வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது. ஐந்து ஆண்டுகளில் ரூ.7.5 கோடிக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டதோடு, உள்கட்டமைப்பு வசதிகள் தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு இணையாக மினுமினுக்கிறது. தற்போது மாணவர் எண்ணிக்கை இரு மடங்காகிவிட்டது. மாணவ - மாணவியர் பள்ளியில் சேர முக்கியப் பிரமுகர்களின் பரிந்துரைக் கடிதங்களோடு முகாமிட்டு, அலைமோதுகின்றனர். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் உள்ள இந்தப் பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 90 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது.
'இதுபோன்ற நிலை எப்படிச் சாத்தியமாயிற்று?' என்று அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.ரவி காசி வெங்கட்ராமனிடம் பேசியபோது:
'1960-களில் மறைமலை அடிகள் அரசு உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு, பின்னர் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது. 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தலைமை ஆசிரியராக நான் பொறுப்பேற்றேன். நான் பொறுப்பேற்ற நேரத்தில், இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவோ, ஆசிரியராகவோ வரவே அச்சப்பட்டனர்.
Advertisement
Advertisement
பள்ளியில் சுற்றுச்சுவர் வசதியோ, வகுப்பறையில் தளவாடப் பொருள்களோ, மின்விசிறிகளோ இல்லை. இதனால் மாணவர்கள் வெளியில்தான் நடமாடிக் கொண்டிருப்பார்கள். ஆசிரியர்களுக்கே கழிவறை வசதி இல்லாத நிலையில், அவர்களே பள்ளிக்கு வெளியே சென்றுவருவார்கள். மாணவர் தேர்ச்சி விழுக்காடும் 40 சதவீதத்துக்குள் இருந்தது. மாணவர் எண்ணிக்கையும் ஐந்நூறுக்கும் குறைவாக இருந்தது.
முதலில் பள்ளியில் கழிவறை பிரச்னையைச் சரிசெய்ய முயற்சிகளை மேற்கொண்டேன். 'காமதேனு சேரிட்டபிள் டிரஸ்ட்' மூலமாக, கழிவறைகள் கட்டப்பட்டன. பின்னர், பெற்றோர் கூட்டத்தை நடத்தி, மாணவர்களை ஒழுக்கத்தோடு பள்ளிக்கு அனுப்புமாறு வலியுறுத்தினேன்.
காதுகளில் கடுக்கண் போட்டு வந்த மாணவர்களை அன்போடு, 'இனி மேல் இப்படி வர வேண்டாம்' என அறிவுறுத்தியபோது, அவர்கள் கேட்டனர். அப்போதுதான் மாணவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் உள்ளவர்கள் என்பதை அறிந்தேன். சக ஆசிரியர்களின் உதவிகளோடு நல்வழிக்குக் கொண்டுவந்தேன். அரட்டை அடிப்பது, பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட மாணவர்களை அன்போடு அறிவுரை கூறி திருத்தினோம். அர்ப்பணிப்பு உணர்வோடு, ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவித்தனர். பலனும் கிடைத்தது. படிப்பின் அருமையை அவர்கள் உணர்ந்தனர்.
ஸ்ரீராம் நிதி நிறுவனங்களின் நிதி இயக்குநர் மணியின் உதவியோடு, சி.எஸ்.ஆர். நிதியில் ரூ.18 லட்சத்தில் பள்ளி வளாகத்தில் முழுவதும் மின்கட்டமைப்பை மாற்றி, வகுப்பறைகளில் மின்விசிறி வசதிகளை ஏற்படுத்தித் தந்தனர். படிப்படியாக அந்த நிறுவனத்தினர் பள்ளியில் தளவாடப் பொருள்கள், சுவர்கள் பழுதுபார்த்தல், ஆழ்துளைக் கிணறுடன் குடிநீர் வசதி, 50 சி.சி.டிவி. காமிராக்கள் என்று ரூ.3 கோடியில் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேம்படுத்தினர்.
பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால், மாணவர்கள் படிக்கவும் தொடங்கினர். இதன்பலனாக, 2021-22-ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளில் மாணவர் தேர்ச்சி சதவீதம் 80 சதவீதமாக உயர்ந்தது.
ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் இளம் கலாம் அறிவியல் மையத்தைத் தொடங்கினர். இங்கு எங்கள் பள்ளி மாணவர்களோடு, அருகாமை கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் அறிவியல் படைப்புகளை அறியும் நோக்கத்தில், இரு ஊழியர்களை நியமித்தனர். தற்போது 20 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த மையத்தைப் பார்வையிட்டதோடு, மெட்ரிக், கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டும் வருகின்றனர்.
