முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஏமாறாதீர்கள்! சோதனைக் கூடங்களையே ஏமாற்றும் போலி நெய்கள்!

உணவுப் பொருளாக மட்டுமல்லாமல், மத, ஆன்மிக, பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்ததால் சந்தையில் பசு நெய் அதிக விலையில் விற்பனையாகிறது.

Updated On : 14 ஜூன் 2026, 4:12 am IST
பகிர்:

எஸ். அருள்செல்வன்

உணவுப் பொருளாக மட்டுமல்லாமல், மத, ஆன்மிக, பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்ததால் சந்தையில் பசு நெய் அதிக விலையில் விற்பனையாகிறது. இதனால் மலிவான கொழுப்புப் பொருள்களை நெய் போல மாற்றி விற்கும் முயற்சியும் நடைபெறுகிறது. எனவே நெய் வாங்கும்போது, அது உண்மையிலேயே பசு நெய் தானா? என்று பலருக்கும் சந்தேகம் எழும்.

இதற்காக விஞ்ஞானிகள் பயன்படுத்தும் ஒரு முக்கிய சோதனை முறையையே ஏமாற்ற முடியும் என்று ஐ.ஐ.டி. (பி.ஹெச்.யூ.) வாரணாசி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து, புகழ்பெற்ற 'ஜெர்னல் ஆஃப் ராமன் ஸ்பெட்ரோஸ்கோபி' என்ற இதழில் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

பசு நெய்யில் இயற்கையாகவே காணப்படும் பீட்டா-கரோட்டீன் என்ற நிறமி, நெய்க்கு மஞ்சள் நிறத்தையும், சில தனித்துவமான வேதியியல் அடையாளங்களையும் அளிக்கிறது.

இந்த அடையாளங்களை வைத்து 'ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி' எனப்படும் நவீனக் கருவி மூலம் பசு நெய் உண்மையானதா? என்பதை பல ஆய்வகங்கள் பரிசோதித்து வருகின்றன.

தற்போதைய புதிய ஆய்வில், விஞ்ஞானிகள் கேரட்டில் இருந்து பீட்டா-கரோட்டீனைப் பிரித்தெடுத்து, பன்றிக் கொழுப்பு, பாமாயில் ஆகியவற்றில் சேர்த்தனர். அந்தக் கலவைகளின் ராமன் ஸ்பெக்ட்ரம், உண்மையான பசு நெய்யின் ஸ்பெக்ட்ரத்தைப் போலவே தோன்றியது. வெள்ளை நிறத்தில் இருந்த பன்றிக் கொழுப்பும், மங்கலான நிறத்தில் இருந்த பாமாயிலும், கேரட் சாற்றிலிருந்து பெறப்பட்ட கரோட்டீன் சேர்க்கப்பட்டவுடன் பசு நெய்யைப் போன்ற மஞ்சள், தங்க நிறத்தைப் பெற்றன. அதாவது, தோற்றத்திலும் ஆய்வகச் சோதனையிலும் இவை பசு நெய் போலத் தோன்றும் வாய்ப்பு இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரேயொரு வேதியியல் அடையாளத்தை மட்டும் நம்பி, நெய்யின் தரத்தை உறுதி செய்வது ஆபத்தானது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. நெய்யின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த கொழுப்பு அமிலப் பகுப்பாய்வு, ஸ்டெரால் பரிசோதனை, எப்.டி.ஆ.ஆர். போன்ற கூடுதல் தொழில்நுட்பங்கள் இணைந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். பசு நெய்யின் அடையாளமாகக் கருதப்படும் கரோட்டீன் சிக்னல்களை வெளிப்புறமாகச் சேர்க்க முடியும். எனவே கரோட்டீன் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பரிசோதனைகள் எதிர்காலத்தில் மோசடிகளுக்கு வழிவகுக்கலாம் என்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

'மஞ்சள் நிறம் இருந்தாலே நெய் உண்மையானது என்று நம்ப முடியாது. அறிவியல் சோதனைகளும்கூட பல அடுக்குகளில் நடைபெற வேண்டும்' என்பதே ஆய்வின் முக்கியச் செய்தியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.