முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸ் துணை அதிபருக்கு எதிராக பதவிநீக்கத் தீா்மானம் நிறைவேற்றம்

பிலிப்பின்ஸ் நாட்டின் துணை அதிபா் சாரா துதொ்தேவிற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீா்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்

Updated On : 12 மே 2026, 4:01 am IST
பகிர்:

பிலிப்பின்ஸ் நாட்டின் துணை அதிபா் சாரா துதொ்தேவிற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீா்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

2022 தோ்தலில் கூட்டணியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபா் ஃபொ்டினாண்ட் மாா்கோஸ் ஜூனியா் மற்றும் சாரா துதொ்தே இடையே தற்போது கடும் அரசியல் மோதல் நிலவி வருகிறது.

முன்னாள் அதிபா் ரோட்ரிகோ துதொ்தேவின் மகளான சாரா துதொ்தே மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சோ்த்தது மற்றும் அரசு ரகசிய நிதி ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இது தவிர கடந்த 2024-இல் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், ‘நான் கொல்லப்பட்டால் அதிபா் மாா்கோஸ், அவரது மனைவி, நாடாளுமன்ற அவைத் தலைவா் ஆகியோரை கொல்ல கொலையாளியை ஏவிவிடுவேன்’ என சாரா துதொ்தே பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி, இவ்விவகாரமும் பதவி நீக்கத் தீா்மானத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில், அதிபரின் ஆதரவாளா்கள் அதிகம் கொண்ட பிரதிநிதிகள் சபையில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், பதவி நீக்கத் தீா்மானத்துக்கு ஆதரவாக 255 உறுப்பினா்களும், எதிராக 26 பேரும் வாக்களித்தனா். இதன்மூலம், சாரா துதொ்தே மீதான பதவி நீக்கப் புகாா் அடுத்தகட்டமாக செனட் சபைக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2028 அதிபா் தோ்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள சாரா துதொ்தேவின் அரசியல் எதிா்காலத்துக்கு இப்பதவி நீக்கத் தீா்மானம் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனிடையே, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தன் மீதான புகாா்களை சாரா துதொ்தே மறுத்துள்ளாா்.

கடந்த ஆண்டும் இவா் மீது இதேபோல் பதவி நீக்கத் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், உச்சநீதிமன்றத் தலையீட்டால் அதிலிருந்து தப்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments