பண்பாடு வளர பாடுபடுகிறோம்...
கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.
'கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது. மொழிச் சிறுபான்மையினருக்கு அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 5% இட ஒதுக்கீட்டை சங்கம் பெற்றுத் தந்துள்ளது.
திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு, வயநாடு, கொல்லம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பொங்கல் விழாவுக்கு உள்ளூர் விடுமுறையை கேரள அரசு அறிவித்து வருகிறது. மலையாள மக்களுடன் சகோதர உறவைப் பேணி, நல்
லிணக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம்'' என்கின்றனர் சங்கத் தலைவர் மு.முத்துராமன், பொதுச் செயலாளர் வீராணம் சு.முருகன், முன்னாள் தலைவர் மா.நயினார்.
Advertisement
கடவுளின் தேசமான கேரளம் சேர மன்னர்களின் ஆட்சிப் பகுதியாக விளங்கியது. தனது கடற்படையால் சேர மன்னனை வென்ற காந்தளூர் சாலை திருவனந்தபுரத்தில் இன்றும் வரலாறாக உள்ளது. இதன் வெற்றிச் சின்னம் தஞ்சாவூர் பெரிய கோயிலில் கேரளாந்தகன் வாயிலாக உள்ளது. மொழிவாரி மாநிலப் பிரிவில், சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த நிலப்பகுதி கேரளம் என்றாலும், தமிழர்கள் அங்குள்ள சில மாவட்டங்களில் இன்றும் பெரும்பான்மை சமூகமாக விளங்குகின்றனர்.
நாட்டில் உள்ள பழைமையான தமிழ்ச் சங்கங்களில் ஒன்றான திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கமானது அறுபது ஆண்டுகளைக் கடந்து, சிறந்ததொரு பணியை ஆற்றிவருகிறது. இதன் பணிகள் குறித்து மு.முத்துராமன், வீராணம் சு.முருகன், மா. நயினார் ஆகியோரிடம் பேசியபோது:
'திருவனந்தபுரத்தில் 1960 -ஆம் ஆண்டில் செந்திட்டை, சாலைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் அன்பர்கள் ஒன்றுகூடி பகுத்தறிவு மன்றத்தைத் தொடங்கினர். சில மாதங்களுக்குப் பின்பு அது இளைஞர் முன்னேற்றப் படிப்பகமாகியது. 1963 பிப்ரவரி 13-இல் 'திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்' என்ற அமைப்பாக அது உருவாகி, 1970-இல் பதிவு செய்யப்பட்டது.
தமிழர்களை ஒன்றிணைத்தல், கல்வி, கலை, பண்பாடு வளரப் பாடுபடுதல், மொழிப் பற்றை வளர்த்தல், கற்பித்தல், நூல் நிலையங்களை அமைத்தல், இலக்கிய பண்பாட்டுக் கழகமாக விளங்கச் செய்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
கேரளத்தில் பாலக்காடு, கொழிஞ்சாம்பாறை, புனலூர், எர்ணாகுளம், கொல்லம், சங்கனாச்சேரி உள்ளிட்ட 12 இடங்களில் தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டாலும், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் சிறப்புடையது. தற்போது அதில் ஆயுள் உறுப்பினர்களாக 1375 பேரும், ஆண்டு உறுப்பினர்களாக 980 பேரும் உள்ளனர். பொதுக்குழுவில் தேர்தல் வாயிலாக இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். மகளிரணியும், கேரள அரசு அங்கீகாரம் பெற்ற நூலகக் குழுவும் துணை அமைப்புகளாக அங்கம் வகிக்கின்றன.
