Enable Javscript for better performance
மத அரசியல்-48: காணாபத்தியம்- Dinamani

சுடச்சுட

  

  மத அரசியல்-48: காணாபத்தியம்

  By C.P.சரவணன்  |   Published on : 17th January 2019 08:23 PM  |   அ+அ அ-   |    |  

  ganesh_dp

   

  காணாபத்தியம் (Ganapatya)

  ஆசீவகச் சித்தராக வழிபடப்பட்ட விநாயகர் எனப் பார்த்தோம். பிள்ளையார் அரசமரத்தடி, குளக்கரை என  அமர்ந்திருப்பதே இதற்கு ஆதாரம். காணாபத்தியம் என்பது கணாபத்தியம் என்றும் கூறப்படுகிறது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும்.  பொதுக்கடவுள் விநாயகர், வழிபாடுகள் சமய நிகழ்வுகள் போன்ற சுபகாரியங்களை ஆரம்பிக்கும் முன்பாக விநாயகரை வழிபடுவது வழக்கம்.  கணபதி வழிபாடு என்பது சைவ சமயத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே காணப்படுகிறது. காணாபத்தியம் என்னும் சமய பிரிவு அநேகமாக கி.பி. 6 மற்றும் 9 ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் தொடங்கியதாக அறியப்படுகிறது. 0ஆம் நூற்றாண்டில் இப்பிரிவு வெகு சிறப்பான வளர்ச்சியை அடைந்தது. 

  வேதகால வழக்கு 

  வேதங்களில் பிள்ளையாரைப் பற்றிய வெளிப்படையான குறிப்பு ஏதுமில்லை. ஆயினும் ‘கணபதி’’ என்ற சொல்லாட்சி ரிக் வேதத்தில் (ரிக் வேதம் 11,23) கூறப்பட்டுள்ளதே தவிர, இது தேவ கணங்களுக்கெல்லாம் தலைவனான இந்திரனைக் குறிப்பதாக ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுகின்றார்.

  தமிழ்நூல்களில் சங்ககால இலக்கியங்களில் விநாயகரைப் பற்றிய பேச்சே இல்லை. இளம்பூரணர் தொல்காப்பியச் செய்யுளியலுரையில் ‘தந்தோள் நான்கில்’ என்ற அகவலை எழுத்தாளுகின்றார். நச்சினார்க்கினியரும் செய்யுளியல் 149 ஆம் சூத்திரவுரையில் ‘தடத்தாட்கொத்து’ என்ற செய்யுளை எடுத்துக்காட்டுகிறார்கள். இது கூத்தாடும் விநாயகரைக் குறிப்பதாகும்.

   

  விநாயகரின் வேறு பெயர்கள்

  •பிள்ளையார்
  •கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
  •ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
  •கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
  •விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
  பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

   

  பிள்ளையார் சுழி

  "உ" எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. நாழியின் குறியீடாகவும் உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்து பல்வேறு கருத்துக்கள் வழங்குகின்றன. முன்னோர்கள் உ என்று முதலில் எழுதி அடுத்து சிவமயம் என்று எழுதுவார்கள். தற்போது இந்த வழக்கம் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியினர் உ. சிவமயம் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வேறு சிலர் "உ" என்று பிள்ளையார் சுழியை மட்டும் போட்டு எழுதத் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்த "உ" குறியீட்டை சிலர் நாளைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றனர். இரண்டு என்கிற எண்ணுக்கும் இதே எழுத்து, குறியீடாகவும் அமைந்துள்ளது.

  தமிழ் எழுத்துக்கள் இயற்கை வடிவமான வட்ட வடிவின என்றும், அவ்வட்டத்தை விரைந்தெழுதும் போது அதன் முடிவு நீளக்கோட்டில் முடியுமென்றும் எழுதத் தொடங்குவான். முதலில் வட்டமிட்டுப் பின் அதைக் கோடாக இழுத்ததால் பிள்ளையார் சுழி ஏற்பட்டதென்பது ஒரு கருத்து.
  ஏட்டில் எழுதும் போது எழுதுகோலின் சீர்மையையும், ஏட்டின் செம்மையையும் அறியச் சுழித்துப் பார்க்கும் வழக்கமே பிள்ளையார் சுழியாகி விட்டது என்பது ஒரு கருத்து.

