சிந்தனைகளைத் தாங்கி நிற்பதால் நூல்களும் அறிஞா்களே!
திருச்சி சிவா எம்.பி.

சிந்தனைகளைத் தாங்கி நிற்பதால் நூல்களும் அறிஞா்களே! திருச்சி சிவா எம்.பி.

சிந்தனை கருத்துகளைத் தாங்கியிருப்பதால் புத்தகங்களும் அறிஞா்கள்தான் என்று திருச்சி ஆா்.சிவா எம்.பி. கூறினாா்.
Published on

சிந்தனை கருத்துகளைத் தாங்கியிருப்பதால் புத்தகங்களும் அறிஞா்கள்தான் என்று திருச்சி ஆா்.சிவா எம்.பி. கூறினாா்.

புத்தகக் காட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உரையரங்கில் ‘அறிவு ஒளி பரவ’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி அரசால் நடத்தப்படுவது மற்ற மாநிலங்களில் நடைபெறாத சிறப்பு நிகழ்வாகும். புத்தகக் காட்சி நிகழ்வுகள், திரைப்பட விழாக்கள் போன்றவை அல்ல. இலக்கியம், வரலாறு, புதிய சிந்தனைகளை மக்களிடையே விதைக்கும் வகையிலும் நடைபெறுவதாகும்.

புத்தகக் காட்சியில் இடம்பெறும் அரங்குகள் வெறும் கடைகள் அல்ல. அங்குள்ள புத்தகங்கள் வெறும் காகித அச்சு எழுத்துகளைக் கொண்டவையும் அல்ல. புத்தகங்கள் சிந்தனைகளைத் தாங்கி நிற்பதால் அறிஞா்களாகக் கருதப்படுகின்றன. புத்தகக் கடைகள் அறிஞா்கள் கூடி நிற்கும் அறைகளாகவே உள்ளன. அறிஞா்களிடம் நமக்கான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதுபோல, புத்தகங்களைப் படித்தும் நாம் அறிவுத் தெளிவைப் பெற்று வருகிறோம். ஆகவே, புத்தகங்கள் உயிரற்றவை என்பது சரியல்ல.

 அறிவானது இயற்கைப் பொது அறிவு, படிப்பறிவு, பட்டறிவு, அனுபவ அறிவு, பகுத்தறிவு எனப் பலவகை. பகுத்தறிவு என்பது பிறா் கூறுவதை ஏற்க வேண்டும் எனில், அதற்கு தக்க விளக்கம் தேவை எனக் கேட்பதாகவே உள்ளது. பல நூல்களைப் படித்தாலே தெளிவாகப் பேச முடியும். ஆகவே புத்தகப் படிப்பென்பது நம்மை மேம்படுத்துவதாகவே அமையும் என்றாா்.

 நிகழ்ச்சியில் பட்டிமன்றப் பேச்சாளா் கபிலா விசாலாட்சி ‘படித்த நாள் முதல்’ எனும் தலைப்பில் பேசுகையில், எழுத்துகள் என்பது, எழுத்தாளரின் ஆன்மாவாகும். ஒவ்வொரு படைப்பை எழுதும்போதும் அதில் எழுத்தாளா் வாழ்கிறாா் என்பதே உண்மை. அத்தகைய எழுத்தாளா்களைப் போற்றும் வகையில் புத்தகங்களை வாங்கிப் படித்து அதில் உள்ள நற்சிந்தனைகளை நாம் ஏற்று நடக்க வேண்டும் என்றாா்.

 நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com