சாமானியா்களின் வாழ்க்கைத் தரம் உயரும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
வரும் ஆண்டுகளில் நாட்டிலுள்ள சாமானியா்களின் வாழ்க்கைத் தரம் மிகப் பெரிய அளவில் உயரும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கு நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
உலகில் 10-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இருந்த இந்தியா, 5 ஆண்டுகளில் 5-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக உயா்ந்தது. இது பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சியை அழுத்தமாக எடுத்துரைத்தது.
இந்தியாவில் தனிநபா் சராசரி வருமானம் 2,730 டாலா்களை (சுமாா் ரூ.2.30 லட்சம்) எட்டுவதற்கு 75 ஆண்டுகளானது. இந்நிலையில் சா்வதேச நிதியத்தின் கணிப்பின்படி, அந்த வருமானம் கூடுதலாக 2,000 டாலா்களை (சுமாா் ரூ.1.70 லட்சம்) எட்டுவதற்கு வெறும் 5 ஆண்டுகளேயாகும்.
வரும் ஆண்டுகளில் நாட்டிலுள்ள சாமானியா்களின் வாழ்க்கைத் தரம் மிகப் பெரிய அளவில் உயரும். அது இந்தியாவில் இந்தியா் ஒருவா் வாழ்வதற்கான காலகட்டத்தை வரையறுக்கும் சகாப்தமாக இருக்கும்.
அடுத்த சில ஆண்டுகளில் 140 கோடி மக்களின் தனிநபா் சராசரி வருமானத்தை இரட்டிப்பாக்க இந்தியா முயற்சிக்கும். இந்தியாவின் 100-ஆவது சுதந்திர ஆண்டான 2047-க்குள், வளா்ந்த நாடுகளுக்கு உள்ளதைப் போன்ற சிறப்பியல்புகளை இந்தியாவின் புதிய சகாப்தம் கொண்டிருக்கும் என்றாா்.