மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
கர்நாடக அரசுக்கு அமைச்சர் ராஜேஷ் குமார் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு காங்கிரஸைச் சேர்ந்த தமிழ்நாட்டு அமைச்சர் ராஜேஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
அந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜேஷ் குமார் பேசியதாவது:
Advertisement
Advertisement
”முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. காவிரி என்பது ஒரு நதி மட்டுமல்ல, தமிழ்நாடு விவசாயிகளின் உயிர்நாடு. அதனை நம்பிதான் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையும், விவசாயமும் உள்ளது.
காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரி நடுவே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ்நாடு மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும்.
காவிரி நீர் வழங்குவது குறித்து நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை மூன்று வழித்தடங்களில் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு வரும் நீரைத் தடுத்து மேக்கேதாட்டு அணை கட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளும் பாதிக்கும். கர்நாடக அரசின் ஒருதலைபட்மான நடவடிக்கையை காங்கிரஸ் கண்டிக்கிறது” எனத் தெரிவித்தார்.
Condemnation of the Karnataka government's attempt to build the Mekedatu dam! Minister Rajesh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.