  பிள்ளையாரின் முகத் தோற்றம் "ஓ" என்றும் "ஓம்" என்றும் பிரணவத்தைச் சுருக்கமாக "உ" என முன்னெழுதி ஏனையவற்றைப் பின் எழுதுவது சுவடி எழுதுவோரின் மரபாக இருந்துள்ளது. ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவத்தின் அகரம் சிவம்; உகரம் சக்தி; மகரம் மலம்; நாதம் மாயை; விந்து உயிர் ஆகும். இவற்றுள் அகர உகர வடிவாக உள்ள பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை. பிள்ளையார் தடைகளை விலக்குபவர் என்பதால், நாம் தொடங்கும் எந்த செயலும் தடையில்லாமல் நடக்க பிள்ளையாரை வணங்கி அல்லது பிள்ளையார் சுழி - உ போட்டு தொடங்க வேண்டும் என்பது வழக்கம். ஆனால் பிள்ளையார் தனது தாய் தந்தையாகிய உமையாள்,உமையவனை முதன்மையாக வைத்து குறிப்பதற்காக சுருக்கமாக "உ" என்ற சுழியை உருவாக்கினார் என்பது ஒரு கருத்து.

  திருமூலர் அகரம் உயிரென்றும், உகாரம் இறையென்றும், மகாரம் மலமென்றும் கூறுவதால் அகரமாகிய உயிர் உகாரமாகிய இறைவனோடு இயைந்து ஒன்றியிருக்கும் நிலையை விளக்குவதே பிள்ளையார் சுழியாயிற்று என்கிறது ஒரு கருத்து.

  திருமூலரே பின்னும் பிரணவத்தின் ஐந்து கூறுகளில் அகரத்திற்குப் பிரமனும், உகரத்திற்கு திருமாலும், மகரத்திற்கு உருத்திரனும், விந்துவிற்கு மகேசனும், நாதத்திற்கு சதாசிவனும் ஆதி தெய்வங்களாவர். எழுதத் தொடங்குவது என்பது இலக்கியப் படைப்பைக் குறிக்கும். அதற்கு முன் பிரமனை ஆதி தெய்வமாகக் கொண்ட அகரத்தின் கூறாகிய ஒற்றைக் கொம்புக் குறியையும், எழுதப் பெறும் இலக்கியம் நின்று நிலை பெற வேண்டுமென்று திருமாலை ஆதி தெய்வமாகக் கொண்ட உகரத்தின் கூறாகிய கோட்டுக்குறியையும் இணைத்து "உ" எனப் பிள்ளையார் சுழியாக எழுதினர் என்றும், அச்சுழி மூல மனுவாகிய பிரணவத்தின் சிதைந்த வடிவு என்றும் குறிப்பிடுகின்றனர்.

  ஓலையை எழுத எடுத்ததும் அதன் பதத்தைப் பார்க்க ஒரு சுழியையும் கோட்டையும் இழுத்துப் பார்ப்பதுண்டு. இந்த முதல் சுழிதான் காலப்போக்கில் பிள்ளையார் சுழியென்று ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றாலும் இது நம் அறிவுப்பசிக்கு முழு உணவும் அளிக்கவில்லை. தமிழ் உயிர் எழுத்துக்கள் அனைத்தும் சுழியையே அடிப்படையாகக் கொண்டவை. எனவே தமிழ் எழுத்துக்களை எழுத வேண்டுமாயின் சுழிக்கக் கற்றுக் கொள் என்று முன்னோர்கள் இந்த முறையை அமைத்ததாக கி.ஆ.பெ.விசுவநாதம் குறிக்கின்றார்.

  கடிதங்களில் க்ஷ என்று எழுதும் பழக்கம் பிள்ளையார் சுழி என்று இன்று அழைக்கப்பட்டாலும் முற்காலத்தில் "தலைக்கீற்று" என்றும், "மேல்பதி" என்றும் அழைக்கப்பட்டதென்றும் இதன் உண்மை வடிவம் க்ஷ் என்று எழுதும் போது ஷ என்றாகியதென்றும் சங்கேத மொழியில் மேற்படி என்று பொருள் கொடுப்பதாகவும், கடிதத் தலைப்பில் பதிக்கப் பெற்ற "மேல்பதி" மருவி "மேற்படி" என்பதைக் குறிக்கும். சங்கேதமானது என்றோ, இன்ன சங்கேதத்தில் எழுதப்பட்டுள்ளது என்று அறிந்த பின் மேலே படிக்க முயலவும் என்றோ பொருள் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  ஓலைச்சுவடிகளின் தொடக்கத்தில் "அறிவோம் நன்றாகக் குரு வாழ்க குருவே" என்று எழுதப்பட்ட நிலை சமயச் சார்புற்று "அரி ஓம் நன்றாக" என்று எழுதப்பட்ட காலத்தில் ஏட்டின் தொடக்கத்தில் பிள்ளையார் சுழி இடம் பெற்றதோடு மட்டுமின்றிப் பாட்டின் முடிவிலும் பாடல் எண்களை அடுத்தும் இடம் பெற்றுள்ளமை இங்குச் சுட்டத் தகுந்தது. இவ்வாறு, பிள்ளையார் சுழி பாடல் தொடக்கத்தையும், பாடல் முடிவையும், எண் முடிவையும் குறித்து நின்ற குறியீடாகப் பயன்படுத்தப்பட்டமையும் புலனாகிறது.

