இளைஞர் துப்பாக்கிச் சூடு: கனடாவில் இருவர் பலி
கனடாவின் டொரன்டோ நகரில் 29 வயது இளைஞர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளம் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
கனடாவின் டொரன்டோ நகரில் 29 வயது இளைஞர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளம் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து போலீஸாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அந்த இளைஞரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: டொரன்டோ நகரின் கிரீக்டெளன் பகுதியில், நடைபாதை வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 7.30 மணி) வந்துகொண்டிருந்த இளைஞர், அந்தப் பகுதியில் வந்துகொண்டிருந்தவர்களை நோக்கி கைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.
டான்ஃபோர்த் சாலையில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸார், டான்ஃபோர்த் சாலையை சுற்றிவளைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, போலீஸாருக்கும், அந்த இளைஞருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் அந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவரில் இளம்பெண் ஒருவரும் அடங்குவார். அதுதவிர, தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இளம்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், தாக்குதல் நடத்திய இளைஞர் குறித்த விவரங்களையும், தாக்குதலுக்கான நோக்கம் குறித்தும் அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, டொரன்டோவில் பொதுமக்களுக்கு துப்பாக்கிகள் கிடைப்பது எளிதாக இருப்பதாகவும், அதனால் துப்பாக்கிச் சூடு தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அந்த நகரின் மேயர் ஜான் டோரி கவலை தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.