சுடச்சுட

  

  சாந்தகுமாரின் ‘மகாமுனி’ - திரை விமர்சனம்

  By -சுரேஷ் கண்ணன்  |   Published on : 07th September 2019 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mahamunifilm2

   

  ‘மெளனகுரு’ என்கிற அசத்தலான முந்தைய படைப்பு, ‘மகாமுனி’யை உருவாக்க இயக்குநர் எடுத்துக்கொண்ட எட்டு வருடம், ஆவலை அதிகப்படுத்தின இதன் ட்ரைலர் போன்ற விஷயங்கள் இந்தத் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன.

  இயக்குநர் சாந்தகுமார் அதிக ஏமாற்றத்தைத் தராதது ஒரு பக்கம் ஆறுதலான விஷயம் என்றாலும், ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்து முடித்த மனநிறைவைத் தராதது இன்னொரு பக்கம் ஏமாற்றமே.

  ‘முன்வினைப்பயனின் தொடர்ச்சியை ஒருவர் அனுபவித்தே ஆக வேண்டும்’ என்பதுதான் இந்த திரைப்படத்தின் மையம் எனலாம். ஒருவர் செய்யும் தீமைகள், அவருக்குத் தொடர்புள்ளவர்களின் தலையில் பிற்பாடு வந்து விடிகிறது என்பதையே இந்தத் திரைப்படம் வெவ்வேறு காட்சிகளின் வழியாக நிறுவுகிறது.

  ‘மிருகங்களாக இருந்த மனிதகுலம் பகுத்தறிவின் மூலம் நாகரிகத்தை நோக்கி நகர்கிறது. அந்தப் பயணத்தில் உருவாகும் எதிர்மறைகளால் அவர்கள் மிருகங்களைவிடவும் மோசமாகிப்போகிறார்கள்’ என்பதுதான் இந்தத் திரைப்படம் சொல்லும் செய்தியாகச் தோன்றுகிறது.

  **

  இரண்டு கதைகள். ஒன்று, காஞ்சிபுரத்தில் வசிக்கும் மகா என்கிற மகாலிங்கத்தைச் சுற்றி நிகழ்கிறது. இன்னொன்று, ஈரோட்டில் வசிக்கும் முனி என்கிற முனிராஜைச் சுற்றி நடக்கிறது. இந்த இரண்டு புள்ளிகளும் சந்திக்கும் பயணத்தை மெல்லப் படர்ந்து உடம்பில் ஏறும் பாம்பின் விஷத்தைப்போல் நிதானமான திரைக்கதையின் மூலம் விவரித்துள்ளார் இயக்குநர்.

  இந்தப் பாணியிலான திரைக்கதை ஒருவகையான ருசியைத் தருகிறது என்றாலும் இந்த சாவகாசமே சமயங்களில் சலிப்பையும் ஏற்படுத்துகிறது.

  மதராசபட்டிணம், நான் கடவுள், அவன் இவன் போன்ற திரைப்படங்களின் வரிசையில் ஆர்யாவின் நடிப்பு மிகச்சிறந்த அளவில் வெளிப்பட்ட திரைப்படமாக ‘மகாமுனி’ நிச்சயம் அமையும். இரண்டு பாத்திரங்களுக்கும் தோற்ற அளவில் பெரிதும் வித்தியாசம் இல்லையென்றாலும் உடல்மொழியிலும் தேர்ச்சியான நடிப்பிலும் கணிசமான வித்தியாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்யா. இவரிடமிருந்து உழைப்பை வாங்கிய இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும்.

  **

  முனி பாத்திரத்தைவிடவும் ‘மகா’ பாத்திரத்தில் அதிகம் பிரகாசித்துள்ளார் ஆர்யா. டாக்ஸி டிரைவராக பணிபுரியும் இவர், அதற்கு முன்னால் அரசியல் கொலைகளுக்கு கச்சிதமான திட்டத்தை வகுத்துத் தரும் நிழலான பணியில் இருந்திருக்கிறார். அதன் பின்விளைவுகள் இவரைத் துரத்தி வருகின்றன. இவரின் தீவினை பிற்பாடு இன்னொருவரின் தலையில் சென்று விடிகிறது.