ஒலிம்பிஸ் எனும் ஜப்பான் நிறுவனம் சார்பில் ரூ.18 லட்சத்தில் ஆர்.பி.பிளான்ட், ஆழ்துளைக் கிணறு, வகுப்பறைகளில் டைல்ஸ் பதித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலை தொடர்ந்ததால், மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேரக் குவிந்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் 80 மாணவர்கள் வரையில் சேர்ந்தனர். மேசைகள், நாற்காலிகள் இல்லாமல், தரையில் மாணவர்கள் அமர்ந்து படிக்கவும் தாமாகவே முன்வந்தனர். இதையறிந்த 'மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 1' அமைப்பினர் ரூ.2 கோடியில் 8 வகுப்பறைகளைக் கட்டிக்கொடுத்தனர். பின்னர், இவர்களே ரூ.60 லட்சத்தில் 4 வகுப்பறைகளைக் கட்டி வருகின்றனர்.
பள்ளியில் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள், விடுமுறை நாள் வகுப்புகள், மாணவர்களுக்கு வழிகாட்டி உதவிகள் எனப் பல்வேறு சிறப்புகளை தன்னார்வத்தோடு மேற்கொண்டு வருகிறோம். சிறப்பு வகுப்பு
களின்போது, மாணவர்களுக்கு சிற்றுண்டியும், நொறுக்குத் தீனிகளையும் வழங்குகிறோம்.
'ஹுண்டாய் மொபிஸ்' நிறுவனம் சார்பில், ரூ.2 கோடியில் 4 வகுப்பறைகள், கலையரங்கம் கட்டும் பணிகளும் நடைபெறுகின்றன. இவ்வாறாக, 5 ஆண்டுகளில் ரூ.7.5 கோடியில் பள்ளியில் மேம்பாட்டுப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது எங்கள் பள்ளியில் பொதுத்தேர்வுகளில்தேர்ச்சி விழுக்காடு 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. 2020-க்கு முன்னர் மாணவியர் 120 பேர் படித்த நிலை மாறி, இப்போது 500 மாணவியர் படிக்கும் நிலை உருவாகியுள்ளது.
போட்டித் தேர்வுகள், ஜே.இ.இ., நீட் தேர்வுகளில் எங்கள் பள்ளி மாணவர்கள் சிறந்து
விளங்க ஆசிரியர்களோடு இணைந்து வழிகாட்டியும் வருகிறேன். புனித தோமையார்மலை ஒன்றியத்தில் 'வெற்றிப் பள்ளி' என்ற பெயரோடு, எங்கள் பள்ளியில் ஜே.இ.இ., நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைந்துள்ளது. அகரம் பவுண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளைகள் வாயிலாக மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவிகளைச் செய்கிறேன்.
சீரிய முறையிலான கல்விப் பணிக்காக, 2023-இல் நல்லாசிரியர் விருது, 2024-இல் பள்ளிக்கு ரூ.10 லட்சம் மேம்பாட்டு நிதியோடுகூடிய அண்ணா தலைமைத்துவ விருது உள்ளிட்ட அரசு விருதுகளையும், பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளேன்.
பெற்றோர் ஆசிரியர் கழகம், மேலாண்மைக் குழு, முன்னாள் மாணவர்கள் ஆதரவோடு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வோடு, தன்னார்வலர்களால் இந்தப் பள்ளி மேன்மை பெற்றுவருகிறது.
குடும்பத்தினர் ஊக்குவிப்பும் காரணம்
திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள திருக்குறுங்குடியே எனது சொந்த ஊர். நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்த சீதாராமன்- இல்லத்தரசி சாரதா தம்பதிக்கு மகனாகப் பிறந்தேன். பெற்றோர் வழிகாட்டுதலே ஆசிரியராக வேண்டும் என்ற உந்துதலை அளித்தது. திருநெல்வேலி மாவட்டத்திலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்தேன். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றேன். 2002-இல் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட சாயல்குடியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். தாம்பரம் கேந்திர வித்யாலயா பள்ளியில் இசை ஆசிரியராகப் பணியாற்றும் காயத்ரியை மணம் முடித்தவுடன் சென்னைக்கு வந்தேன். நெம்மேலி, செம்மஞ்சேரி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட தேசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். 2020 டிசம்பரில் மறைமலை அடிகள் அரசுப் பள்ளியில் பொறுப்பேற்றேன்.
எனது கல்விப் பணிகளுக்கு மனைவி தாம்பரம் கே.வி. பள்ளி இசை ஆசிரியர் காயத்ரி, பொறியியல் முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் மகன் அனுராக், ஒன்பதாம் வகுப்பு பயிலும் அனுரூப் மற்றும் உறவினர்கள் உந்து சக்தியாக உள்ளனர்'' என்கிறார் ரவி காசி வெங்கட்ராமன்.
-தி.நந்தகுமார்