முகப்பு
வெள்ளிமணி

வாழ்வில் ஜெயம் தரும் ஜெபமாலை!

கிறித்துவர்களின் பக்தி முயற்சிகளில் தனித்துவம் வாய்ந்தது ஜெபமாலை செபிப்பது.

Updated On : 25 செப்டம்பர் 2015, 4:33 pm IST
பகிர்:

கிறித்துவர்களின் பக்தி முயற்சிகளில் தனித்துவம் வாய்ந்தது ஜெபமாலை செபிப்பது. இன்பமும் துன்பமும் நிறைந்த மனித வாழ்வில் உருவாகும் பிரச்னைகளை இனம் காண்பது பெரும் சுமையாகவே இருக்கிறது. பெயர் வைக்கப்படாத நோய்களும் பொருளாதார இன்னல்களும் நம்மைச் சுக்குநூறாக்கிவிடும்போது, திருச் ஜெபமாலையை கையில் எடுத்தவர்களின் வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக மாறுவதை வரலாறுகளில் நாம் பார்க்க முடிகிறது.

ஜப்பான் நாட்டில் நடந்த ஓர் உண்மை நிகழ்வுதான் இது. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 8.45 மணிக்கு உலகமே அதிர்ந்து போய் நின்றது. அன்றுதான் சக்திவாய்ந்த அணுகுண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்டது. நகரமே தரைமட்டமாகி பல லட்சம் மக்கள் மடிந்து போன அச்சமயம், நகரின் மையத்தில் இருந்த விண்ணேற்பு ஆலயமும் அதனுள் இருந்தவர்களும் மட்டும் பாதுகாப்பாக உயிர் பிழைத்தனர். "குண்டு வெடித்த சமயம் நாங்கள் ஜெபமாலை செபித்துக் கொண்டிருந்தோம்' என்று சான்று பகர்ந்தார்கள் அங்கிருந்தவர்கள்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் சுவாமிநாதர் என்ற புனிதருக்கு அன்னை மரியாள் காட்சியளித்து ஜெபமாலை ஜெபிப்பதே போராட்டங்களில் வெற்றி பெற வழி வகுக்கும் என்று வலியுறுத்தினார். கி.பி. 1858 இல் தேவதாய் புனித பெர்நதெத் என்னும் சிறுமிக்கு பிரான்ஸ் தேசத்திலுள்ள ஒரு சிற்றூரில் காட்சியளித்தபோது கையில் ஜெபமாலையோடு தோன்றி இறையாசீரும் மீட்பும் பெறுவதற்கான சிறந்த வழி அந்த ஜெபமாலையை செபிப்பதே என்று கூறினார்கள்.

Advertisement

Advertisement

கி.பி. 1572 இல் அக்டோபர் 7 ஆம் நாளில் லெபோந்தோ என்னுமிடத்தில் இருபிரிவினருக்கிடையே போர் மூண்டது. கிறித்துவ மக்களும் போர்வீரர்களும் ஜெபமாலை செபித்து அன்னையிடம் மன்றாடியதன் விளைவாக போரில் வென்றனர்; திருச்சபையை காத்தனர். இதன் காரணமாகவே திருத்தந்தை 13 ஆம் கிரகோரியாரின் அறிக்கைக்கிணங்க அக்டோபர் 7 ஆம் நாளை ஒவ்வோர் ஆண்டும் ஜெபமாலை அன்னையின் விழாவாக கொண்டாடி வருகிறோம். அக்டோபர் மாதம் ஜெபமாலை அன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகும்.

ஜெபமாலையை கையிலேந்திக்கொண்டு கொல்கத்தா நகர வீதிகளில் வலம் வந்து எழைகளுக்கும் அநாதைகளுக்கும் தொழுநோயாளிகளுக்கும் விடிவிளக்காய் திகழ்ந்து மரித்த அன்னை தெரசா ஒருமுறை, நியூயார்க் நகர் நோக்கி விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். கையில் ஜெபமாலையை ஏந்திய வண்ணம் ஜெபித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். அவரை இன்னாரென அறியாத அருகிலிருந்த ஒரு வாலிபன், மற்ற பயணிகளோடு சேர்ந்து அவரைக் கேலி செய்து கொண்டேயிருந்தான்.

சிறிது நேரம் சென்று வேடிக்கை எண்ணத்துடன், ""உங்கள் பெயர் என்ன?'' என்று கேட்டான். ""மதர் தெரசா'' என்று பதில் வந்தது. நடமாடும் புனிதையாகத் திகழ்ந்த அன்னையவர்களைத் தான் கேலி செய்ததை நினைத்து வெட்கமடைந்து மன்னிப்பு வேண்டினான். அன்னையவர்கள் அவனிடம் அன்போடு பேசியதுமல்லாமல் ஒரு ஜெபமாலையையும் தன் நினைவாகக் கொடுத்தார்.

சில ஆண்டுகளுக்குப்பின் அந்த இளைஞனின் மனைவி ஒரு கொடிய வியாதியால் துன்புற்று மரணப் படுக்கையில் இருந்தார். அச்சமயம், அவன் தன் மனைவியின் தலையணைக்கடியில் அந்த ஜெபமாலையை வைத்து ஜேபித்தபோது அவள் அற்புதமாகக் குணமடைந்தாள். நம்பிக்கையோடு அன்னையிடம் ஜெபிப்போம்; குணம் பெறுவோம் வியாதிகளின்று. விடுதலையடைவோம் வாழ்வின் போராட்டங்களினின்று.

- பிலோமினா சத்தியநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.