தனியார் பள்ளிக் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை தேவை: அமைச்சர் ராஜ்மோகன்
தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவித்து, நியாயமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தெரிவித்திருப்பது குறித்து...
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும்(ஏஐ) வீடியோக்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் தணிக்கை கட்டாயம் என பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
கோவை வ.உ.சி பூங்காவில் அரசுப் பொருள்காட்சி திறப்பு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சிங்கப்பெண் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வீடியோக்களில் ஏற்பட்ட பிழைகள் தொழில்நுட்பக் கோளாறு என விளக்கமளித்தார். இனிவரும் காலங்களில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் காணொளிகள், வரைபடங்கள் மற்றும் ஆடியோக்கள் எதுவாக இருந்தாலும், கட்டாயமாகத் தமிழ் வளர்ச்சித் துறையின் முறையான தணிக்கை மற்றும் ஆலோசனைக்குப் பிறகே வெளியிடப்பட வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அனைத்தும் முதல்வரின் ஆலோசனையுடன் விரைவில் வழங்கப்படும். மூத்த தமிழறிஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அரசுப் பேருந்துப் பணியாளர்கள் கூடுதல் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தனியார் பள்ளிகளின் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கான நடைமுறைகள் ஒற்றைச் சாளர முறை மூலம் எளிதாக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் எவ்விதமான லஞ்சமும் கொடுக்கத் தேவையில்லை எனவும் இதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவித்து, நியாயமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
Advertisement
Advertisement
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கட்டணத்தின் பெரும்பகுதியை அரசே செலுத்துவதால், இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தப் பள்ளிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரங்கல்
மன்னார்குடி அருகே நடந்த விபத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அமைச்சர், பள்ளிகளின் சுற்றளவில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தனியார் பள்ளிப் பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தொலைதூர மற்றும் மலைவாழ் மாணவர்களுக்காகச் சிறப்புப் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பாதுகாப்பான கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் இருப்பதை உறுதி செய்த பிறகே நடப்புக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களின் நலன் குறித்துப் பேசிய அவர், ஊடகவியலாளர்களுக்கான அங்கீகார அட்டைகள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி முறைப்படுத்தப்பட்டு வழங்கப்படுவதாகவும், பத்திரிகையாளர்களுக்கான வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இருமொழிக் கொள்கையில் மாற்றம் இல்லை
மாநிலத்தின் இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்த அவர், வீட்டில் உறவுகளுடன் பேசத் தாய்மொழியான தமிழும், உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமும் அவசியம் என்றார். ஆங்கில வழிக் கல்வியை யார் மீதும் திணிக்க மாட்டோம் எனத் தெளிவுபடுத்திய அமைச்சர், தமிழ் மொழிதான் தங்களது மூச்சு என்றும், அரசின் அடிநாதமே 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தத்துவம்தான் என்றும் தெரிவித்தார்.
பொருள்காட்சி திறப்பு விழாவில், பல்வேறு தரப்பைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், இ-பட்டாக்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் ராஜ்மோகன், சம்பத்குமார் ஆகியோர் வழங்கினர்.
பொருட்காட்சி வளாகத்தில் சிறுவன் ஒருவன் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர், எந்தப் பின்னணியில் இருந்து வந்தாலும் அனைவரையும் சமமாக அரவணைக்க வேண்டும் என அதிகாரிகளுக்குக் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Transparency needed in private school fees says minister Rajmohan...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.