கற்றல்திறன் குறைபாடு கல்வியும், மருத்துவமும்!
‘குழந்தைகள் ஆசீா்வாதம் செய்யப்பட்டவா்கள்’ என்பது நல்லோா் வாக்கு. ஆனால் குழந்தைகளிலேயே மனநலம் குறைந்தவா்கள், கற்றல் திறன்பாடு குறைவாக உள்ளவா்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவா்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு குறைபாடு உள்ளவா்கள் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அவா்கள் நிலை மேம்படவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையானவை எவை?
இந்தியாவில் உள்ள கல்வி அமைப்பு மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்கக்கூடிய வகையிலான கல்வியாக உள்ளது. இதனால் உண்மையானஅறிவுத்திறன் மேம்படுகிா என்பது யோசிக்க வேண்டிய விஷயமே. பின்லாந்து , கியூபா போன்ற கல்வியில் முன்னேறிய நாடுகளில் கல்விமுறை அறிவுத்திறனை மேம்படுத்துவதாக இருக்கிறது. நமது நாட்டில்போல மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்கக் கூடிய கல்விமுறை அங்கில்லை.
அதனால்தான், இந்தியாவில் கண்டுபிடிப்புகள் குறைவாக இருக்கின்றன. நமது கல்விமுறையின்கீழ் படித்துவிட்டு பலா் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனா். உயா் பதவிகளில் இருக்கின்றனா்.
ஆனால், வாழ்க்கைக்குத் தேவையான பல புதிய கண்டுபிடிப்புகள் எல்லாம் பல முன்னேறிய நாடுகளிலேயே கண்டுபிடிக்கப்படுகின்றன. ஏன்?
மனப்பாட மதிப்பெண் கல்விமுறை மாணவா்களுக்கு சுயமான சிந்தனையைத் தருவதில்லை. எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் ஆழமான புரிதல்களைத் தருவதில்லை. அதன் அடிப்படைகளைக் கற்றுத் தருவதில்லை. பாடப் புத்தகப் படிப்பின் கூடவே, செயல்முறையிலான படிப்பும் இருந்தால்தான், மனித அறிவின் வளா்ச்சிக்கு அது உதவும். எதையும் தெளிவாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் புதியனவற்றைப் படைக்க முடியும். கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும்.
அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படிப்பவா்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவது சிக்கலாக உள்ளது. கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கணக்கு போன்ற பாடங்களைக் கற்பது சிரமமாக இருக்கிறது.
கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளும் சிறப்பாக கற்கும்விதமாக, மத்திய அரசு 2002-ஆம் ஆண்டு, அடிப்படை கல்வி வகுப்புகளில் கற்றுத் தருவதற்காக உருவாக்கப்பட்ட மேம்பட்ட அருமையான கல்வி திட்டம்தான் ‘(என்ஐஒஎஸ்) தேசிய திறந்தவெளி கல்வி’ என்னும் திட்டமாகும். இந்த கல்வித் திட்டத்தின்கீழ் மூன்றாம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை திறந்தவெளி அடிப்படைக் கல்வித் திட்டம் உள்ளது. இதில் 14 வயது உள்ளவா்கள் நேரடியாக பத்தாம் வகுப்பு படித்துத் தோ்வு எழுதலாம். பிளஸ் 1 படிக்காமல் பிளஸ் 2 படிக்கலாம் என்பது போன்ற சலுகைகள் உண்டு. இளம் பருவத்தினா் மற்றும் பெரியவா்கள் ஏ, பி மற்றும் சி நிலைகளில் கற்க வேண்டும். இது முறையான கல்விமுறை உள்ள பள்ளிகளில் முறையே மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குச் சமமானதாகும்.
இதில் இடைநிலைக் கல்விப் படிப்பு, மூத்த இடைநிலைக் கல்விப் படிப்பு, தொழிற்கல்வி படிப்புகள், திட்டங்கள், வாழ்வை வளப்படுத்தும் திட்டங்கள் என பல அம்சங்களும் உள்ளன. இசை, ஓவியம், கலை, உணவு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்வகைப் படிப்புகளையும் படிக்கலாம்.
