முகப்பு
உலகம்

ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியா, சீனா உள்பட 8 நாடுகளுக்கு தற்காலிக விலக்கு: அமெரிக்கா அறிவிப்பு

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ள 8 நாடுகளின் பட்டியலை அமெரிக்கா திங்கள்கிழமை வெளியிட்டது.

Updated On : 6 நவம்பர் 2018, 12:51 am IST
பகிர்:


ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ள 8 நாடுகளின் பட்டியலை அமெரிக்கா திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி, கிரீஸ், தென் கொரியா, தைவான், துருக்கி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. கடந்த நிதியாண்டில் (2017-18) மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோலியத் தேவைக்கு ஐக்கிய அரபு அமீரக நாடுகளை சார்ந்தே நமது நாடு உள்ளது. அதிலும் குறிப்பாக ஈரானிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டொன்றுக்கு 1.5 கோடி டன் கச்சா எண்ணெய் அந்நாட்டிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சூழலில், ஈரான் மீது அமெரிக்கா அண்மையில் பொருளாதாரத் தடை விதித்தது. ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் நட்பு நாடுகள் எதுவும் ஈடுபடக் கூடாது என்றும் நவம்பர் 4-ஆம் தேதிக்குள் அந்நாட்டுடனான வர்த்தக நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்திக் கொள்ளுமாறும் அமெரிக்கா தெரிவித்தது.
அந்த நிபந்தனையை இந்தியா ஏற்காதபோதிலும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை விரும்பவில்லை. இதையடுத்து, பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, எண்ணெய் இறக்குமதியின் அவசியம் தொடர்பாக அமெரிக்க தரப்பிடம் இந்தியா எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி மேற்கொள்ள 8 நாடுகளுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை அறிவித்தது. அவை எந்தெந்த நாடுகள்? என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த பட்டியலில் இந்தியா நிச்சயம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 நாடுகளின் பட்டியலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, வாஷிங்டனில் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி, கிரீஸ், தென் கொரியா, தைவான், துருக்கி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 
இந்த நாடுகள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைத்துகொண்டதையடுத்து, தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பாம்பியோ தெரிவித்தார். அதேவேளையில், ஈரான் மீது தொடர்ந்து அழுத்தம் தரப்படும் என்றும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments