முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் துணைத் தலைவருமான பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி நம்மை விட்டுப் பிரிந்தார்.

Updated On : 17 மே 2026, 5:30 pm IST
பகிர்:

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் துணைத் தலைவருமான பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி கடந்த புதன்கிழமை (மே 13) நம்மை விட்டுப் பிரிந்தார். அவருக்கு இறுதி மரியாதை செலுத்தவோ, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவோ இயலாமல் போனது எனது துரதிருஷ்டம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறை மற்றும் இலக்கியத் துறைகளின் தலைவராகவும், பதிப்புத் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியவர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி. அவரது திருவள்ளுவர் நடையியல், பாரதி நடையியல், திருக்குறள் பரிமேலழகர் உரை நுன்பொருள் மாலை, திருக்குறள் சில அரிய பதிப்புகள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்கள் ஒவ்வொன்றும் தமிழ் படிக்கும் மாணவர்களுக்குக் கலங்கரை விளக்கங்கள். சுவடியியல், அகராதியியல், மொழிபெயர்ப்பு இயல் உள்ளிட்ட துறைகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

'தினமணி' தமிழ்த் திருவிழா நடத்தியபோது அதில் ஓர் அரங்கைத் தலைமை வகித்து நடத்தியதுடன், அதன் வெற்றிக்கு அவர் அளித்த ஆலோசனைகளும், பங்களிப்பும் மறக்கக் கூடியவை அல்ல. உலகெங்கும் உள்ள திருக்குறள் பேரவைகள், திருவள்ளுவர் கழகங்களை ஒருங்கிணைத்துப் பெரிய அளவில் ஒரு திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என்று நான் எழுதியபோது, அடுத்த நாளே என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ''எப்போது நடத்துவோம்?'' என்று உற்சாகமளித்த அந்தப் பெருந்தகையின் தமிழ்ப் பற்றையும், உற்சாகத்தையும் மறக்க முடியாது.

Advertisement

Advertisement

சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள உ.வே.சாமிநாதையர் நூலகத்தில், 'தமிழ்த் தாத்தா'வின் அரிய தமிழ் நூல்கள் மற்றும் அவர் சேகரித்த ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. உ.வே.சாமிநாதையரின் மறைவைத் தொடர்ந்து 1943-ஆம் ஆண்டு அடையாறில் உள்ள பிரம்ம

ஞான சபை வளாகத்தில் அந்த நூலகம் நிறுவப்பட்டது. பிறகு பெசன்ட் நகரிலுள்ள கலாúக்ஷத்திர வளாகத்துக்கு மாற்றப்பட்ட அந்த நூலகம் புதிய கட்டடம் எழுப்பப்பட்டு 1967-இல் திறக்கப்பட்டது.

பெசன்ட் நகர் அருண்டேல் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அந்த நூலகத்தில் 1,832 நூல்களும், 939 அரிய தமிழ் சுவடிகளும், உ.வே.சா. பிற தமிழ் அறிஞர்களுக்குத் தமது கைப்பட எழுதிய 3,000-க்கும் அதிகமான கடிதங்களும், அவரின் நாள்குறிப்புகளும் பாதுகாக்கப்படுகின்றன. அந்த நூலகம் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்த நேரத்தில், தற்செயலாக அதைப் பார்க்கச் சென்ற கல்வெட்டறிஞரும், 'தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், தன்னை உ.வே.சா.வின் மானசீக சீடராகக் கருதியவருமான ஐராவதம் மகாதேவன் அதிர்ச்சியடைந்தார்.

அவரது முயற்சியாலும் முனைப்பாலும் உ.வே.சாமிநாதையர் நூலகம் புதுப்பொலிவு பெற்றது. 1997-இல் 'தமிழ்த் தாத்தா'வுக்கு அங்கே வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அந்த நூலகத்தின் தலைவராக வி.ஐ.டி. வேந்தர் கோ. விசுவநாதனும், துணைத் தலைவராகப் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தியும் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பல முக்கியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஓலைச் சுவடிகள் பதிப்பிக்கப்பட்டன.

