சென்று இலவசமாக வகுப்பு எடுத்தல், ஏழை மாணவர்களுக்கு உதவுவது, அவர்களுக்கு இலவசமாக பரதக் கலையைக் கற்றுக் கொடுப்பது... இது போன்றவைகளையும் செய்து வருகிறேன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன், ஓர் ஆசிரமத்துக்குச் சென்று நாள்தோறும் இலவசமாக நடன வகுப்புகள் எடுத்தேன்.

நமது பாரம்பரிய கலையை வளர்க்க வேண்டும், அவற்றை வருங்கால தலைமுறையினர் போற்ற வேண்டும். என்னிடம் கற்ற சில மாணவியர் மாநில அளவிலான பரதம், நட்டுவாங்கம் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அது போன்ற மாணவியரை முக்கியமான விழா நாள்களில் கெளரவிக்கிறேன்.

நான் அறுபதுக்கும் மேற்பட்ட விருதுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளேன். சென்னையில் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் எனது மாணவியர் ர.தனிஷா, ஸ்ரீமதி, உ.அ.ஹரிணி, சு.அருணா ஹாசினி, ச.அக்ஷயா ஆகியோர் நடன அரங்கேற்றத்தை நிகழ்த்துகின்றனர்.

எந்த ஒரு சமூகப் பணியையும், விளம்பரத்துக்காக அல்லாமல் உண்மையான மனிதநேய உணர்வோடு செய்து வரவேண்டும் என்பது எனது எண்ணமாகும்' என்கிறார் லாவண்யா செந்தில்வேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.