  பிள்ளையார் வழிபாடு என்பதே தமிழகத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. அதற்கு முன்பிருந்தே ஏட்டில் எழுதும் வழக்கம் இருந்து வந்தமை கண்கூடு, ஏட்டின் சேர்பதம் பார்க்கச் சுழித்து பார்த்த நிலையைச் சமயப் பார்வை மிகுந்த பிற்காலத்தில் "பிள்ளையார் சுழி" யாக்கி விட்டனர் எனபதே பொருந்துவதாகும். பிள்ளையார் சுழியின் பிறப்பு எவ்வாறு இருப்பினும் இன்று அது ஒரு செயலின் தொடக்கத்தைக் குறிப்பதாக மருவி வழங்கி வருகிறது.

   

  மொரயா கோசாமி (Morya Gosavi)

  மொரயா கோசாமி என்பவரால் இச்சமயப்பிரிவு இன்னும் நல்ல வளர்ச்சியை அடைந்தது. கர்நாடக மாநிலத்திலுள்ள பிடார் எனும் இடத்தில் பிறந்து, பின்னாளில் சின்வாத்துக்கு இடம்பெயர்ந்தார். இவருடைய காலம் 1610 என்று பால் கோர்ட்ரைட்டும், ஆர்.சி டெரி 1330 என்றும் பல்வேறு விதமாக குறிப்பிடுகின்றனர். 

    
  மோர்கான் கோயில்

  புனே நகருக்கு அருகே உள்ள மோர்கான் கோயிலை கி.பி.14ஆம் நூற்றாண்டில் இவர் கட்டியதாகவும் தெரிகிறது.1651ஆம் ஆண்டு  சின்வாத்தில் விநாயகர் கோயில் ஒன்றில் இவர் சமாதி அடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

  இதன்பிறகு சின்வாத்தைச் சுற்றியுள்ள மராத்திய பகுதிகள் அனைத்திலும் காணாபத்தியம் தழைத்தோங்கி முதன்மை நிலையைப் பெற்றது. கி.பி. 17 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை இந்நிலை நீடித்தது. தற்போது காணாபத்தியம் முக்கியத்துவம் பெற்ற பிரிவாக விளங்கவில்லை என்ற போதிலும் மராத்தி மொழி பேசும் பகுதிகளில் உயர்பிரிவு இந்துக்களிடையே காணாபத்தியப் பிரிவு முக்கியத்துவம் பெற்றே காணப்படுகிறது.
  “கணபதி பாப்பா மோர்யா’ என்று இவர் பெயருடன் சேர்த்து முழக்கங்கள் எழுப்புவர்.

   

  தமிழகத்தில் காணாபத்தியம்

  தமிழகத்தில்  கணபதி வழிபாடு கி.பி. 800 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்குள்ள குடைவரைக் கோவில் ஆகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது. குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில்.

  சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார் என்றும், இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி ,கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனத்தருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றாலும் பிள்ளையார்ப்பட்டி பிள்ளையார் காலம் இதற்கெல்லாம் மிக மூத்தது.

  பிற்காலத்தில் விநாயகர் சிவபுராணத்துடன் இணைக்கப்பட்டார்.  தென் இந்தியாவிலும் இப்பிரிவை ஆதரிப்போர் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆண்டுதோறும் சின்வாத்துக்கும், மோர்கானுக்கும் புனித யாத்திரை சென்று வருகிறார்கள். இப்பிரிவை சார்ந்தவர்கள் தமது சமய குறியீடாக நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். தமது தோள்களில் யானை முகம் மற்றும் தந்தங்களின் உருவங்களைப் பொறித்து கொள்வதும் உண்டு.  நம்மிடம் உள்ள தெய்வீக யோக சக்தியை மேலோங்க செய்து கடவுள் நிலையை அடையச் செய்வது என்னும் மதத் தத்துவம் தான் விநாயக தத்துவமாகவும் விளங்குகிறது.

