கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!
விளையாட்டின் இறுதியில் தன் சகோதரனாகிய திருமால் வெற்றிபெற்றதாக அறிவித்து, ஈசனின் சாபத்துக்கு ஆளானார் அம்பிகை.
பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.
ஒரு சமயம் கயிலையில் அரியும், அரனும் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தனர். அதற்கு அம்பிகை நடுவராகப் பொறுப்பேற்றார். விளையாட்டின் இறுதியில் தன் சகோதரனாகிய திருமால் வெற்றிபெற்றதாக அறிவித்து, ஈசனின் சாபத்துக்கு ஆளானார் அம்பிகை.
பின்னர், பசு வடிவம் தாங்கி கோரூபாம்பிகையாக சாபநிவர்த்தி வேண்டி பூலோகத்தில் அம்பிகை பூஜித்த காவிரிக்கரைத் தலங்கள் ஏராளம். அம்பிகையின் திருவடிகள் இத்தலங்களில் படவேண்டும் என்கிற காரிய நிமித்தமாக நிகழ்த்தப்பட்ட ஈசனின் திருவிளையாடல் இது.
Advertisement
அம்மையுடன் ஏனைய சக்திகளும் பசு வடிவத்துடன் பூலோகத்தில் உலவியபோது திருமாலும் "கோஸஹர்' என்கிற மேய்ப்பர் வடிவந்தாங்கிய பாதுகாவலராக உடன் பயணித்து இருக்கின்றார்.
தற்காலத்தில் மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு அமைந்துள்ள ஏராளமான தலங்கள் இப்புராணக்கதையுடன் தொடர்புடையவை. அவற்றுள் ஒன்று, கோமல் ஸ்ரீ ராஜகோபால
சுவாமி கோயில்.
கோ + மால் } அதாவது கோ ஆகிய பசுவும், மால் ஆகிய திருமாலும் இணைந்து விளங்கிடும் தலம் ஆகையால் கோமால் என்று அழைக்கப்பட்ட தலம். பிற்காலத்தில் கோமல் ஆக மருவி விட்டது.
கிழக்கு நோக்கிய கோயில். காலத்தால் தொன்மையானது. பிரதான வாயிலைக் கடந்தால் மையக் கோயிலை அடைந்து விடலாம். கருவறையில் மையமாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத
ஸ்ரீ வரதராஜப்பெருமாள், தனது தேவியருடன் சங்கு சக்ரதாரியாக நின்ற நிலையில் காட்சி தருவது அழகு.
இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்தவர் இவர் என்கிறார்கள். இவருக்கு முன்பாக உலோகத் திருமேனியராகக் காட்சி தருகிற சுவாமியை ஸ்ரீ ராஜகோபால
சுவாமி என்றழைக்கிறார்கள். இவர்தான் இக்கோயிலுக்குரிய பிரதான கடவுள்.
இடது கையை தண்டத்தில் ஊன்றியபடி, வலது திருக்கரத்தில் சாட்டையுடன் மிகக்கம்பீரமான பசுமேய்ப்பவராகக் காட்சி தருகிற அழகே பரவசம். இடையினருகே பசு ஒன்று இறையின் ஆதூரத்தில் மகிழ்ந்தவாறு முகத்தினை முன்னே வளைத்தபடி நிற்கின்றது. இதனை பசுவுரு கொண்ட அம்பிகை என்று சொல்கிறார்கள். இருபுறமும் ருக்மிணி, சத்யபாமா சமேதராக அற்புதக் கோலத்துடன் காட்சி தருகிறார் இவர்.
கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தில் இருபுறமும் திண்ணைகள் உள்ளன. இவற்றில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரின் இரண்டு திருவடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது வித்தியாசமானதோர் அமைப்பு. நாராயணரின் இடது மடியில் தாயார் அமர்ந்திருக்கும் பாணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு திருமேனிகளுமே காலத்தால் தொன்மையானவை.
