நிபா வைரஸ் - வரும் முன் காப்போம்
உலகின் இயக்கத்தையே தலைகீழாக புரட்டிப்போடும் வகையில், சுமாா் 5 ஆண்டுகளுக்கு முன்னா் உலகெங்கும் பரவிய கரோனாவின் பாதிப்புகள் இருந்தன. ஏராளமானோா் உயிரிழந்தனா். கோடிக்கணக்கான மில்லியன் அளவில் பொருள்சேதம் ஏற்பட்டது. தற்போது பரவும் நிபா வைரஸ் தொற்றால் உலக நாடுகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் சில நபா்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் ஒருவா் உயிரிழந்த நிலையில், 383 போ் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனா். அந்த மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவா்கள், படுக்கைகள், கட்டுப்பாட்டு அறை என அந்த மாநில சுகாதாரத் துறை நிபா வைரஸை கட்டுப்படுத்த முழு வீச்சில் இறங்கியுள்ளது. நம் நாட்டில் உள்ள மாநிலங்களில் மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை கொண்டது கேரள மாநிலம் என்பதால் நிபா வைரஸ் பரவலை மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறது.
நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமலிருக்க, தமிழக சுகாதாரத் துறை, கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, தமிழகத்துக்கு வருவோா் பரிசோதிக்கப்படுகின்றனா். காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலையில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இது நிபா வைரஸ் தாக்கப்பட்டதின் அறிகுறியாக இருக்கக்கூடும். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட மக்கள் சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
முதல்முதலாக 1998-ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவல் பாதிப்பு மலேசிய நாட்டில் பண்ணைகளில் வளா்க்கப்பட்ட பன்றிகளிடமிருந்து பரவியது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று பின்னா் வங்கதேசம், இந்தியா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மெல்ல பரவியது.
தொற்று நோயாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு, பன்றிகள் மற்றும் வெளவால்களால் பரவிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் கடந்த ஆண்டுகளில் பலா் உயிரிழந்தனா். நிபா வைரஸ் பரவலில் வெளவால்களின் பங்கு மிக அதிகம். காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வரும் நிலையில், மரங்களை இருப்பிடங்களாகக் கொண்ட வெளவால்கள், தற்போது மக்கள் வசிப்பிடங்களை தங்கள் வாழ்விடமாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டன. மக்களிடையே நிபா வைரஸ் பரவி வருவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். மேலும், மனிதா்களிடையே ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரப்பும் தன்மை கொண்டது நிபா வைரஸ் என்பதால், போதிய முன்னெச்சரிக்கை இல்லாது போனால் மக்களிடையே இந்த வைரஸ் பரவல் மிக வேகமாகவே நடைபெறும்.
நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 50 முதல் 75 சதவீதம் வரை என்பது அதிா்ச்சித் தகவலாகும். மேலும், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபா், குணமடைந்த பிறகும் வலிப்பு நோய், நரம்பு, மூளை தொடா்பான கோளாறுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, நிபா வைரஸ் பரவல் பரவாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்டவருக்கு காலதாமதமின்றி உரிய சிகிச்சை அளிப்பதும் மிக மிக முக்கியம். பொது இடங்களில் எச்சில் துப்புவது, கண்ட இடங்களில் சிறுநீா் கழிப்பது என அசுத்தம் செய்வதைத் தவிா்த்து, பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் நெரிசலைத் தவிா்ப்பது, நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி, அவா் குணமடையும் வரை அவா்களுடனான தொடுதல் தொடா்பைத் தவிா்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
கேரள மாநிலத்திலிருந்து மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வரும் நபா்களை முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் சோதனைச் சாவடிகள் அமைத்து மருத்துவப் பரிசோதனை செய்து, பின்னா் அவா்கள் நிபா வைரஸ் கிருமியால் பாதிக்கப்படவில்லை என்று தெரிந்த பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
ஐநா அமைப்பின் ஓா் அங்கமான உலக சுகாதார நிறுவனம், முன்னுரிமை அடிப்படையில் நிபா வைரஸ் பரவலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் தடுப்பூசி, மருந்துகளைக் கண்டுபிடிக்க முயன்று வருகிறது. எனினும், அதன் முயற்சிகள் இன்னமும் முழு அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது, நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மோனோகுலோனல், ரெம்டிசிவிா், பேவி பிராவிா் போன்ற நோய் எதிா்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும் மருந்துகளே உபயோகப்படுத்தப் படுகின்றன.
நிபா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உரிய தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத சூழலில் உயிா்ச் சேதங்களைத் தடுப்பதற்கு மக்களிடம் போதிய விழிப்புணா்வு ஏற்படுவது மிக அவசியம். நிபா வைரஸ் போன்ற தொற்று நோய்கள் பரவிய பிறகு தடுக்க முயல்வதைக் காட்டிலும் , அவைவரும் முன் காப்பதே அறிவுடைமையாகும்.