புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விவேகம் படத்தைக் கடுமையாக விமரிசித்தவர் மீது நடவடிக்கை எடுக்க ராகவா லாரன்ஸ் கோரிக்கை!

படங்களை விமரிசிக்க அவருக்குத் தகுதியில்லை. குழுவினரின் கடின உழைப்பைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை கூறவில்லை...

News image
Updated On :26 ஆகஸ்ட் 2017, 11:08 am

எழில்

அஜித் நடித்துள்ள விவேகம் படத்தை யூடியூப் தளத்தில் கடுமையாக விமரிசனம் செய்தவர் மீது திரைப்படச் சங்கங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது. 

தன்னுடைய யூடியூப் தளத்தில் விவேகம் படத்தைக் கடுமையாக விமரிசனம் செய்திருந்தார் ‘ப்ளூசட்டை’ மாறன். இந்நிலையில் அவருடைய விமரிசனத்துக்குக் கண்டனம் தெரிவித்து கோலி சோடா படப்புகழ் இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: படம் எடுப்பது என்பது குழந்தையைப் பெற்றெடுப்பது மாதிரி. நல்லபடியாகப் பெற்றெடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் எல்லோரும் போராடுகிறோம். 100 சதவிகித முயற்சியை அளிக்கிறோம். விவேகம் கதை சொல்ல வெட்கப்படுகிறாயா, அவர்களே வெட்கப்படாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் விமரிசனம் செய்வது தவறு. வெட்கப்படுவதற்கும் வேதனைப்படுவதற்குமா ஒன்றரை வருடம் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்? இது அஜித்தும் சிவாவுக்கும் தெரியாதா? சினிமாவை நம்பி நாங்களும் வியாபாரம் செய்கிறோம். நீங்களும் அதே வியாபாரம் செய்கிறீர்கள். காயப்படுத்தும் வார்த்தைகளை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவேண்டும். எது சரி, எது தவறு, நீங்கள் இப்படி எடுத்திருந்தால் என ஒரு வார்த்தை அந்த விமரிசனத்தில் உண்டா? என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியதாவது:

அஜித் சார் நடித்துள்ள விவேகம் படத்தைப் பார்த்தேன். கடின உழைப்புக்கு என் பாராட்டுகள். இந்தப் படத்தின் அனைத்து விமரிசனத்தையும் படித்தேன். பெரும்பாலும் படத்தின் சாதகபாதக அம்சங்களைப் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் ப்ளூசட்டை மாறனின் விமரிசனம் என்னைக் காயப்படுத்தியது. படத்தில் பல அற்புதமான காட்சிகளும் அருமையான ஷாட்களும் உள்ளன. ஆனால் அவற்றைப் பற்றியும் குழுவினரின் கடின உழைப்பைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை கூறவில்லை. அது பட விமரிசனம் போலத் தெரியவில்லை. ஒரு நடிகர் மற்றும் அவர் ரசிகர்கள் மீதான தனிப்பட்டத் தாக்குதலாகவே உள்ளது. 

திரைப்படச் சங்கங்களும் பொறுப்பில் இருப்பவர்களும் இந்த ப்ளூசட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். திரைத்துறையில் எடுக்கப்படும் படங்களை விமரிசிக்க அவருக்குத் தகுதியில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.