

தனது இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள 'காற்று வெளியிடை' திரைப்படம் ஒரு பீரியட் பிலிம் என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி, நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி விபரம் வருமாறு:
'காற்று வெளியிடை' திரைப்படமானது எனது அன்றாட வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட மனிதர்களின் கதைதான். இதில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களாகவோ அல்லது நீங்கள் சந்தித்தவர்களாகவோதான் இருப்பார்கள். எனவே அபப்டியே முழுமையாக இல்லாவிட்டாலும், நிஜ வாழக்கை சம்பவங்களின் பாதிப்பு இதில் கண்டிப்பாக இருக்கும். சில சமயங்களில் நமது இயக்குனர்கள் அதிக அளவில் நிஜ வாழ்க்கை சம்பவங்களில் இருந்து கதைகளை உருவாக்குகிறார்கள். நீங்கள் சீரான அளவில் பல்வேறு தளங்களில் இருந்து கதைகளை உருவாக்க வேண்டும்.
காற்று வெளியிடை சமகாலத்தைப் பற்றி பேசும் ஒரு படம் அல்ல. இந்திய விமானப் படை வீரர் ஒருவர் பற்றிய, 1990-களைப் பின்னணியாக கொண்ட ஒரு 'பீரியட் பிலிம்'. அநேகமாக இது தீவிரமான, மனித உறவுகளுக்கு இடையேயான உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைப் பேசும் படமாகும்.
என்னைப்பொறுத்த வரை பொதுவாக ஒரு கதையை தேர்தெடுக்க வேண்டுமானால் அடிப்படையாக ஒரு உண்மைத்தன்மை இருக்க வேண்டும். அதை அடிப்படையாக கொண்டு பார்வையாளர்களுடன் எதோ ஒரு விதத்தில் என்னால் தொடர்பு படுத்திக்க கொள்ள முடி யும் என்று தோன்றினால் மட்டும்தான்,நான் அந்த கதையில் தொடர்ந்து வேலை செய்வேன். உதாரணமாக 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்திற்கு அடிப்படையாக இருந்தது வார் இதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரைதான்.
அவரது படங்களில் தொடர்ந்து சூரியன் மற்றும் மழை தொடர்பான காட்சிகள் இடம்பெறுவது தொடர்பான கேள்விக்கு கதையை கூறுவதற்கு அவை பெரிதும் உதவுவதாக தெரிவித்தார். எனக்கு காற்று கூட மிகவும் பிடிக்கும். இவை எல்லாம் ஒரு இயக்குனருக்கு பெரிய கருவிகள். இவை ஒரு குறிப்பிட்ட சக்தியை, குறிப்பிட்டஉணர்வை, குறிப்பிட்ட காட்சி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகின்றன.
இவற்றின் மூலமாக ஒரு கதையை, கதாபாத்திரங்களின் உள்ளே நடைபெறும் உணர்ச்சிகளின் போராட்டங்களை, வெளியே இருக்கின்ற இயற்கையின் பகுதிகளான காலநிலை வழங்கக் கூடிய காற்று, மழை மற்றும் வெயில் வழியாக கூறலாம்.நிலப்பிரதேசங்கள் கூட அதற்கு உதவுகின்றன.
வழக்கமாக அவரது படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்கள் இடம்பெறுவது பற்றி கூறிய பொழுது, 'நான் பொதுவாக பெண்களை மையப்படுத்திய கதையை எழுத வேண்டும் என்று எழுத அமர்வதில்லை. வழக்கமான நமது படங்களில் கூட வெறுமனே தட்டையான ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்காமல், ஒரு நிஜமான, உணர்ச்சிகளுடன் கூடிய, நிஜத்திற்கு நெருக்கமான பாத்திரத்தை உருவாக்கினால் அதுவே போதுமானது. அதுதான் எனக்கு மகிழ்ச்சி. அது போன்ற பெண் கதாபாத்திரங்களை கொண்ட பெண் மைய படங்களை நான் உருவாக்கியிருக்கிறேன். உதாரணமாக 'ரோஜா', 'அலைபாயுதே', மவுனராகம்', ஏன் இப்பொழுது வெளியாகவுள்ள 'காற்று வெளியிடை' கூட பெண்களை மையமாக கொண்ட கதைதான்.அவர்கள்தான் இந்த படங்களை நகர்த்தி செல்கிறார்கள்.
இறுதியாக தனது அடுத்த பட படம் ஒரு 'கேங்ஸ்டர்' படம் என்று உலவி வரும் தகவல்களை அவர் வெறும் புரளி என்று உறுதியாக மறுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.