
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் முதன்மை கதாபாத்திரமேற்று நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் வெளியான 11 நாள்களில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(ஏப். 6) தெரிவித்துள்ளது.
மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான எந்தவொரு படமும் இதுவரை ரூ.250 கோடி வசூலை எட்டியதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மலையாள மொழிப் படங்களில் வரலாற்று சாதனையாகவே எம்புரான் வசூல் பார்க்கப்படுகிறது.
லூசிஃபெர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் படமாக்கப்பட்டுள்ளது. அரசியல் பின்புல திரைக்கதையில் வெளியான லூசிஃபெர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில், எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன் உள்பட பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் குஜராத் மத கலவரத்தைப் பிரதிபலிப்பதைப்போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால், வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, எம்புரானில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.