முகப்பு
வெள்ளிமணி

ராகு - கேது தோஷம் விலக...!

கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்ற தலமாகத் திகழும் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தியே,,

Updated On : 26 ஜூன் 2026, 12:36 pm IST
அம்மை - அப்பன்
பகிர்:

காளஹஸ்தி என்றதும் நமது நினைவுக்கு வருவது, வேடனான கண்ணப்பர் இறைவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்ற தலமாகத் திகழும் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தியே!

இதேபெயரில் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் கத்திரிநத்தம் என்னும் கிராமத்திலும் ஒரு கோயில் அமைந்துள்ளது. இதை பக்தர்கள் "தென் காளஹஸ்தி' என்றும் அழைக்கிறார்கள்.

சப்த ரிஷிகளுக்கு ஒருசமயம் சாபத்தால் தீவிர தோல் நோய் ஏற்பட்டது. அது விலக அவர்கள் பல தலங்களுக்குச் சென்றுவிட்டு, இறுதியில் இத்தலம் வந்து குளத்தில் ஒரு மண்டலம் மூழ்கி எழுந்து, கரையில் இருந்த சிவனை தொழுதிட நோய்கள் நீங்கியது. அது முதல் இவ்வூர் சப்தரிஷி நத்தம் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கத்திரிநத்தமாக மருவியது.

Advertisement

Advertisement

தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் தன் ஆட்சிக் காலத்தில் சோழ மண்டலத்தை நிர்வாக வசதிக்காக பல வளநாடுகளாகவும், ஒவ்வொரு வளநாட்டையும் பல கூற்றங்களாகவும் பிரித்தான். அப்படிப் பகுக்கப்பட்ட வளநாடுகளில் முக்கிய நாடாக சிங்க வளநாடு திகழ்ந்தது. இதில் குளிச்சப்பட்டு, கத்திரிநத்தம், தளவாபாளையம், மருங்கை ஆகிய கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன.

காளத்திநாதனை தன் தலைநகரமாகிய தஞ்சாவூருக்கு அருகிலேயே நிறுவி, திருக்காளத்தியாகவே வழிபட விரும்பினான் மன்னன் ராஜராஜன். எனவே, ஆதியில் சப்தரிஷிகள் வழிபாடு செய்த கத்திரிநத்தத்தில் காளஹஸ்தீஸ்வரர் கோயிலை எடுப்பித்துள்ளான். திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தி கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் இத்தலத்தில் வந்து வழிபடலாம்.

மூலவர் காளஹஸ்தீஸ்வரர் லிங்க வடிவில் நிறுவப்பட்டுள்ளார். இந்த வடிவத்தை மாதிரியாகக் கொண்டு மாமன்னன் ராஜராஜன் தஞ்சாவூர் பெரிய கோயிலின் மூலவரான ராஜராஜேச்சரமுடைய பரமசாமி என அழைக்கப்பெறும் பிரகதீஸ்வரப் பெருமானாரின் திருவடிவை வடிவமைத்தார் என்கிறது தலபுராணம்.

கோஷ்டத்தில் கயிலாய தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்கையையும், திருச்சுற்றில் தனிச் சந்நிதியில் கன்னிமூலை கணபதி, வள்ளி } தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், காலபைரவரையும் தரிசிக்கலாம். பின்னாளில் இறைவி ஞானாம்பிகை சந்நிதி ஏற்படுத்தப்பட்டது. ஞானாம்பிகைக்கு பெüர்ணமி தினத்தில் அபிஷேகம் செய்து, புடவை சாத்தி வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது நம்பிக்கை. நவராத்திரி தினங்களில் சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

இத்தலத்தில் இடம் மாறிய நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. இந்த அமைப்பு தமிழ்நாட்டில் அபூர்வம். பொதுவாக திசைமாறிய தெய்வங்களை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.

இங்கு நவகிரகங்களில் இடம் பெற்றுள்ள ராகு } கேதுவுக்கு பக்தர்கள் பரிகார அர்ச்சனைகள் செய்கிறார்கள். திங்கள்கிழமை தோறும் காலை 7.30 முதல் 9 மணி வரை ராகு } கேது தோஷ நிவர்த்தி பரிகார அர்ச்சனை வெகு விமர்சையாக நடக்கிறது. ஏனைய தினங்களில் பக்தர்கள் தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் திருமணத்தடைகள் விலகும், குழந்தைப் பேறு கிட்டும், தொழில் அபிவிருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.

இங்கு பிரதோஷ காலத்தில் தீபமேற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் நீங்கும் என்கிறார்கள். கார்த்திகை சோம வார வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடக்கிறது.

பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலுக்கு ஜூலை 2}ஆம்தேதி (வியாழக்கிழமை) காலை 11.15 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தரிசனத்துக்காக காலை 6 - 12 மணிவரையும், மாலை 5 - 8 மணிவரையும் திறந்திருக்கும் கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது.

- தஞ்சாவூர் இரா.சுரேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments