இன்று வெளிவந்துள்ள 3 முக்கியமான படங்கள்!

இந்தப் படம், என் மீது அன்பு செலுத்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்...
இன்று வெளிவந்துள்ள 3 முக்கியமான படங்கள்!
Updated on
2 min read

தொண்டன், பிருந்தாவனம் ஆகிய இரு தமிழ்ப் படங்கள் இன்று வெளியாகியுள்ளன. இந்த இரு படங்களுக்கும் தமிழக அரசின் வரிச்சலுகை கிடைத்துள்ளது. இதுதவிர சச்சின் - பில்லியன் ட்ரீம்ஸ் படமும் வெளியாகியுள்ளது.

அப்பா படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, நடிக்கும் படம் "தொண்டன்.' சுனைனா, சூரி, விக்ராந்த், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்கள். 

படம் குறித்து சமுத்திரக்கனி கூறியதாவது: தொண்டன் என்ற தலைப்பைப் பார்த்து விட்டு, இது அரசியல் படமா? என்று கேட்கிறார்கள். இதில் அரசியல் துளியும் கிடையாது. பிறருக்கு உதவி செய்கிற யாவருமே தொண்டன் என்பதை களமாக கொண்டு, இக்கதையை எழுதியுள்ளேன். எனக்கு நாளிதழ் செய்திகளை ஒரு வரி கூட விடாமல் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படிப் படித்துக் கொண்டிருந்த போது கரூரில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அங்கு ஒரு கல்லூரியில் உள்ளே நுழைந்த ஒருவன் 60 மாணவ, மாணவர்கள் நிரம்பிய வகுப்பறையில் புகுந்து ஒரு மாணவியின் தலையில் கட்டையால் தாக்கியிருக்கிறான். அதை ஒருவர் கூடத் தடுக்கவில்லை. அப்படி ஒருவர் துணிச்சலாகத் தடுத்து இருந்தால் கூட அந்த மாணவி இன்று உயிருடன் இருந்து இருப்பார். அந்தச் சம்பவத்தை இதில் ஒரு காட்சியில் வைத்து இருக்கிறேன். மற்றபடி இது நிஜமும், கற்பனையும் கலந்து மனித உணர்வுகளைப் பேசக்கூடிய படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அப்பா ஹிட் படத்துக்குப் பிறகு வெளியாகும் சமுத்திரக்கனி படம் இது.

அருள்நிதி, விவேக், தன்யா நடிக்கும் பிருந்தாவனம் படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். இசை, விஷால் சந்திரசேகர். இயக்குநர் ராதாமோகனின் படம் என்பதால் இப்படம் மீது அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. மொழி படத்தில் ராதாமோகன் உண்டாக்கிய மேஜிக் அவருடைய அடுத்தடுத்த படங்களில் தென்படவில்லை. இந்தப் படத்தில் அது நிகழுமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

'சச்சின்: ஏ பில்லியன் டிரீம்ஸ்' - சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படம். ஜேம்ஸ் ஏர்ஸ்கின் இயக்கியுள்ள இந்தப் படத்தை, 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசை - ஏ.ஆர். ரஹ்மான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. 

சச்சினின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் சச்சின், கங்குலி, வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குறிப்பாக, சிறு வயது சச்சினாக நடித்துள்ளது, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.

இந்தப் படம் குறித்து பேசியுள்ள சச்சின், "இந்த சினிமா, என் வாழ்க்கையில் நான் அனுபவித்த மிக முக்கிய கணங்களை மீண்டும் அசைபோடவைத்தது. நான் மிகவும் தனிமையான மனிதன். ஆனால், என் வாழ்க்கைக்கும் என் கிரிக்கெட் பயணத்துக்கும் துணையாக பலரை, குறிப்பாக ரசிகர்களைப் பற்றி நான் தெரியப்படுத்தியதோ அல்லது பேசியதோ இல்லை. ஆனால், இந்த சினிமா மூலம் அதைச் செய்திருக்கிறேன். இந்தப் படம், என் மீது அன்பு செலுத்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com