இதற்கு வெளியில் உள்ள மகாமண்டபத்துக்கு இருபுறமும் கூடுதலாக சில கிருஷ்ணர் திருமேனிகள். வலது புறத்தில் ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேதராக ஸ்ரீ மதனகோபால சுவாமி அழகு மிளிர அமைந்துள்ளார். இவருக்கு பக்கவாட்டில் நவநீத கிருஷ்ணன்.
மகாமண்டபத்தின் இடதுபுறத்தில் பாமா, ருக்மிணி தாயார்கள் உடனருளும் வேணுகோபால சுவாமி கையில் குழலுடன் காட்சி தருகிறார். இவருக்குப் பக்கவாட்டில் பாம்பின் மேல் ஆடும் காளிங்கநர்த்தன கிருஷ்ணர் அருளுகிறார்.
இப்படியாக மொத்தம் ஐந்து கிருஷ்ணர் வடிவங்கள், இரண்டு லட்சுமி நாராயணர் திருமேனிகள், மூலஸ்தானத்து வரதராஜப்பெருமாள் என எட்டு திருமால் திருவடிவங்களை ஒரே கோயிலில் பார்ப்பது அதிசயம். இதற்கும் காரணம் சொல்கிறார்கள்.
அதாவது புராண காலத்தில் சகல தேவர்களும் வேண்டியதன் பேரில் திருமாலானவர் எட்டுத் திசைகளிலும் எட்டு வடிவங்களாகக் காட்சியளித்து அருளினாராம். அதன் அடிப்படையில் அமைந்துள்ள அதிசயம்தான் இது என்கிறார்கள். ஆயினும், முற்காலத்தில் திருமால் வழிபாடு இப்பகுதியில் செழித்து விளங்கியிருக்கலாம் என்பது உறுதி என்று எண்ணிய
படியே வெளியில் வந்தால் அங்கும் இடது புறத்தில் தனிக்கோயில் ஒன்று அமைந்திருப்பதைக் காண்கிறோம். சீதா, லட்சுமணர் உடன் அருளும் கோதண்டராம சுவாமி இங்கு எழுந்தருளியிருக்கிறார்.
இந்த கோதண்டராமரை வணங்கிடும் நிலையில் உள்ள ஆஞ்சநேயர் எதிர்புறத்தில் சந்நிதி கொண்டுள்ளார். பார்க்கவே பரவசமூட்டும் அழகிய பெரிய திருமேனியரான இவருக்கு பக்த
வரத ஆஞ்சநேயர் என்பது திருநாமம். ஒன்றையொன்று பார்த்தபடி அமைந்துள்ள இவ்விரு கோயில்களும் ஆலய வளாகத்தில் முன் பகுதியிலேயே அமைந்துள்ளன.
ஒரே இடத்தில் இத்தனை திருமால் வடிவங்களைப் பார்த்த அதிசயமான அனுபவத்தில் மெய்மறந்த படி வெளியில் வந்தால் தூரத்து வளைவில் மற்றொரு கோயில். இங்கு எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீநிவாசப் பெருமாளும் திருப்பதி பெருமாளுக்கு இணையான வரப்பிரசாதி என்பதாக அறிகிறோம். ஒருகாலத்தில் பிரம்மாண்டமான மூலக் கோயில் சுற்றாலையில் இருந்திருக்கலாம். கோயில் சிதைவுற்றபோது அங்கிருந்த திருமேனி இடம்மாறி இங்கு வந்திருக்கக் கூடும். தற்காலத்தில் மேலத்தெரு பெருமாள் என்று இவரை மக்கள் அழைக்கின்றார்கள்.
ஒருகாலத்தில் கிருஷ்ண பக்தி செழித்திருந்த இப்பூமியில் ஏராளமான திருமால் அவதாரத் திருவடிவங்கள் இன்றளவும் காணக் கிடைக்கின்றன. இன்னும் அறியப்படாமல் மறைந்திருப்பது எத்தனையோ!
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோமல் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில், தரிசனத்துக்காக காலை 9 மணிமுதல் 11 மணி வரையும் திறந்திருக்கும்.
- சுஜாதா மாலி