  முதுகின் கீழ்பகுதியில் உள்ள அளப்பரிய சக்தி மூலாதாரம் எனப்படுகிறது. இது நெருப்பை போன்றது. ஆழந்த தியானம் மூலம் அது சிறிதுசிறிதாக மேலெழுகிறது மூளையின் உச்சிவரை அந்த மூலாதார சக்தி எழுகிறது. இது மூலாதார சக்கரம் என்று அழைக்கப்படுகிறது.

  விநாயகர் வழிபாடு என்பது மூச்சு மற்றும் மூலாதார சக்கரத்துடன் தொடர்புடையது. இதன் உச்ச நிலையில் மனிதன் முக்காலத்தையும் அறியும் ஆற்றலை பெற்று மாமுனிவராகி விடுகிறான். கணபதியை ஓங்காரத்தின் வடிவமாக இப்பிரிவினர் காண்கின்றனர்.  ஒளவையார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் கணபதி வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்கள். அதிலும் கணபதியின் அருளால் திருமுறைகள் இருக்கும் இடத்தை அறிந்து நம்பியாண்டார் நம்பி அதனை வெளிக்கொணர்ந்தார்.

   

  சில அதிசய விநாயக திருப்பதிகள்

  உத்தர கர்நாடகாவில் கோகர்ணத்தில்,( mahaganapati, gokarna, Karnataka) நின்ற நிலையில் இருக்கும் பல வருடப் பழமையான விநாயாகர்.

   

  உச்சிப்பிள்ளையார் கோயில்

  உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு. இக்கோயில் மலைக்கோட்டையின்(rock fort)  உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்

  பூந்தோட்டம் ஆதி விநாயகர்

  திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்திற்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.

   

  சைவ , வைணவ சமயத்தோடு ஐக்கியம்

  தும்பிக்கை ஆழ்வார்

  இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. வைணவத்தில் தும்பிக்கை ஆழ்வார் என்று அறியப்பெறுகிறார். சைவர்கள் கணபதி அதாவது சிவ கணங்களின் அதிபதி என்ற பொருளில் அழைத்து ஆராதிப்பார்கள்.

  ஸ்ரீவைணவர்கள் தும்பிக்கை ஆழ்வார் என்று அழைப்பார்கள். பெரும்பாலும் வினாயகரின் திருவுருவத்தை வழிபடாமல் சொல்லும் மந்திரங்களில் அவரை வேறு பெயர்களால் கொண்டாடுவர். சில சந்தர்ப்பங்களில் திருவுருவம் தேவையென்றால் விநாயகருக்கு திருநீறு (விபூதி) அணிவிக்காமல் வைணவ முறைப்படி திருமண் (நாமம்) இட்டு வணங்குவார்கள். சில வைணவ கோயில்களில் வினாயகரை இந்தக் கோலத்தில் மிக அரிதாக இன்றும் காணலாம். தும்பிக்கை ஆழ்வார் சன்னதி... சிந்தாதிரிப்பேட்டை, ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் வடமேற்கில், ஆண்டாள் பிரகாரத்தின் சுவரில், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

  எனினும், இந்த வழக்கம் தற்காலத்தில் வைணவர்களிடையே பெரிய அளவில் நடைமுறையில் இல்லை என்றே கொள்ளலாம்.ஆனால், எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் சுக்லாம் பரதரம் விஷ்ணும் என்னும் சுலோகத்தைச் சொல்லிவிட்டுதான் தொடங்குவர்...இந்த சுலோகம் பிள்ளையார் மற்றும் திருமால் ஆகிய இரு தெய்வங்களுக்குமே பொதுவாகயிருப்பது கவனிக்கத்தக்கது
   

  References:

  • கணபதி, ஸ்ரீநமசிவாயமூர்த்திகள், திருவாவடுதுறை ஆதீனம்
  • இந்தியாவில் சமயங்கள், பெ சுயம்பு, அருண் நிலையம், 2005
  • இந்தியாவில் சமயங்கள் புத்தகம்,முனைவர் வெ. சுயம்பு, அருண் நிலையம்
  • தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும், முனைவர் தமிழப்பன்
  • https://www.britannica.com/topic/Ganapatya

   

  தொடரும்...

  C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai