பாபநாசம் திரை விமர்சனம்

பாபநாசம் திரை விமர்சனம்

அண்மைக் காலமாக தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்கள் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அளவில் இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை.

அண்மைக் காலமாக தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்கள் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அளவில் இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. அந்தக் கணிப்பைப் பொய்யாக்கும் விதமாக, தரமான படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை திரையரங்கு நோக்கி ஈர்க்கவே செய்கின்றன. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாபநாசம் திரைப்படம், அத்தகைய ரகம்.
 ஏற்கெனவே மலையாளத்தில் "த்ருஷ்யம்' என்ற பெயரில் வெளியாகி, திரையரங்குகளில் பெரும் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் வடிவம்தான் என்றாலும், கமல் ரசிகர்களை படம் ஏமாற்றவில்லை.
 சிற்றூரான பாபநாசத்தில் வசிப்பவர் சுயம்புலிங்கம் (கமல்). அவரது மனைவி ராணி (கௌதமி). மகள்கள் செல்வி (நிவேதா தாமஸ்), மீனா (எஸ்தர் அனில்). 4-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கமல் கடும் உழைப்பில் உயர்ந்தவர்; உள்ளூரில் கேபிள் டி.வி. நடத்துகிறார். தீவிர சினிமா ரசனையின் மூலமாக, உலகியல் தொடர்பான அறிவையும் பெறுகிறார்.
 மகிழ்ச்சியான அவர்களது குடும்பத்தில், மகள் செல்வி மேற்கொள்ளும் சுற்றுலா மூலமாக இடி விழுகிறது. அப்போது படமெடுக்கப்பட்ட செல்வியின் அந்தரங்கத்தை வைத்து, அவரை பயமுறுத்துகிறார் பெரிய இடத்துப் பிள்ளையான வருண் பிரபாகர். அவரைச் சமாளிக்க செல்வியும், ராணியும் மேற்கொள்ளும் முயற்சிகள், எதிர்பாராத கொலையில் முடிகின்றன.
 இதனிடையே, பெண் ஐ.ஜி. கீதா பிரபாகரின் (ஆஷா சரத்) மகன்தான் இந்த வருண் என்பதால், அவரைப் பற்றிய தேடுதல் வேட்டை தீவிரமடைகிறது. விசாரணையில், சுயம்புலிங்கத்தின் குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பதுதான் கதை.
 தொடக்கத்தில் கிராம மக்கள், காவலர், தேநீர்க் கடை, குடும்பக் காட்சிகள் என்று ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை, கொலைக்குப் பிறகு மின்னல் வேகத்தில் பறக்கிறது. அதன் பின்னர், படம் முழுக்க விறுவிறுப்புக்குக் குறைவில்லை.
 மலையாள மூலக்கதையில் படத்தில் வரும் பாத்திரங்கள், ஊர்கள் தவிர மாற்றங்கள் பெரிதாக இல்லை. மலையாளத்தில் வந்த கதாபாத்திரங்களின் பெயர்கள், நெல்லை மாவட்டத்துக்கே உரிய தனித்தன்மையோடு மாற்றப்பட்டுள்ளன.
 குடும்பச் சூழலுக்கு படத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நல்ல குடும்பத்தில் வளர்க்கப்படுவதால் சுயம்புலிங்கத்தின் குழந்தைகள் கூட குடும்ப ரகசியங்களைக் காப்பதில் முத்திரை பதிப்பதும், வசதி வாய்ப்புகள் இருந்தும் நல்ல குடும்பச் சூழல் அமையாததால் தவறிழைக்கும் பெரிய இடத்து வாரிசு காரணமாக எழும் பிரச்னைகளும் துல்லியமாக அலசப்படுகின்றன. திரைப்பட ரசனையின் நன்மைகள், படத்தின் கதைப்போக்கிலேயே இடம்பெறுவது யதார்த்தம்.
