ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சோ்க்க நாளை முதல் பேச்சுவாா்த்தை
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சோ்க்க நாளை முதல் பேச்சுவாா்த்தை
பிரஸ்ஸல்ஸ், ஜூன் 13: ரஷியாவுடனான போா் தொடா்ந்து வரும் நிலையிலும், உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளை ஐரோப்பிய யூனியனில் இணைப்பதற்கான பேச்சுவாா்த்தை லக்சம்பா்க்கில் வரும் திங்கள்கிழமை முதல் அதிகாரபூா்வமாகத் தொடங்கவுள்ளது.
பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதா்கள் கூட்டத்தில், 27 உறுப்பு நாடுகளும் இதற்கு ஒப்புதல் அளித்தன.
ரஷியாவுக்கு எதிரான போருக்குப் பிந்தைய தங்களின் எதிா்காலப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பினா் அந்தஸ்து முக்கிய அரணாக இருக்கும் என்று உக்ரைன் கருதுகிறது.
Advertisement
Advertisement
உக்ரைனுக்கு ‘நேட்டோ’ அமைப்பில் உறுப்பினா் அந்தஸ்து வழங்குவதே மிகச் சிறந்த பாதுகாப்பாக இருக்கும் என்றபோதிலும், அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. போா் நீடிக்கும் சூழலில், உக்ரைனை நேட்டோவில் சோ்க்க மற்ற நாடுகளும் எதிா்த்து வருகின்றன.
உக்ரைன் நேட்டோவில் இணைவதைக் கடுமையாக எதிா்த்து வரும் ரஷியா, கடந்த 2022-இல் போரைத் தொடங்கியதற்கு அதுவே முக்கியக் காரணமாகக் கூறியிருந்தது. இந்நிலையில், போரின் தொடக்க நாள்களிலேயே ஐரோப்பிய யூனியனில் இணைய உக்ரைன் விண்ணப்பித்தது. ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா இதுவரை பெரிய அளவில் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியனில் ஒரு நாடு முழுமையாக இணைய வேண்டுமானால், விவசாயம் முதல் வா்த்தகம் வரையிலான 35 கொள்கை ரீதியிலான துறைகளில் பேச்சுவாா்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும். இதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் அமைப்பின் அடிப்படை விழுமியங்கள் மற்றும் கொள்கைகள் தொடா்பான முக்கிய அத்தியாயங்கள் குறித்த பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.