தாய்ப் பாசம் கை கொடுத்ததா? ஜே பேபி திரை விமர்சனம்

இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஜே பேபி திரைப்படம் தாய் பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது.
ஜே பேபி திரைப்படத்தில் நடிகர்கள் ஊர்வசி, மாறன், தினேஷ்
ஜே பேபி திரைப்படத்தில் நடிகர்கள் ஊர்வசி, மாறன், தினேஷ்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஜே பேபி திரைப்படம் தாய் பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. தமிழில் அம்மா எனும் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்தத் திரைப்படங்களில் தாய் எனும் கதாபாத்திரங்கள் துணை கதாபாத்திரங்களாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிலிருந்து வேறுபட்டிருக்கிறது ஜே. பேபி.

குடும்பப் பிரச்னையால் மன உளைச்சலுக்கு உள்ளான பேபி (ஊர்வசி) தொலைந்து விடுகிறார். அவர் மேற்குவங்கத்தில் இருப்பதை காவல்துறையின் மூலம் அறிந்துகொள்ளும் செல்வமும், சங்கரும் (தினேஷ், மாறன்) தங்களது தாயை மீட்டுக் கொண்டு வருவதற்காக கொல்கத்தா பயணமாகின்றனர். குடும்பப் பிரச்னையால் பேசிக் கொள்ளாமல் இருக்கும் செல்வமும், சங்கரும் எப்படி இணைந்து தாயை மீட்கச் சென்றனர்? தாய் பேபி மீட்கப்பட்டாரா இல்லையா? என்பதே பேபி திரைப்படத்தின் கதை.

படத்தின் தொடக்கத்திலேயே இது உண்மைக் கதை என சொல்லப்பட்டு விடுகிறது. அதுவே கதையை லாஜிக் கணக்குகளுக்குள் சிக்காமல் இருக்க உதவி செய்திருக்கிறது.

எளிமையான கதைக்களம். அதனாலேயோ என்னவோ படத்தில் ஆடம்பரம் என எதுவும் இல்லை. கதை அதன்போக்கில் மெல்ல நகர்கிறது. ஒரு குடும்பத்தின் சிக்கல்கள், சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவை நம்மையும் கதைக்கு நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. முதல்பாதி முழுக்க பெரிதாக வராமல் கதையின் ஓட்டத்தில் பெயராக மட்டும் வருகிறார் ஊர்வசி. எவ்வளவு கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அவர் என்பதை திரையில் காணும்போது நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். மனநல பாதிப்புக்குள்ளான தாயாக அவர் நடந்துகொள்ளும் இடங்கள் திகைப்பை ஏற்படுத்துகின்றன. தனது மகன்களுக்கு தொந்தரவாக இருப்பதாக வருந்தும் இடங்களிலும், மனநல காப்பகத்தில் கேட்பாரற்று தவிக்கும் இடங்களிலும் மிரட்டியிருக்கிறார் ஊர்வசி.

காலம் எப்படிப்பட்ட நடிகையை கொடுத்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது. எந்த மிகைப்படுத்தலும் இல்லாத அவரது நடிப்பு இரண்டாம் பாதியை சுவாரஸ்யமாக வைத்திருக்க உதவியிருக்கிறது. ஊர்வசி ஒருபுறம் என்றால் அண்ணன் தம்பியாக வந்திருக்கும் மாறனும், அட்டகத்தி தினேஷும் மறுபுறம். இருவரின் பின்னேதான் கதை நகர்கிறது. எனவே கூடுதல் பொறுப்பு அவர்கள் இருவர் மீதும்தான். அதை உணர்ந்து கலக்கியிருக்கிறது அக்கூட்டணி.

சாராயத்தைக் குடித்துவிட்டு சண்டைபோடும் இடங்களில் நம்மையே ஆத்திரமூட்ட வைத்தாலும் தனது திருமணம் நின்றதை விவரிக்கும் இடங்களில் கலங்கச் செய்துவிடுகிறார் மாறன். அட்டகத்தி தினேஷ் அதிகம் கவனிக்கப்படாத கலைஞராக இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எவ்வளவு தனித்துவமாக இருக்கின்றன என்பதை நாம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அட்டகத்தி, குக்கூ, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, விசாரணை என அவரது படங்கள் அனைத்தும் கொண்டாடப்பட்டவை. இந்தத் திரைப்படத்திலும் அவரது நடிப்பு பேசப்படும்.

தனது தாயை அடித்து விட்டதாக அவர் உடையும் இடங்களில் நம்மையும் அழவைத்துவிடுகிறார். சராசரி குடும்பஸ்தன் அனுபவிக்கும் அவஸ்தைகளை கண்முன் காட்டியிருக்கிறது அவரது தத்ரூபமான நடிப்பு. இறுதிக் காட்சிகளில் அவரது கண்களில் தெரியும் மகிழ்ச்சி அலாதியாக இருக்கிறது. இவர்களைத் தவிர மேற்குவங்கத்தில் இவர்களுக்கு உதவுபவராக ஒருவர் நடித்திருக்கிறார். உண்மை சம்பவத்தில் உதவிய அதே நபரை திரையிலும் நடிக்க வைத்ததை பாராட்டியே ஆக வேண்டும். கிளைமேக்ஸ் காட்சிகளில் அவர் அழும் இடங்களைப் பார்த்து பார்வையாளர்களால் அழாமல் திரையரங்கை விட்டு வெளியில் வர முடியாது.

மனிதர்களுக்குள் இருக்கும் சின்னச்சின்ன கோபங்களும், முரட்டுத்தனங்களும் எவ்வளவு அர்த்தமற்றது என பேசியிருக்கிறது பேபி. பொருளியல் தேவைகளைக் கடந்து மனிதர்களுக்கு பகிர்ந்து கொள்ளப்படும் பரஸ்பர அன்பு மட்டுமே அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு. அதை உயிரோட்டமாக திரையில் கடத்த முயற்சித்து காட்டியிருக்கிறார் இயக்குநர்.

உண்மைக் கதை என்பதால் தேவையற்ற காட்சி அமைப்புகளை வைத்து குழப்பாமல் தவிர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதற்கேற்ப பின்னணி இசையும், படத்தொகுப்பும் கூடுதல் மெனக்கெட்டிருக்கலாம். ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையில் வரும் மாற்றங்கள் சீரியல் தனங்களை உண்டாக்குகின்றன. படத்தொகுப்பாளர் அவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

முதல் பாதியிலேயே கதையின் முடிவு தெரிந்துவிட்ட பிறகு இரண்டாம் பாதியில் காட்டப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டவையாக மாறும் அபாயம் இருக்கிறது. திரைக்கதையில் சின்னச் சின்ன சறுக்கல்கள் இருந்தாலும் படத்தின் இறுதிக் காட்சியில் அதை ஈடுகட்டி வென்றுவிட்டார் இயக்குநர்.

ஜே பேபி கலங்கவைக்கும் திரைமுயற்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com