 படத்தில் சில குறைகளும் காணப்படுகின்றன. காவல் துறைக்கு எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், ஐ.ஜி. மட்டும் புலனாய்வுக் கோணத்தைத் சொல்லும் காட்சி, அசல் சினிமாத்தனம். பார்த்துப் பார்த்து செதுக்கியும், படத்தின் சில இடங்களில் மலையாள நெடி. இறுதிக்காட்சிகளின் திருப்பு முனையில் திடீர் அவசரங்கள், திரைப்பட ரசனைக்கு சோதனை.
 மாற்று மொழிப் படம் என்றாலும், இயல்பான தமிழ்ப் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதில் திரைக்கதைக்கும், வசனங்களுக்கும் முக்கியப் பங்குண்டு. படத்தின் எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் தமிழ்த் தழுவலை எளிமையாக்கியுள்ளன. "அதுக்கெல்லாம் வேற ஆளப் பாரு', "ஊர்ல எல்லோரும் அவங்க செஞ்ச பாவத்தைத் தொலைக்க பாபநாசத்துக்கு வர்றாங்க. நான் செஞ்ச பாவத்துக்கு இந்த ஊரிலேயே இருந்து பாவத்தைப் போக்கிக்கறேன்', "நீ என்ன கருப்புச் சட்டைக்காரனா' போன்ற வசனங்களில் ஜெயமோகனின் நடை அழுத்தமாக எதிரொலித்திருக்கிறது.
 கமலின் நடிப்பை பற்றிக் கேட்கவே வேண்டாம். பாசமுள்ள தகப்பனாகவும், குற்றத்தை மறைத்ததற்காகக் குமுறுவதுமாக மனிதர் ஜொலிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகில் மீண்டும் கௌதமி, பாசமுள்ள தாயாக நன்றாக நடித்தாலும், கமலுடனான காட்சிகளில் யதார்த்தம் குறைவு.
 கமலின் மகள்களாக வரும் நிவேதா தாமஸும், பேபி எஸ்தரும் குறை சொல்ல முடியாத தேர்வு. அப்பா மீது பாசம் காட்டும் மகளாகவும், அயோக்கியனால் நடுங்கும் இளம்பெண்ணாகவும் மிளிர்ந்திருக்கிறார் நிவேதா. கதையின் திருப்புமுனையே பேபி எஸ்தர்தான். அவரது பயம் கலந்த பார்வையை மட்டுமே குறிப்பிட வேண்டும்.
 ஐ.ஜி கீதா பிரபாகராக நடித்திருக்கும் ஆஷா சரத்தும், அவரது கணவராகப் பாத்திரமேற்றிருக்கும் ஆனந்த் மகாதேவனும் கவனத்தை ஈர்க்கிறார்கள். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் காவல் அதிகாரியாகவும், மகனைக் காணாமல் தவிக்கும் தாயாகவும் வாழ்ந்திருக்கிறார் ஆஷா சரத்.
 காவலராக வரும் கலாபவன் மணி, டெல்லி கணேஷ், எஸ்.எம்.பாஸ்கர், அருள்தாஸ் என்று ஒரு பட்டாளமே நடிப்பு விருந்தைப் பரிமாறியிருக்கிறது. மலையாள மூலத்தை இயக்கிய ஜீது ஜோசப்தான் தமிழிலும் இயக்குநர். மூலக் கதை கெடாமல் படத்தை நகர்த்தியதற்காகவே அவரைப் பாராட்டலாம்.
 சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவில் பாபநாசத்தின் பசுமை மிளிர்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் பலம்; அது பாடல்களில் சரிவர எதிரொலிக்காதது பலவீனம்.எனினும், எல்லாக் குறைகளையும் அழுத்தமான கதைக்களமும், அழகான காட்சிகளும் ஈர்த்து விடுகின்றன. சிவாஜிக்கு ஒரு முதல் மரியாதை என்றால் கமலுக்கு ஒரு பாபநாசம்!
 படம் முடிந்து வெளியே வரும்போது நம்மை அறியாமல் ஏற்படும் சிந்தனை- ""இந்தப் படத்தில் ரஜினி நடித்திருந்தால்?''

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com