இயக்குநர் சேரனின் மகள் தாமினி தன் விருப்பப்படி செல்லலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் தன் பெற்றோருடன் புதன்கிழமை வீடு திரும்பினார்.
சந்துரு என்ற இளைஞரை தான் காதலிப்பதாகவும், எனினும் தனது தந்தை சேரன் தங்கள் காதலுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தாமினி புகார் அளித்திருந்தார். சந்துரு நல்லவர் இல்லை என்றும், தனது மகளை அவர் நிர்பந்தப்படுத்தி தன் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார் என்றும் கூறி சேரன் ஒரு புகார் அளித்தார்.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் தாமினியை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர்.
இந்நிலையில் தாமினியை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறி சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தாமினி, காதலன் சந்துரு வீட்டுக்கு செல்ல தான் விரும்புவதாக நீதிபதிகளிடம் கூறினார். இதனை ஏற்காத சேரன் தரப்பினர், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடத்தாமல் நீதிபதிகள் தங்கள் அறையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து அன்றைய தினம் மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத் பாதுகாப்பில் அவரது வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மறுநாள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தங்கள் அறையில் விசாரணை மேற்கொண்டனர். மனுதாரர் ஈஸ்வரி அம்மாள், அவர் தரப்பு வழக்குரைஞர் சங்கரசுப்பு, தாமினி, சேரன், அவர் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ, ராஜா செந்தூர் பாண்டியன், அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் உள்ளிட்டோர் தனித்தனியாக நீதிபதிகள் முன் ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளைக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அதுவரை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ ஷ்ரைன் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் தாளாளரான திருமதி பி.கே.கே.பிள்ளையின் பாதுகாப்பில், அவரது வீட்டில் தாமினி தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தாமினி தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக நீதிபதிகளிடம் கூறினார். எனினும் இதற்கு மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கெனவே நடைபெற்ற விசாரணைகளின்போது சந்துரு வீட்டுக்கு செல்ல விரும்புவதாக கூறிய தாமினி, இப்போது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக மாற்றிக் கூறுகிறார். நிர்ப்பந்தம் காரணமாகவே தாமினி இவ்வாறு கூறுகிறார்.
ஆகவே, தாமினி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கான உண்மையான காரணம் குறித்து உரிய உளவியல் நிபுணர்களைக் கொண்டு சோதித்திட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
எனினும் அவரது முறையீட்டை நிராகரித்த நீதிபதிகள், தாமினி 18 வயதைக் கடந்தவர் என்பதால் தன் விருப்பப்படி தான் விரும்புபவருடன் செல்லும் உரிமை அவருக்கு உள்ளது. ஆகவே, அவரது விருப்பப்படி அவர் செல்லலாம் என்று உத்தரவிட்டனர். இதனையடுத்து தாமினி தன் பெற்றோருடன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிம் பேசிய இயக்குநர் சேரன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தாமினி தனது செயல்களை அலசி ஆராய்ந்து, தான் செய்த தவறுகளை உணர்ந்ததுடன், சந்துரு பற்றிய உண்மைகளையும் புரிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து பெற்றோரான எங்களுடன் வருவதென்ற முடிவை அவர் சுயமாக எடுத்து, இன்று எங்களிடம் வந்து சேர்ந்துள்ளார். இது பெற்றோருக்கு கிடைத்த வெற்றி. இந்த காலகட்டத்தில் எங்களுக்கு ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சேரன்.
இவ்வாறு கூறி முடித்தவுடன் நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை உயர்த்தி கும்பிட்ட சேரன், பின்னர் தரையில் விழுந்து வணங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோல்விக்குக் காரணம் இதுதான்... மனம் திறந்த தில்லி கேப்டன்!

ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்

லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம்!
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


