நூற்றாண்டு கண்ட தமிழ்ப் பள்ளி
தமிழ், மலையாள மொழிகளுக்கு இருந்த ஆதித்தொடர்பை சிதையாமல் பாதுகாக்கும் அரணாக, கேரளத்துக்கு உள்பட்ட திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தமிழ் ஆரம்பப் பாடசாலை விளங்குகிறது.
பொ.ஜெயச்சந்திரன்
தமிழ், மலையாள மொழிகளுக்கு இருந்த ஆதித்தொடர்பை சிதையாமல் பாதுகாக்கும் அரணாக, கேரளத்துக்கு உள்பட்ட திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தமிழ் ஆரம்பப் பாடசாலை விளங்குகிறது. அதன் நூற்றாண்டு விழாவில் அங்கு வசிக்கும் தமிழர்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். பல வெற்றியாளர்களை உருவாக்கிய இந்தப் பள்ளி குறித்து எழுத்தாளர் கே.ஜெயலட்சுமியிடம் பேசியபோது:
'திருவனந்தபுரம் மாநகரில் 1920-களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். அப்போது தமிழ்ப் பள்ளிகள் இல்லாததால், வேறு வழியின்றி மலையாளப் பள்ளிகளில் கல்விப் பயில வேண்டிய நிலைக்கு மாணவர்கள் ஆளாயினர்.
Advertisement
தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் அமைய வேண்டும் என்று முழக்கமிட்டவர் செந்தமிழ்ச் செல்வர் சு.க.கணபதி பிள்ளை. தொடக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு வகுப்புகளைத் தொடங்கி, தேவையைக் கருத்தில் கொண்டு படிப்படியாக எண்ணிக்கையை உயர்த்துவதே கொள்கையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1920-ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் திவானாக விளங்கியவர் பகதூர் டி.ராகவய்யா. அவருடைய நிர்வாகக் காலத்தில், திருவிதாங்கூர் சட்டப் பேரவையின் தமிழர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் எதிரொலிக்கும் கம்பீரமான குரலாக அவர் திகழ்ந்தார்.
மகாராணி ஸ்ரீசேது லட்சுமி பாய், சட்டப் பேரவையில் முன்வைத்த ஒவ்வொரு கோரிக்கையும் இன்று தமிழர்கள் கல்வித் துறையில் பெற்றுள்ள முன்னேற்றத்துக்கு அச்சாணியாக இருந்தது.
அவர் வெறும் மக்கள் பிரதிநிதி மட்டுமல்லாது, மொழியின் இருப்புக்காகத் தன்னைத்தானே அர்ப்பணித்துகொண்ட 'தமிழ்த் தொண்டர்'. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட வணிக வகுப்பைப் பிரதி
நிதிப்படுத்தினாலும், அவர் நெஞ்சில் சுமந்தது அந்த நிலப் பரப்பு முழுமைக்குமான தமிழ் உணர்வைத்தான். மலையாளத்துக்கு வழங்கப்படும் இணையான அங்கீகாரத்தைத் தமிழுக்கும் அரசு வழங்க வேண்டும் என்பதையே அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
அவர் எடுத்த தளராத முயற்சியால், 1925-ஆம் ஆண்டில் 'செந்தமிழ்ப் பாடசாலை' என்ற பெயரில் தமிழ்ப் பள்ளியானது வாடகைக் கட்டடத்தில் உதயமானது. தனது சொந்த நிலத்தையே பள்ளிக்கு வழங்கிப் பேருதவியை எம்.எஸ்.ரெட்டியார் புரிந்ததோடு, அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தினார். மேலும், அவர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அந்தப் பள்ளி ஒரு கல்விச் சோலையாக மாறவும் அச்சாணியாகத் திகழ்ந்தார்.
1931-ஆம் ஆண்டு மார்ச் 12-இல் திவான் சுப்பிரமணிய ஐயர் ஆற்றிய உரை, கணபதி பிள்ளை மீதும் அவரது தமிழ்ப் பணியின் மீதும் அரசு கொண்டிருந்த மதிப்புக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்தப் பாடசாலை இன்று விருட்சமாக வளர்ந்து அரசு தமிழ் ஆரம்பப் பாடசாலையாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, ஆலவிருட்சமாக, நூற்றாண்டு விழாவைக் கண்டுள்ளது'' என்கிறார் ஜெயலட்சுமி.
தலைமை ஆசிரியர் ல.ஜீலியட்
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் தமிழுக்கான தனியார் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, அரசு உதவியுடன் கேரளத்தின் முதல் அரசு ஆரம்பப் பள்ளியாக அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது. தற்போது அரசு கட்டடம் கட்டிக் கொடுத்ததோடு, 4 பிரிவுகளுக்கும் மேற்பட்டு செயல்பட்டு வந்தது.
1982-இல் இருந்து ஒவ்வொரு பிரிவாகக் குறைந்து, தற்போது ஒரே பிரிவாக நடக்கின்றது. அரசு கைவிடாமல், நிலைநிறுத்தி, நவீன வசதிகளுடன் தமிழ்ப் பள்ளியைப் பேணி பாதுகாத்து வருகிறது. இங்கு பயின்ற பலர் மாநில, மத்திய அரசுகள், தனியார் நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவருகின்றனர்.