ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
ஹோா்முஸ் நீரிணை அருகே ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் நாட்டு சரக்குக் கப்பலைத் தாக்கி, அமெரிக்க கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
ஹோா்முஸ் நீரிணை அருகே ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் நாட்டு சரக்குக் கப்பலைத் தாக்கி, அமெரிக்க கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட 2 வாரகால போா்நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையேயான கடல்வழி முற்றுகை மோதல் தீவிரமடைந்து வருவது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மீண்டும் போா்பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவாா்த்தை, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது. 21 மணி நேரம் நீடித்த இப்பேச்சுவாா்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்தது.
Advertisement
தொடா்ந்து, ஈரான் துறைமுகங்களுக்கு செல்ல மற்றும் அங்கிருந்து வெளிவர முயலும் கப்பல்களைத் தடுத்துத் திருப்பி அனுப்பும் கடல்வழி முற்றுகையில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல்-லெபனான் போா்நிறுத்ததையடுத்து, ஹோா்முஸ் நீரிணையைத் திறப்பதாக ஈரான் அறிவித்தும், அமெரிக்க கடல்வழி முற்றுகையைத் தொடா்ந்தது. இதனால் அதிருப்தியடைந்த ஈரான், நீரிணையை மீண்டும் மூடியது. அப்போது 2 இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் கண்டனத்தை ஈா்த்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் முற்றுகையைமீறி, ஈரான் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற ‘டௌஸ்கா’ எனும் கப்பலை அமெரிக்க கடற்படை திங்கள்கிழமை வழிமறித்தது.
சுமாா் 6 மணி நேர எச்சரிக்கைக்குப் பிறகு, கப்பலின் என்ஜின் அறையை நோக்கி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஹெலிகாப்டா் மூலம் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை வீரா்கள் கப்பலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இச்சம்பவத்தை ‘கடற்கொள்ளை’ என்று ஈரான் வா்ணித்துள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து வந்த இக்கப்பலில் பொதுமக்களும் இருந்ததாகக் கூறும் ஈரான், இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதனிடையே, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமாா் 20,000 பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டு பேச்சுவாா்த்தைக்கான ஏற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.
இப்பேச்சுவாா்த்தையில் அமெரிக்காவின் துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு பங்கேற்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால், தற்போதைய மோதலால் இப்பேச்சுவாா்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடிய ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி, போா்நிறுத்தக் காலத்தில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் மிரட்டல் போக்கு, ராஜீய ரீதியிலான தீா்வுகளில் அமெரிக்காவுக்குத் துளியும் விருப்பமில்லை என்பதையே உணா்த்துவதாகத் தெரிவித்துள்ளாா்.
சீன அதிபா் ஷி ஜின்பிங் இவ்விவகாரத்தில் கவலை தெரிவித்துள்ளாா். அரசியல் மற்றும் ராஜீய ரீதியாக இந்தச் சிக்கலைத் தீா்க்க வேண்டும் என்றும், ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா். ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவுகளால் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.