மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சிக்கு எதிரான தனது முதல் தனித் தீர்மானத்தை இன்று காலை முன்மொழிந்தார்.
அந்த தீர்மானத்தில், ”மேக்கேதாட்டு அணைக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் என எவ்வித அனுமதியும் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்திகிறோம்.
Advertisement
Advertisement
காவிரி படுகையில் எவ்வித நீர் தேக்கத்தையும் கர்நாடக அரசு கட்டக் கூடாது என்று அம்மாநிலத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, மமக, கொமதேக, மஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி பேசினார். தொடர்ந்து அதிமுகவும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தது.
இதையடுத்து, திமுக ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கோள்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த விவகாரத்தில் அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போன் என்று உறுதியளித்தார்.
மேலும், தனித் தீர்மானத்தில் ‘மேகதாது பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும்’ என்பதையும் சேர்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பதிலுரை வழங்கிய முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை நான்காவதாக தீர்மானத்தில் சேர்த்துக் கொள்ள பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்கு கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், மேக்கேதாட்டுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
Resolution against the Mekedatu dam passed unanimously!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.