குழந்தைகள் உணவுப் பொருளில் எலி விஷம் கலந்த விவகாரம்: குற்றவாளி கைது!
குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தின் உணவு ஜாடிகள் சிலவற்றில் எலி விஷம் கலந்தது தொடர்பாக...
குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தின் உணவு ஜாடிகள் சிலவற்றில் எலி விஷம் கலந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் ’ஹிப்’ என்கிற தனியார் நிறுவனத்தின் உணவு ஜாடிகள் சிலவற்றில் எலி விஷம் கலந்தது உறுதிப்படுத்தப்பட்டதால் அதனைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
ஆஸ்திரியாவில் உள்ள ஸ்பார் எனப்படும் பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்ட 5 மாதக் குழந்தைகளுக்கான கேரட் மற்றும் உருளைக்கிழங்கு கலந்து தயாரிக்கப்படும்190 கிராம் கொண்ட ஹிப் நிறுவன உணவு ஜாடிகளில் எலி விஷம் கலந்திருப்பதாக சனிக்கிழமை (ஏப்ரல் 18) செய்த சோதனையில் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இதுபற்றி ஹிப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "தயாரிப்பு மற்றும் தரக் குறைபாடு காரணமாக நாங்கள் உணவுப் பொருள்களைத் திரும்பப் பெறவில்லை. எங்கள் தரப்பிலிருந்து பொருள்களை அனுப்புகையில் அவை நல்ல நிலையில் அனுப்பப்பட்டன. குற்றச் சம்பவம் காரணமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், ஸ்பார் பல்பொருள் அங்காடிகளின் பல்வேறு கிளைகளான ஸ்பார், யூரோஸ்பார், இண்டர்ஸ்பார் மற்றும் மேக்ஸிமார்க் போன்ற கடைகளில் விற்கப்பட்ட ஹிப் உணவுப் பொருள்களைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக, ஆஸ்திரியாவின் பர்கென்லாண்ட் மாகாண காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, எலி விஷம் கலந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக 39 வயதான நபர் சால்ஸ்பர்க் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலதிக விவரங்கள் பின்னர் வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
உணவுப் பொருள் ஜாடிகளில் கலந்த எலி விஷத்தின் நச்சுத்தன்மை பற்றிய அறிக்கை வெளியாகாமல் நிலுவையில் உள்ளது. இதுவரை 5 உணவு ஜாடிகள் மட்டுமே உட்கொள்ளும் முன்பாக பறிமுதல் செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹிப் நிறுவனம் தெரிவித்துள்ள தகவலின்படி, அந்நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் ஒருவர் மெயில் அனுப்பிய நிலையில் அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்து குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.
Case of Rat Poison Mixed in Children's Food: Culprit Arrested
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.