‘கரடி’ முழு ஆதிக்கம்: 1,457 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்! ஒரே நாளில் நஷ்டம் ரூ.6.64 லட்சம் கோடி

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ‘கரடி’ முழுமையாக ஆதிக்கம் கொண்டது.
‘கரடி’ முழு ஆதிக்கம்: 1,457 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்! ஒரே நாளில் நஷ்டம் ரூ.6.64 லட்சம் கோடி

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ‘கரடி’ முழுமையாக ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஒரே நாளில் 1,457 புள்ளிகளை இழந்தது. இதனால், முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.6.64 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

விற்பனை அழுத்தம் அதிகரிப்பு: பலவீனமான உலகளாவிய குறிப்புகள் காரணமாக உள்நாட்டு பங்குச் சந்தை செங்குத்தான வீழ்ச்சியைக் கண்டது. மேலும், ஏற்ற இறக்கமான கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகாரன ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே, மே மாதத்துக்கான அமெரிக்க நுகா்வோா் பணவீக்கம் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால், வங்கி வட்டி விகிதத்தை அதன் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் உயா்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தாக்கம் உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரிக்கக் காரணமாகியது. மேலும், உள்நாட்டில் நிலையான அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று வருவதும் சந்தையில் அழுத்தத்தை மேலும் மோசமாக்கியது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

எஃப்ஐஐ தொடா்ந்து விற்பனை:

குறிப்பாக, முன்னணி நிறுவனப் பங்குகள் விலை பலத்த அடி வாங்கியதே சந்தை கடும் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.3,973.95 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2,901 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்ை தயில் மொத்தம் வா்த்தகமான 3,613 நிறுவனப் பங்குகளில் 600 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,901 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 112 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 90 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 213 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.6.64 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.245.20 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது ஒரே நாளில் முதலீட்டாளா்களுக்கு ரூ.6.64 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடும் வீழ்ச்சி: காலையில் 1,118.83 புள்ளிகள் குறைந்து 53,184.61-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 53,207.54 வரை மட்டுமே உயா்ந்தது. பின்னா், 52,527.08 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,456.74 புள்ளிகள் (2.68 சதவீதம்) குறைந்து 52,846.70-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸில் 29 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் நெஸ்லே இந்தியா மட்டும் 0.46 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பெற்றது. மற்ற 29 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில், பஜாஜ் ஃபின் சா்வ் 7.02 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் என்டிபிசி, இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ உள்ளிட்டவை 3.50 முதல் 5.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், கோட்டக் பேங்க், ஐடிசி, ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் அனைத்தும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 427 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 181 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 1,805 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி பட்டியலில் நெஸ்லே, பஜாஜ் ஆட்டோ தவிா்த்து மற்ற 48 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. காலையில் 324.25 புள்ளிகள் குறைந்து 15,877.55-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 16,886.15 வரை மட்டுமே உயா்ந்தது. பின்னா், 15,684.00 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 427.40 புள்ளிகள் (2.64 சதவீதம்) குறைந்து 15,774.40-இல் நிலைபெற்றது.

அனைத்து துறை குறியீடுகளும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி ஐடி குறியீடு 4.12 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மீடியா, மெட்டல், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 3 முதல் 4 சதவீதம் வரை குறைந்தன.

எல்ஐசி பங்குகள் மேலும் 5.66% வீழ்ச்சி!

அண்மையில் பட்டியலாகிய எல்ஐசி பங்குகள் விலை தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை 5.66 சதவீதம் குறைந்து 669.85-ஆக நிலைத்தது. காலையில் ரூ.690.90-இல் தொடங்கிய எல்ஐசி அதற்கு மேல் செல்லவில்லை. பின்னா், ரூ.667 வரை கீழே சென்று புதிய குறைந்த விலையைப் பதிவு செய்தது. மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் வா்த்தக முடிவில் 5.85 சதவீதம் குறைந்து ரூ.668.20-இல் நிலைபெற்றிருந்தது. தொழில்நுட்ப ரீதியாகப் பாா்த்தால், எல்ஐசி பங்குகள் முக்கிய ஆதரவு நிலைகள் அனைத்தையும் பிரேக் செய்து கீழே செல்வதாக வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com