கட்டட ஒப்பந்ததாரர் பி. ரத்தினசாமி தானமாக வழங்கிய 15 சென்ட் நிலத்தில் ஒரு பகுதியில் கட்டப்பட்ட கட்டடத்தை 1982- இல் நாவலர் இரா.நெடுஞ்செழியன் திறந்து வைத்தார். 1987-இல் எஸ். சந்திரன் நிதி உதவியால் முதல் தளம் நூலக அரங்கமாக விரிவாக்கம் செய்யப்பட, அதை அன்றைய கேரள ஆளுநர் பா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
தளவாடங்களை பி. சிதம்பரம் வழங்கினார். சங்கத்தின் பின்புறம் 6 சென்ட் நிலத்தை பி. ஆர். எஸ். மகன் ஆர். முருகன் வழங்க, பேராசிரியர் விநாயகப் பெருமாள், மு.முத்துராமன், இராமையா, வா. பத்மநாபன் உள்ளிட்டோரின் நன்கொடையால் சங்க கட்டடம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மிழ்ச் சங்கப் பணிகள்
கேரளப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம், மத்திய சாகித்திய அகாதெமி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கருத்தரங்குகள், மாத கதைகள், கவியரங்கை நடத்தி வருகிறோம். எழுத்தாளர் நீல. பத்மநாபன் அறக்கட்டளை வாயிலாக, அவரது பிறந்த நாளான
ஏப்ரல் 26-இல் சிறந்த கவிதைக்கு நீலபத்மம் விருதும், சிறந்த கதைக்கு தலைமுறைகள் விருதும் வழங்குகிறோம். இந்திய விண்வெளி ஆய்வாளர் வீராணம் சு.முருகன் பெயரில் கதை, கவிதைக்கான திறனாய்வாளர் விருதுகளும் வழங்குகிறோம். சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள், மொழி உறவுக்கு பாலமாக விளங்குபவர்களுக்கு உள்ளூர் விருதும் வழங்கி வருகிறோம்.
கைவினைப் பொருள்கள் செய்தல், உணவு தயாரிக்கும் முறைகள், வீட்டுத் தோட்டம் அமைத்தல், திருக்குறள் வகுப்பு, உடல் நலம் பேணுதல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 'முத்ரயம்' எனப்படும் மூன்று அறிஞர்களில் ஒருவரான மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவு விருது வழங்கும் விழா தமிழ் - மலையாள நல்லுறவை வளர்க்கும் விதமாக நடைபெறுகிறது. 'அனைத்து கேரள தமிழ்ப் பேரவை' என்ற அமைப்பின் வாயிலாக, கேரளத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறோம்.
பொங்கல் விழா, பாரதியார், பாரதிதாசன் பாடல் போட்டி, திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்
படுகின்றன. தமிழிசை விழா, ஓணம் திருவிழாவை அடுத்து வரும் நாள்களில் கச்சேரிகள், நாடகங்கள், பட்டிமன்றங்கள் என ஐந்து நாள்கள் வரை நடத்தப்படுகின்றன. சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினர் பங்கேற்கும் வகையில், பெளர்ணமியன்று சிறப்பு நிகழ்ச்சிகளும், நிலா விருந்தும் நடத்தப்படுகின்றன.
மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுகதை அரங்கேற்றமும், கடைசி ஞாயிறுக்கிழமைகளில் கவிதைகள் அரங்கேற்றமும் நடைபெறுகிறது. நூல் வெளியீட்டு விழாக்களை எங்கள் சங்கம் தொடர்ந்து செய்து வருகிறது.
'கேரளத்தமிழ்' மாத இதழ், சங்கத்தின் செய்தி இலக்கிய மாத இதழாக கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கும், சாலை அரசு தமிழ் உயர்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நிதியுதவி, பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் அளித்துள்ளோம். சங்க நூலகத்தில் உள்ள 25 ஆயிரம் நூல்களை எண்ம மயமாக்கி இருக்கிறோம்.
சங்கத்துக்கு 2015- ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் 'தமிழ்த்தாய்' விருது, 2024-இல் சென்னை வளர்ச்சிக் கழகமும் பன்னாட்டு தமிழ் வளர்ச்சி இயக்கமும் இணைந்து 'வளர் தமிழ் மாமணி' விருது, எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தின் 'தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது' உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்துள்ளன.
கேரளத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழர்கள்
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, எஸ்.வையாபுரி பிள்ளை, கலைமாமணி ஆ. மாதவன், ஜெயமோகன், சாகித்ய அகாதெமி விருதாளர் நீல.பத்மநாபன், முனைவர் மா. நயினார், அறிவியல் தமிழ் எழுத்தாளர் நெல்லை சு.முத்து, விஞ்ஞானிகள் முனைவர் ஏ.இ.முத்து
நாயகம், பத்ம பூஷண் நம்பி நாராயணன், முனைவர் கே.சிவன், முனைவர் வி. நாராயணன் உள்ளிட்டோர் கேரளத்துக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழர்கள் ஆவர்.
தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை
கேரள பல்கலைக்கழகத்தில் 'இளங்கோவடிகள் இருக்கை'யை உருவாக்க ரூ.2 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு அளிக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. முழுத் தொகையையும் அளித்தால் மட்டுமே எங்களால் இருக்கையை உருவாக்க முடியும். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் துறையில் அண்டை மாநில தமிழர்களையும் இணைக்க வேண்டும்'' என்றனர் மு.முத்துராமன், வீராணம் சு.முருகன், மா. நயினார்.