முகப்பு
வெள்ளிமணி

திரு இருதய வணக்க மாதம்!

மதம் என்பது பாரம் சுமப்பவனுக்கு சுமை தாங்கி போன்றது' என்றார் கார்ல் மார்க்ஸ். எதிர்பாரா நேரத்தில் அழையா விருந்தாளியாக, தவிர்க்க இயலாத நிகழ்வாக நமது வாழ்க்கையில் வருவதுதான் துன்பம்

Updated On : 15 ஜூன் 2018, 12:00 am IST
பகிர்:

மதம் என்பது பாரம் சுமப்பவனுக்கு சுமை தாங்கி போன்றது' என்றார் கார்ல் மார்க்ஸ். எதிர்பாரா நேரத்தில் அழையா விருந்தாளியாக, தவிர்க்க இயலாத நிகழ்வாக நமது வாழ்க்கையில் வருவதுதான் துன்பம், துயரம், நோய், வலி, இறப்பு, பிரிவு போன்றவை. தலை சாய்த்து ஆறுதலடைய வழி தேடி அலையும்போது நமக்கு வடிகாலாய் அமைவதுதான் இயேசுவின் அருள் மொழிகள்! "சுமை சுமந்து சோர்ந்திருக்குப்போரே.. எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்' (மத்தேயு 11:28,29)
இதயமே மனித உறுப்புகளின் மையமாகவும் அனைத்து செயல்களையும் இயக்குகின்ற மூல காரணியாகவும் உள்ளது. நோயுற்றோருக்கு நலமும் பாவத்தால் நசுங்குண்ட மக்களுக்கு ஆறுதலும் அளித்தது இயேசுவின் இதயத்தின் அன்பின் காரணமாகத்தான். அநியாயமாகத் தீர்ப்பிட்டோரை மன்னித்ததும் உலகோரின் பாவங்களுக்காகத் தன் இன்னுயிரை ஈந்ததும் அந்த இதயத்தினின்று பொங்கி வழிந்த அன்பின் வெளிப்பாடே. இதனாலேயே கத்தோலிக்கத் திருச்சபை இயேசுவின் இதயத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் விழா எடுத்துக் கொண்டாடுகிறது. அந்த மாதம் "திரு இருதய வணக்க மாதம்' என அழைக்கப்படுகிறது. 
ஆண்டவர் இயேசு மார்கரீத் என்ற புனிதைக்குக் காட்சி கொடுத்து, " என் இருதயப் படத்தை ஸ்தாபித்து வணக்கம் செலுத்தும் குடும்பங்களை அவலமாகச் சாக விடமாட்டேன்' என்று கொடுத்த வாக்குறுதிக்கிணங்க, எல்லா கிறிஸ்துவ வீடுகளிலும் இயேசுவின் திரு இருதயப் படம் ஸ்தாபிக்கப்பட்டு, வணக்கம் செலுத்தப்பட்டு வருவதை நாம் காணலாம். முக்கியமாக, ஜூன் மாதங்களில் குருவானவர்கள் வீடுகளுக்கு அழைக்கப்பட்டு இயேசுவின் திரு இருதயப் படம் மந்திரிக்கப்படும் வழக்கம் உள்ளது. 
"அன்பே கடவுள், கடவுளே அன்பு' என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டே இயேசுவின் திருவுருவப்படம் இதயம் வெளிப்படையாகத் தெரியுமாறு வரையப்படுகிறது. எண்ணற்ற கிறஸ்துவ தொண்டு நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இன்று சமூக சேவை, மருத்துவ சேவை போன்ற அன்புப் பணிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டுகிறதென்றால் அதற்கு மூல காரணம், கிறிஸ்து போதித்த அன்பு எனும் தத்துவமே. "என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்கு பயன் ஒன்றுமில்லை' (1 கொரிந்தியர் 13:3) 
எங்கோ பிறந்து வளர்ந்த அன்னை தெரசா அவர்கள் கொல்கத்தா நகர வீதிகளில் அவலமாக மடிந்து கொண்டிருந்த ஆதரவற்ற முதியோர்களை அள்ளி அணைத்து மாண்புடன் உயிர் நீக்க உதவி புரிந்தது இந்த அன்பின் காரணமாகத்தான் என்பதை நாம் அறிவோம் அன்றோ? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேவாலயங்களில் இயேசுவின் இருதய அன்பை நினைவு கூரும் விதமாக சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.