  மகாவின் மனைவி விஜியாக நடித்திருக்கும் இந்துஜாவின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. சில இடங்களில் செயற்கை தெரிந்தாலும் ஒரு சராசரியான மனைவியின் அன்பையும் தவிப்பையும் பல காட்சிகளில் மிகச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். மகாவின் தீவினைகளுக்கு பலியாகும் இன்னொரு அப்பாவி பாத்திரம்.

  மகாவின் சித்திரம் எதிர்மறைகளால் நிறைந்திருக்கும்போது முனியின் பாத்திரம் நேர்மறைகளால் நிரம்பியிருக்கிறது. ‘விவேகானந்தர்’தான் இவரது ஆதர்சம். ஏழைக் குழந்தைகளுக்கு கற்பிப்பது, விதைப்பந்துகளை வீசுவது, சுற்றுச்சூழல் குறித்து அக்கறை கொள்வது என்று நல்லியல்புகளால் நிறைந்திருக்கும் நபர் இவர்.

  மகாவின் நற்குணங்களைக் கண்டு அவர் மீது ஈர்ப்பு கொள்ளும் ஜர்னலிஸ மாணவியாக மகிமா நம்பியார். கருப்பு உடை அணிந்து வித்தியாசமான ஒப்பனையில் வசீகரமாக இருக்கிறார். ஆனால் இவரது பாத்திரம் ஒரு கட்டத்தில் துண்டாகி தொலைந்துவிடுகிறது.

  இளவரசு திறமையான நடிகர் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அவருக்கு கொடூரமான அரசியல்வாதி என்கிற பாத்திரம் ஏனோ ஒட்டவே இல்லை. என்றாலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் அந்தக் குறையை சமன் செய்ய முயற்சித்துள்ளார் இளவரசு. (சமீபத்தில் சூர்யா நடித்து வெளியான NGK-ல் இவருக்கு இதே மாதிரியான பாத்திரம் என்பது நினைவுக்கு வருகிறது).

  ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், காளி வெங்கட், பாலாசிங், ஜி.எம்.சுந்தர் போன்ற நடிகர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

  **

  படத்தின் துவக்க காட்சியில் ஓரிடத்தில் காட்டப்படும் “ஐந்தாண்டு நினைவு அஞ்சலி போஸ்டர்’ முதற்கொண்டு பல இடங்களில் படத்தின் நுண்விவரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. பால்ய நண்பனாக இருந்தாலும்கூட அவனிடம் அசந்தர்ப்பமான நேரத்திலும் பணபேரம் பேசும் போலி மருத்துவர் பிறகு ஒரு செய்தியாக பத்திரிகையில் வந்து முடிவது போன்று திரைக்கதையின் பல நுண்பகுதிகள் ரசிக்கவைக்கின்றன.

  ஆனால், கருவேலமரம், பிளாஸ்டிக் பை, ஆங்கிலக் கல்வியின் மோகம், இயற்கை விவசாயம் போன்று ஆங்காங்கே வரும் பிரசாரங்கள் தொடர்பில்லாமல் துருத்திக்கொண்டு நெளியவைக்கின்றன.

  கலவரத்தில் பிரியாணி அண்டாவைத் தூக்கிக்கொண்டு ஓடுவது, எதிர்க்கட்சி பேச்சாளரின் அவதூறுகள் தன் வீட்டில் வாசலின் ஸ்பீக்கரில் விழுவதை ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்கிற சகிப்புத்தன்மையோடு கடந்து சொரணையில்லாமல் இளவரசு உணவருந்துவது, அவருடைய மனைவியின் ஆங்காரம் போன்ற இயல்பான காட்சிகள் ரசிக்கவைக்கின்றன.