இப்போது பேராசிரியர் இ.சுந்தர மூர்த்தியின் மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்க்கிறது. உ.வே.சாமிநாதையர் நூலகத்தின் துணைத் தலைவர், பதிப்புத் துறை தலைவர் பதவிகளுக்கு உ.வே.சா. மீது மதிப்பும், மரியாதையும், தமிழ்ப் பற்றும் உள்ள இன்னொருவர் பொறுப்பேற்றால்தான் அந்த அரிய பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படும். பேராசிரியர் விட்டுச் சென்றிருக்கும் வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்?

தமிழர்களின் மிகப் பெரிய குறை, நாம் எதையும் ஆவணப்படுத்தாமல் இருந்துவிட்டதுதான். தொன்மையான நமது கோயில்களும், அவற்றில் காணப்படும் கல்வெட்டுகளும், இலக்கியங்களும், அந்த இலக்கியங்களைப் பல தலைமுறைகளாகக் கடத்திவந்த ஓலைச் சுவடிகளும்தான் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.சொல்லிக் கொள்ளும்படியான எந்தவித வரலாற்று ஆவணங்களும் நம்மிடையே இல்லை.

சங்க இலக்கியங்கள் கிடைக்கப் பெறாமல் போனால் நாம் நமது தொன்மையை நிரூபிக்க இயலாமல்போயிருக்கும். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மட்டுமல்லாமல், தமிழ் பேசும் நானிலத்தையாண்ட மன்னர்கள் மேலும் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மூவேந்தர்கள்போல அல்லாத சிற்றரசர்கள்.

ஜமீன்தார், பாளையக்காரர்கள் என்று பின்னாளில் தோன்றியவர்களைப்போல, சீறூர்த் தலைவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

மு. ராகவையங்கார், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி, இரா. பூங்குன்றன் உள்ளிட்ட வரலாற்று அறிஞர்கள் அவர்கள் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களது அடியொற்றித் தனது ஆய்வுப் பயணத்தைத் தொடர்கிறார் வே. பார்த்திபன். மத்திய அரசு ஆயுதத் தொழிற்சாலையில் தொழில்நுட்பப் பணியாளராகப் பணியாற்றும் இந்த வரலாற்று ஆய்வாளர் 'ஆற்றுப்படை' என்கிற வரலாற்றுக் குழுவை நிறுவி இருக்கிறார்.

விமர்சனத்துக்கு வந்திருக்கிறது தமிழ் நிலத்தையாண்ட சிற்றரசர்களின் சிலிர்ப்பூட்டும் வரலாற்றைப் பதிவு செய்யும், 'குறுநிலத் தலைவர்கள்' என்கிற புத்தகம். மூவேந்தர்கள், பல்லவர்களுக்குக் கீழ் தமிழக நிலப்பரப்பை ஆட்சி செய்த சிற்றரசர்கள், வேந்தர்கள், வேளிர்கள், சீறூர் தலைவர்கள் குறித்த அறிமுகத்தைத் தருகிறது இந்த நூல்.

சங்ககாலம் தொடங்கி நாயக்கர்கள் ஆட்சிக் காலம் வரையில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த சிற்றரசர்களின் வரலாற்றை இலக்கிய, கல்வெட்டு ஆய்வுகளின் அடிப்படையில் பதிவு செய்கிறது வே. பார்த்திபனின் புத்தகம். அவர்களது நிர்வாகத் திறன், தியாகங்கள், நிகழ்த்திய போர்கள், கட்டிய கோயில்கள், அவர்கள் அளித்த தானங்கள், அவர்களுக்கு இடையேயான பகை, பந்தம் உள்ளிட்ட அனைத்துமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பண்டைத் தமிழினத்தின் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். அனைத்து நூலகங்களிலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய நூல். யார் இந்த வே. பார்த்திபன்? சந்திக்க வேண்டுமே...

தஞ்சாவூர்

சுந்தர. மகேஸ்வரியின் 'உதறி மடித்த வானம்' கவிதைத் தொகுப்பில் இடம் பெறுகிறது இந்தக் கவிதை-

மெதுமெதுவாய்த்தான்

நகர்கின்றன

ஆனாலும்

பல்லாயிரக்கணக்கான

நூற்றாண்டுகளைத்

தாண்டியிருக்கின்றன

நொடிகள்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments