முகப்பு
வெள்ளிமணி

புதிய ஒளி!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் ஆராதனை வருகிற 31ஆம்

Updated On : 24 ஜனவரி 2013, 12:59 pm IST
பகிர்:

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் ஆராதனை வருகிற 31ஆம் தேதி திருவையாற்றில் நடைபெறுகிறது. அப்போது சங்கீத வித்வான்கள் பங்கேற்று சுவாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த ஆராதனை இசை அஞ்சலி, "சேதுலாலா' என்ற கீர்த்தனம் புல்லாங்குழலில் வாசிக்கப்பட துவங்குகிறது. இதற்குக் காரணம் உண்டு.

ஒருநாள் தியாகராஜர் ஸ்ரீராமபிரானுக்கு பூஜை செய்துகொண்டிருந்தபொழுது இந்தக் கீர்த்தனை பிறந்தது. அதில் ஸ்ரீராமனை குழந்தையாக பாவித்து தன் இரு கைகளாலும் ஆசை தீர ஸ்நானம் செய்வித்தும், பிறகு பட்டாடைகள் உடுத்தி விதவிதமான நகைகளாலும், புஷ்ப மாலைகளினாலும் அலங்கரித்தும், நெற்றியில் திலகமிட்டும், முன்னழகையும்,பின்னழகையும் கண்டுகளித்தும்,  பல தடவைகள் கட்டியணைத்தும், முத்தம் கொடுத்தும் மனதைப் பறிகொடுத்து அடைந்த பேரானந்தத்தைத் தெரிவிக்கிறார்.

Advertisement

Advertisement

இத்தகைய பெருமையால் அந்தக் கீர்த்தனை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆராதனையின்போது பைரவி ராகத்தில் வாசிக்கப்பட்டது. அப்போது முதல் அந்தக் கீர்த்தனை இதே ராகத்தில் புல்லாங்குழலில் வாசிக்கப்படுகிறது. ஸ்ரீதியாக பிரம்மத்தின் கீர்த்தனைகள் கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு புதிய ஒளியை சேர்த்தது மட்டுமில்லாமல் சில அபூர்வ தகவல்களையும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும் தெரிவிக்கின்றன. அவற்றில் சில:

நாதோபாஸனை நல்ல சங்கீதத்தைக் கேட்பது மட்டும் இல்லை. நாதம் ஒரு தெய்வம். அதன் அருளைப் பெற விரோதம்,பொறாமை, உலோபித்தனம், பண ஆசை, புலனடக்கமின்மை ஆகியவற்றை விலக்கி பெற்றோர்களுக்கும், குருவுக்கும் மனப்பூர்வமான தொண்டு செய்யும் தூய வாழ்க்கை வாழ்பவனாக ஒரு உபாஸகன் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.

நாதம் சிவபெருமானின் சரீரம். அவருடைய ஐந்து முகங்களிலிருந்து வெளிப்பட்டவையே சப்தஸ்வரங்கள்.

நாதோபாஸனை மோட்சத்தைக் கொடுக்கும். அதேசமயம் உபாஸகனின் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்யும். மும்மூர்த்திகள் நாதோபாஸனையினால்தான் தம் தொழில்களில் பிரகாசிக்கிறார்கள்.

பக்தி இல்லா சங்கீதம் சன்மார்க்கத்தைக் காட்டாது.

சாந்தமில்லாமல் (திருப்திகொண்ட மன அமைதி) வாழ்க்கையில் சௌக்கியத்தை அடைய முடியாது.

மூர்த்தி பேதம் கூடாது. எல்லா மூர்த்திகளும் பரபிரும்மத்தின் வேறு வேறு உருவங்களே. ஒவ்வொரு மூர்த்தியையும் சமபக்தியுடன் பூஜிக்க வேண்டும் (அதேமாதிரி வாழ்ந்தும் காட்டினார் தியாகராஜ சுவாமிகள்).

சிவனையும், விஷ்ணுவையும் வேறுவேறு தெய்வங்கள் என்று நினைப்பது அறியாமை. ராமனே சிவனும், விஷ்ணுவுமாக இருக்கின்றான். எவ்வாறு எனில் ஓம் நமோ நாராயணாய என்ற விஷ்ணு மந்திரத்தின் ஜீவாட்சரமாகிய "ரா' என்ற எழுத்தும், "நமசிவாய' என்ற சிவமந்திரத்தின் ஜீவாட்சரமாகிய "ம' என்ற எழுத்தும் சேர்ந்தே "ராம' நாமமாயிற்று.  இதை அறிந்த பெரியோர்களை வணங்குகிறேன் என்று தனது "எவரணி' என்று தொடங்கும் கீர்த்தனையில் குறிப்பிடுகிறார்.

ஒரு பாணம், ஒரு சொல், ஒரு மனைவி என்ற நியதியைக் கடைப்பிடித்த ராமன் ஒரு தர்மஸ்வரூபி.

ஸாம, தான,பேத,தண்ட என்ற உபாயங்களில் முதல் மூன்றை உபயோகித்தும் திருந்தாத ராவணனை கடைசியாகத்தான் ஸ்ரீராமன் வதம் செய்தார்.

உலகில் அவரவர்கள் துறையில் சிறந்து விளங்கும் மகானுபாவர்களை மனப்பூர்வமாக வணங்குகிறேன் என்று கூறி தன் பணிவையும், அடக்கத்தையும் காட்டுகிறார் (எந்தரோ மகானுபாவுலு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.