கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்!
மேக்கேதாட்டு போராட்டத்தால் கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்திவைப்பு...
கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக - கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தவெக தலைமையிலான அரசும், சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, கன்னட ஒக்கூடா கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.
கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தும் நிலையில், மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எல்லையான ஜுஜுவாடியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனால், அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் தமிழக எல்லையான ஜுஜுவாடியில் தமிழக பேருந்துகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும், ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. சில தனியார் பேருந்துகள் மட்டும் பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு இயக்கப்படுவதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை வரை போக்குவரத்து வசதிகளில் சிக்கல் நீடிக்க வாய்ப்புள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இரு மாநில எல்லைகளிலும் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நடைபெறும் கன்னட அமைப்பின் போராட்டம் முடிந்து நிலைமை சீரானவுடன், தமிழக பேருந்துகள் அம்மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Protest in Karnataka in support of the Mekedatu dam! Tension prevails as Tamil Nadu buses are halted
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.