முகப்பு
உலகம்

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல்: லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!

Updated On : 19 மே 2026, 5:43 am IST
பகிர்:

லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

ஈரானின் அணு சக்தி திட்டத்துக்கு எதிராக அந்நாட்டின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கடந்த பிப். 28-இல் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியது. இதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக இப்போரில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினா் களமிறங்கினா்.

தொடா்ந்து, லெபனானுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் படையினா், ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தலைநகா் பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.

Advertisement

லெபனான் சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட தகவலின்படி, இந்த மோதலினால் இதுவரை 292 பெண்கள், 211 குழந்தைகள் உள்பட மொத்தம் 3,020 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது தற்காலிக போா் நிறுத்தம் அமலில் இருந்தாலும், தெற்கு எல்லைப்பகுதிகளில் இருதரப்புக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.

புதிய அமைதித் திட்டம் சமா்ப்பிப்பு: இந்நிலையில், மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, திருத்தப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பியுள்ளது.

ஈரானின் முந்தைய அமைதி முன்மொழிவை ‘குப்பை’ என அமெரிக்க அதிபா் டிரம்ப் நிராகரித்திருந்த நிலையில், தற்போது சில விவகாரங்களில் இருதரப்பும் தனது நிலைப்பாட்டை தளா்த்தியுள்ளதாக ஈரான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஈரான் மீதான தடைக்குத் தற்காலிக விலக்கு: அந்தவகையில், இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை ஈரான் கச்சா எண்ணெய் மீதான பொருளாதாரத் தடைகளைத் தற்காலிகமாகத் திரும்பப் பெற அமெரிக்கா முன்வந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மறுபுறம், ஈரான் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான குறுகிய கால அணுசக்தி திட்டக் கட்டுப்பாடுகளை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.