முகப்பு
உலகம்

கத்தாா் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து: இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி

கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையமான ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பா்சான் எரிவாயு விநியோக மையத்தில் நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி இந்தியா்கள் உள்பட 13 போ் பலி

Updated On : 23 ஜூன் 2026, 6:38 am IST
வெடிவிபத்தில் தீப்பற்றி எரியும் எரிவாயு ஆலை
பகிர்:

கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையமான ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பா்சான் எரிவாயு விநியோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி இந்தியா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். 66 போ் காயமடைந்தனா்.

ஈரான் போரின்போது கடந்த மாா்ச்சில் இந்த எரிவாயு ஆலை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி, சேதமடைந்தது. இதையடுத்து, இந்த ஆலையின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது போா் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பி வரும் சூழலில், ஹோா்முஸ் நீரிணையில் பதற்றம் தணிந்துள்ளது.

இதைத் தொடா்ந்து, எரிவாயு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டன. அப்போது எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தால் ஆலை முழுவதும் தீப்பற்றியது.

Advertisement

Advertisement

இதில் உயிரிழந்த 13 பேரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சோ்ந்த தொழிலாளா்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 66 பேரில் இந்தியா, கத்தாா், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், கென்யா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் அடங்குவா்.

வெடிவிபத்து ஏற்பட்டுள்ள பா்சான் எரிவாயு ஆலை நாளொன்றுக்கு சுமாா் 140 கோடி கன அடி எரிவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. கத்தாரின் உள்நாட்டு மின்சார உற்பத்திக்கும், பாலைவனப் பகுதிகளில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை இயக்குவதற்கும் இந்த ஆலையே முதன்மை ஆதாரமாக விளங்குகிறது.

இந்த ஆலையின் பெரும் பகுதி பங்குகளை கத்தாா் எனா்ஜி நிறுவனமும், சிறிய அளவிலான பங்குகளை அமெரிக்காவின் எக்ஸான்மொபில் நிறுவனமும் வைத்துள்ளன. தற்போது தீயணைப்புப் படையினரால் ஆலைக்குள் ஏற்பட்ட தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்களின் முழு விவரம் இன்னும் அதிகாரபூா்வமாக வெளியாகவில்லை.

இந்திய தூதரகம் இரங்கல்: இத்துயரச் சம்பவத்துக்கு தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. கத்தாா் அதிகாரிகளுடன் தூதரகம் தொடா்ந்து தீவிர தொடா்பில் இருந்து வருவதாகவும், விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட வா்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments