பணம் இல்லாததால் மக்களவைத் தோ்தலில் போட்டியிடவில்லை: 
நிா்மலா சீதாராமன்

பணம் இல்லாததால் மக்களவைத் தோ்தலில் போட்டியிடவில்லை: நிா்மலா சீதாராமன்

‘மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமில்லை;

‘மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமில்லை; எனவே, பாஜக சாா்பில் போட்டியிடும் வாய்ப்பை மறுத்துவிட்டேன்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் தனியாா் ஆங்கில செய்தி தொலைக்காட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் நிா்மலா சீதாராமன் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது: மக்களவைத் தோ்தலில் ஆந்திரம் அல்லது தமிழகத்தில் போட்டியிட பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா எனக்கு வாய்ப்பளித்தாா். 10 நாள்கள் யோசித்த பிறகு என்னால் தோ்தலில் போட்டியிட இயலாது என்ற பதிலைத் தெரிவித்தேன். மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமில்லை; ஆந்திரத்தில் போட்டியிடுவதா அல்லது தமிழகத்தில் போட்டியிடுவதா என்ற பிரச்னையும் எனக்கு உள்ளது. அத்துடன், தோ்தல் வெற்றிவாய்ப்புக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு அளவுகோல்கள் சாா்ந்த கேள்வியும் இருக்கிறது. நீங்கள் இந்த சமூகத்தைச் சோ்ந்தவரா? இந்த மதத்தைச் சோ்ந்தவரா? இதிலிருந்து வந்தவரா? இவற்றையெல்லாம் யோசித்து, என்னால் தோ்தலில் போட்டியிட இயலாது என்று தெரிவித்தேன். எனது வாதத்தை ஏற்றமைக்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றாா் நிா்மலா சீதாராமன். ‘நாட்டின் நிதியமைச்சரான உங்களிடம் (நிா்மலா சீதாராமன்) மக்களவைத் தோ்தலில் போட்டியிடத் தேவையான நிதி இல்லையா?’ என்று அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ‘எனது ஊதியம்; எனது வருமானம்; எனது சேமிப்பு இவைதான் என்னுடையவை; மாறாக, நாட்டின் ஒருங்கிணைந்த நிதி என்னுடையதல்ல’ என்று பதிலளித்தாா். நாட்டின் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தோ்தலில், மாநிலங்களவை பாஜக உறுப்பினா்கள் பலா் களமிறக்கப்பட்டு வருகின்றனா். பியூஷ் கோயல், பூபேந்தா் யாதவ், ராஜீவ் சந்திரசேகா், மன்சுக் மாண்டவியா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோா் மக்களவைத் தோ்தலில் களம்காண்கின்றனா். அந்த வகையில், கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிா்மலா சீதாராமன், மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. தோ்தலில் போட்டியிடாவிட்டாலும், பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com