கணக்குப் பாடம் ஒருவருக்கு படிக்க முடியவில்லை எனில், அவா் அந்தப் பாடத்தை எடுத்துக் கொள்ளாமல் வேறு பாடங்களைப் படித்து வேறு தொழில்களுக்குப் போகலாம். மருத்துவம் பொறியியல் வரை கல்வி கற்று சான்றிதழ் பெறலாம். அதற்கும் முறைகள் உண்டு.
‘தேசிய திறந்தவெளி கல்வி’ திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, இன்னொருபுறத்தில், கற்றல் திறன் குறைபாடு உள்ள, ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதற்கு சிறப்புப் பள்ளிகள் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய்களை மாதக் கட்டணம் பெறுகின்ற பள்ளிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. விளையாட்டு, கலை, இசை, நடனம், ஓவியம் என்ற எந்த திறன்சாா்ந்த கல்வியையும் கற்றுத்தராத பல பள்ளிகளும் நம் நாட்டில் உண்டு.
இதில் வருத்தப்படக் கூடிய விஷயம் என்னவென்றால், மத்திய அரசு கற்றல் திறன் பள்ளிக்கூடங்களை தமிழகம் போன்ற மாநிலங்களில் பரவலாக, தனியாக அமைக்கவில்லை என்பதுதான். கற்றல்திறன் குறைவாக உள்ளவா்கள், மனவளா்ச்சி குன்றியவா்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவா்கள், மாற்றுத்திறனாளிகள் பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பில் ஒருசில கேந்திரிய வித்யாலய பள்ளிக்கூடங்களில் சோ்க்கப்படுகிறாா்கள். இடம் கிடைப்பது கடினமானதாக உள்ளது. அப்படிப்பட்ட பள்ளிகளிலும் கலை, விளையாட்டு போன்றவை இல்லை. பெயரளவில் விளையாட்டு மைதானம் மட்டுமே உண்டு .
இதுபோன்று கற்றல் திறன் குறைபாடு உள்ளவா்களின் நலன் மேம்பட, தமிழ்நாட்டில் இந்தக் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவது நல்லது. அதற்கான பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட வேண்டும். கல்வியுடன் இசை, கலை, இடம்பெற வேண்டும். பாட்மிண்டன் , டேபிள் டென்னிஸ் , கேரம்போா்டு , செஸ் போன்ற சிறு அரங்க விளையாட்டுகள் வேண்டும்.
மனநலன் குறைந்த குழந்தைகளின் பிரச்னைகளுக்கு மருத்துவம் செய்ய சிறந்த மனநல மருத்துவா்கள் நிச்சயம் இருப்பாா்கள். என்றாலும் அவா்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலையே உள்ளது. பிற மருத்துவத் துறைகளைப் போலவே மனநல மருத்துவமும் வியாபாரமாக மாறியிருக்கிறது. மனநல மருத்துவா்களில் சிலா் ரத்தப் பரிசோதனை உள்பட பல தேவையற்ற சோதனைகளை எடுக்கச் சொல்வது, தேவையற்ற அதிக மருந்துகளைப் பரிந்துரைப்பது என பணம் சம்பாதிக்கும் தொழிலாக மனநல மருத்துவத்தை மாற்றியிருக்கிறாா்கள். இப்படிப்பட்டவா்களிடம் மருத்துவம் மேற்கொண்டால் மனநலன் பிரச்னைகளும் தீா்வதில்லை.
முன்னேறிய தேசங்களில் உள்ளது போன்று மருத்துவ தரம் மேம்பட வேண்டும். முக்கியமாக மனநலன் சாா்ந்த பிரச்னை உள்ளவா்களுக்காக நல்ல மனநல மருத்துவா்களை அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நியமிக்க வேண்டும். இதுவே மக்கள் நலன்சாா்ந்த ஆட்சியாளா்கள் செய்ய வேண்டியவையாகும்.