முகப்பு
உலகம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல்

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் தூதர்கள் ஒருவர் மீது மற்றொருவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளைக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 21 ஜூன் 2013, 11:22 pm IST
பகிர்:

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் தூதர்கள் ஒருவர் மீது மற்றொருவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளைக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கும் பகுதிகள் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் சிறப்புக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் தூதர் ஷாகிர் டானின், "நீண்ட காலமாகவே பாகிஸ்தானில் இருந்துதான் பயங்கரவாத நடவடிக்கைகள் தலையெடுத்து வருகின்றன. அங்கு செயல்படும் அமைப்புகள் வெளிநாடுகளில் பயங்கரவாதத்தைப் பரப்புவதையே தங்கள் வேலையாகக் கொண்டுள்ளன.

Advertisement

Advertisement

இவர்களால் ஆப்கானிஸ்தானில் மட்டுமின்றி, அப்பிராந்தியத்திலேயே அமைதி என்பது சாத்தியமில்லாத விஷயமாகி வருகிறது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கிகள் மூலம் தாக்கியுள்ளது. இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது' என்றார்.

ஆப்கானிஸ்தான் தூதரின் குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய பாகிஸ்தான் தூதர் மசூத் கான், "அவரது குற்றச்சாட்டு உண்மையல்ல. இதுபோன்று பேசுவது நல்ல ராஜாங்க நடவடிக்கை அல்ல. பாதுகாப்பு விஷயத்திலும், பயங்கரவாத எதிர்ப்பிலும் நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை குறைகூறும் வகையில் உங்கள் பேச்சு அமைகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளிலுமே பயங்கரவாதிகளால் பிரச்னை உள்ளது. எனவே இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம்தான் பிரச்னையைத் தீர்க்க முடியும். பாகிஸ்தானில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில்தான் திட்டமிடப்படுகின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.