  மகாவின் அடக்கமான நடிப்பு ஒரு பக்கம் கவர்ந்தாலும், அரசியல் கொலைகளை கச்சிதமாக திட்டமிடும் ஒரு நபர், இத்தனை ‘கோயிஞ்சாமி’யாகவா இருப்பார் என்கிற கேள்வியை பல காட்சிகள் எழுப்புகின்றன. ‘டெம்போல்லாம் வெச்சு கடத்தியிருக்கோம். பார்த்து போட்டு கொடுங்கப்பா’ என்கிற அளவுக்கு இந்தப் பாத்திரம் சென்றுவிடுகிறது. போலவே பாம்பை கடிக்கவைத்து கொலை செய்யும் பயங்கர சதித்திட்டமெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

  இந்தத் திரைப்படத்தின் பெரும்பலங்களுள் ஒன்றாக அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவைச் சொல்லலாம். மனநல காப்பகத்தின் துவக்கக் காட்சி முதற்கொண்டு ஓர் அற்புதமான பறவைக்கோணத்தில் ஆர்யா நீந்திச் செல்லும் இறுதிக் காட்சி வரை பல இடங்களில் அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

  இரட்டை வேடம், காட்சிகளில் ஆங்காங்கே நிகழும் தவளைப் பாய்ச்சல், பூடகமான பின்னணிகள் போன்றவையால் இதன் திரைக்கதை நிறைந்திருந்தாலும் இந்தத் திரைப்படம் குழப்பமில்லாமல் புரிவதற்கு சாபு ஜோசப்பின் எடிட்டிங் உறுதுணையாக இருந்திருக்கிறது. பாடல்களில் கவராவிட்டாலும் அசத்தலான பின்னணி இசையில் ஜொலிக்கிறார் எஸ்.தமன்.

  **

  ‘‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி, பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி’’ என்கிற திரையிசைப் பாடலை இந்தத் திரைப்படம் நினைவுப்படுத்துகிறது. ‘பெத்தவங்க செஞ்ச பாவம், பிள்ளைங்க தலையிலதான் வந்து விடியும்’ என்பது ஒருவகையான கற்பிதம் என்றாலும், மனிதகுலம் ஆதாரமான அறங்களுடன் இயங்குவதற்கு இதுபோன்ற நம்பிக்கைகள்தான் உறுதுணையாக இருக்கின்றன.

  தன் இரண்டு பிள்ளைகளைத் தவிக்கவிட்டு மனநலம் பிறழ்ந்து மறையும் தாயின் பின்னணி பூடகமாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தப் பிள்ளைகளின் தந்தை செய்த தீவினைகள்தான் இவர்களின் தலையில் வந்து விடிந்திருக்கிறதோ, என்னமோ.

  நன்மை மற்றும் தீமையின் உருவகங்களாக முனி மற்றும் மகாவின் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. நன்மையின் குறியீடு பலியிடப்படுவதின் மூலம் தீமையானது மனம் திருந்தி நன்மையாக உருமாறுவதைத்தான் இந்தத் திரைப்படம் சொல்ல வரும் செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும்போல.

  படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் ‘ஆர்யா’ யார் என்கிற சஸ்பென்ஸ்தான் இறுதிவரைக்கும் படத்தைக் காண்பதற்கு உதவியாக இருக்கும் ஒரு புள்ளி. இந்த சஸ்பென்ஸை இறுதி வரை அப்படியே விட்டிருந்தால் அது வித்தியாசமான கிளைமாக்ஸாக அமைந்திருக்கலாம். ஆனால் எந்த நிர்ப்பந்தத்தினாலோ, வாய்ஸ் ஓவரின் துணையுடன் படம் வரைந்து பாகம் குறித்து சொதப்பியிருக்கிறார் இயக்குநர்.

  அலைபாய்தல்கள், தடுமாற்றங்கள் போன்றவற்றைத் தவிர்த்து ஒரு கச்சிதமான ஆக்கமாக அமைந்திருந்தால் இந்தத் திரைப்படம் தமிழில் ஒரு முக்கியமான படைப்பாக அமைந்திருக்கும். அதை இயக்குநர் தவறவிட்டிருப்பது துரதிர்ஷ்டமானது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai